ஞாயிறு கொண்டாட்டம்

கழிவில் உருவான அழகோவியங்கள்!

புதுச்சேரி எல்லைக்கு உட்பட்ட  "சேலியமேடு'  வாணிதாசனார்  அரசு உயர்நிலைப்  பள்ளி மாணவர்கள் வீணாகும் தென்னை, பனை, வாழை மரங்களின் உலர்ந்த இலை,  பூ. மட்டைகளைப்  பயன்படுத்தி  "அழிவின்

பிஸ்மி பரிணாமன்


புதுச்சேரி எல்லைக்கு உட்பட்ட "சேலியமேடு' வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வீணாகும் தென்னை, பனை, வாழை மரங்களின் உலர்ந்த இலை, பூ. மட்டைகளைப் பயன்படுத்தி "அழிவின் உயிர்ப்பு' என்ற பெயரில் அசத்தும் கைவினைப் பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.

பட்ட மரத்தில் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விதமாகக் கலைநயத்துடன் பரவி நிற்கும் "வண்ண மரம்' மாணாக்கர்களின் கனவுகளுக்கும், முயற்சிக்கும், உழைப்பிற்கும் சாட்சியம் சொல்கிறது. பயிற்சிப் பட்டறையில் மாணவ மாணவிகள் உருவாக்கும் வித்தியாசமான கலைப்படைப்புகள் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

பள்ளியில் நிரந்தரமாகச் செயல்படும் கலைக் கண்காட்சியைப் பார்க்க உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து செல்கின்றனர். இந்தக் கலை முயற்சிக்குப் பின்னணியில் உந்து சக்தியாக இருப்பவர் பள்ளியின் ஓவிய ஆசிரியர் உமாபதி.
இவரது திட்டமான "அழிவின் உயிர்ப்பு' எப்படி உருவானது, எப்படிச் செயல்படுகிறது என்பதை உமாபதி விளக்குகிறார் :

""மனித சமுதாயத்தின் உன்னத நிலை கலை உணர்வு தான். அந்த உணர்வுகள், ஓவியம், சிலை, கலை வடிவங்கள் உருவாக்குவதில் வெளிப்படும். நான் நுண்கலை ஆசிரியராக 11 ஆண்டுகளாகப் பணி புரிகிறேன். தொடக்கத்தில் மாணவ மாணவிகளிடத்தில் ஓவியம் வரைவதில் பயிற்சி கொடுத்தேன். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அதன் பிறகுதான் தென்னை, பனை, வாழை மரங்களின் வீணாகும் கழிவுப் பொருள்களான மட்டைகள், தேங்காய் நார்கள், பூக்கள், பாக்கு மடல், மூங்கில், தேங்காய் குறும்பி, காய்ந்த இலைகள் போன்றவைகளைக் கொண்டு பாவைகள் செய்யத் தூண்டினேன்.

வாழ்நாள் முடிந்த மின்விளக்குப் பல்புகள், கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு லாந்தர் விளக்குகளை வடிவமைத்தேன். அதில் பேட்டரிகளைப் பொருத்தி சிறிய பல்புகளைப் பிரகாசிக்கச் செய்தேன். 10 ஆயுள் முடிந்த குண்டு பல்ப் கொடுத்தால் ஒரு லாந்தர் விளக்கு இலவசமாகத் தருவோம். "நெகிழி' பொருள்களுக்கு எங்கள் கலைவடிவத்தில் இடம் தருவதில்லை.

சுரைக்காய் கூடுகளில் மின் விளக்குகள், கொக்குகள், என்று பல வடிவங்களை மாணவர்களைக் கொண்டு வடிவமைக்கச் செய்தேன். இந்த முயற்சி மாணவ மாணவிகளிடம் சரிவர போய்ச் சேர்ந்தது. மாணவர்களின் கைவினைக் கலைப் படைப்புகளை வைத்து கண்காட்சிகளை நடத்தினேன். பொது மக்களிடம் வரவேற்பு கிடைக்க, எங்களது முயற்சிகள் புதுவை அரசின் கல்வித் துறையின் கவனத்தைச் சென்று அடைந்தது. ஓவிய வகுப்பு நேரத்தில் மட்டுமல்லாமல் ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு மாலை நேரத்திலும், விடுமுறை நாள்களிலும் கைவினை வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி தந்து உற்சாகப்படுத்தினார்கள்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் வகுப்பு நடைபெறவில்லை . ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் அதிகாரிகளின் அனுமதியுடன் ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்குக் கைவினை வகுப்புகள் எடுத்தேன். "ஆலம்' தொண்டு நிறுவனம் கேட்டுக் கொண்டதின் பெயரில், மேலிட அனுமதியுடன் விருப்பம் உள்ள "சேலியமேடு' மக்களுக்கும் கலைவடிவங்களை உருவாக்கும் பயிற்சி கொடுத்தேன். எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் இளம் கலைஞர்கள் பலர் நுண்கலைக் கல்லூரியில் படித்து வருகிறார்கள். மாணவர்கள் உருவாக்கிய கலைப் பொருள்களை காமிரா மூலம் படம் எடுப்பதும் மாணவர்கள்தான்.

கலை வடிவங்களை உருவாக்குவதைத் தொழிலாகக் கொண்டு பொருள் ஈட்டவும் மாணவர்களுக்கு நம்பிக்கைப் பிறந்துள்ளது. பள்ளிக்கு வருகை தரும் பார்வையாளர்கள் கலை வடிவங்களை விலைக்கு வாங்கத் தொடங்கினர். கண்காட்சியின் போதும் எங்கள் தயாரிப்புகள் விற்பனை ஆகின்றன. கண்காட்சிகள் புதுவை, சென்னை, ஏனாம், குஜராத்தில் நடைபெற்றுள்ளன. இலங்கையிலும் மாணாக்கர்களின் கலைவடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

எங்களது படைப்புகளை முகநூலில் "craft  from nature‘ பக்கத்தைப் பார்த்து செஷல்ஸ் தீவிலிருந்து எங்களது சிறார்களுக்குப் பயிற்சி கொடுங்கள் என்று அழைப்பு வந்தது. புதுவை அரசின் அனுமதியுடன் 15 நாட்கள் செஷல்ஸ் தீவிற்குச் சென்று சிறார்களுக்குப் பயிற்சி அளித்துத் திரும்பினேன்.

எங்கள் பள்ளி நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பள்ளியில், சோளம் , சுரைக்காய் பயிரிட்டுள்ளோம். எங்களுக்குத் தேவைக்கான சுரைக்காய் கூடுகளைத் தோட்டத்திலிருந்துதான் பெறுகிறோம். குறுங்காடு ஒன்றை அமைத்து மூலிகைச் செடிகளை வளர்க்கிறோம். கபசுரக் குடிநீர் தயாரிக்க வேண்டியுள்ள மூலிகைகள் எங்கள் தோட்டத்தில் உள்ளன. கலைப் பொருட்கள் மட்டுமன்றி குறுங்காடு அமைத்து மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த வாழ்வியலிலும் பயிற்சி கொடுத்து வருகிறேன்.

கரோனா தாக்கத்தால் 2020 பலருக்கும் மோசமான ஆண்டாக இருந்தாலும், எனக்குப் பல இதயங்களின் அன்பைப் பெற்றுத்தந்த ஆண்டு. இன்னொரு 2020 வராமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வாய்ப்பை வழங்கியுள்ள ஆண்டு. எனவே, வழக்கம்போல் 2021- ஆம் ஆண்டிற்கான எந்த எதிர்பார்ப்புகளுமின்றி, இயற்கையின் ஓட்டத்தில் மிதந்து செல்லும் உற்சாகத்தை உள்வாங்கிக்கொள்ள "சேலியமேடு' தயாராகிவிட்டது.

இன்னும் ஏராளமான மாணாக்கர்களின் பாதச்சுவடுகளை ஏற்கவும், பல நூறு இளைஞர்களுடனான சமூகப் பிணைப்பை கலை வடிவங்களை உருவாக்குவதன் மூலம் சாதிக்கவும் தயாராகலாம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது'' என்கிறார் உமாபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT