ஞாயிறு கொண்டாட்டம்

என் அடையாளம் இனி மாறும்!

"மூடிக் கிடக்கும் மனங்களின் உள்ளே விரக்தியின் இருட்டும்;  திறந்து கிடக்கும் மனங்களின் வெளியே நம்பிக்கையின்  விடியலும் எப்போதும் இருக்கும்...'

DIN


"மூடிக் கிடக்கும் மனங்களின் உள்ளே விரக்தியின் இருட்டும்; திறந்து கிடக்கும் மனங்களின் வெளியே நம்பிக்கையின் விடியலும் எப்போதும் இருக்கும்...' சர்ச்சைக்குப் பெயர் போன இயக்குநர் சாமியின் வெளிச்சக் கீற்று வார்த்தைகள் இவை. 1997-ஆம் ஆண்டு மஜித் மஜீதி இயக்கத்தில் இரானிய மொழியில் உருவான க்ளாசிக் படம், "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்'. கடை கோடி மனிதனையும் உலகச் சினிமா பற்றிப் பேச வைத்த படம். இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆன நிலையில் தமிழில் "அக்கா குருவி' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார் சாமி.

""பரவசத்தையும், பயங்கரத்தையும், காதலையும், மனிதத்தையும், கோபத்தையும், அரசியலையும் எனக்குக் கற்று தந்தது உலக சினிமாக்கள்தான். அது ஒரு கெமிஸ்ட்ரி. நமக்குப் பிரியமான ஓர் கனவை நாம் கண்டுபிடித்துக்கொள்கிற தருணம். இப்போதும் சினிமா என்ற கலை, தீராத காதலாகவும், துயரமாகவும், கருணையாகவும் துரத்திக்கொண்டே இருக்கிறது. "கலர் ஆஃப் பேரடைஸ்' படத்தில் கீழே விழுந்த குருவிக் குஞ்சைத் தூக்கி கூட்டில் வைக்கிற பார்வையற்ற சிறுவன், "லைஃப் இஸ் பியூட்டிஃபுல்'லில் சுடப்படுவதற்கு முன் மகனுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக ஜோக்கரைப் போல நடந்து போகும் அப்பா, "தி வே ஹோம்' பேரனின் புறக்கணிப்பைச் சலனமே இல்லாமல் வாங்கிக்கொள்ளும் அந்தக் கிழவியின் கண்கள், "ஈ.டி'-யில் அந்தச் சிறுவனை "எலியட்' என விநோதப் பிராணி அழைக்கும்போது வரும் ஆச்சர்யம், "ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்' நாஜிக்கள் வதைக் களத்தில் அதிரவைக்கிற மனித நிர்வாணம்... இப்படி பல சினிமாக்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான சினிமாக்கள் நமது உணர்வுகளை, நினைவுகளைக் கிளறடிக்கின்றன. எல்லோருடைய வாழ்க்கையிலும் சில சினிமாக்கள் நினைவுகளால் முக்கியத்துவம் அடைந்து இருக்கும். அப்படி ஒரு சினிமாதான் "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்'.'' உலகச் சினிமாக்களின் காதலானாகப் பேசத் தொடங்குகிறார் சாமி.

மஜித் மஜீதி கதை... தமிழ் ரீமேக்.... எல்லாமும் முறைப்படி நடந்ததா...

எல்லாம் முறையாகத்தான்.... “நான் இன்னும் அவரை நேரில் பார்க்கவில்லை. எல்லாமே மின்னஞ்சல் வழியாகத்தான் முடிவானது. அவருக்கு ஒரு மெயில் அனுப்பி, படத்தைத் தமிழில் ரீமேக் செய்கிற எண்ணத்தைச் சொன்னேன். பாலிவுட்டில்தான் அதன் ரைட்ஸ் இருப்பதாகப் பதில் வந்தது. ஹிந்தியில் இந்தப் படம் "பம் பம் போலே' என்கிற பெயரில் ப்ரியதர்ஷன் எடுத்திருக்கிறார். இப்போது நான் தென்னிந்திய ரீமேக் ரைட்ஸ் வாங்கி இந்தப் படத்தை ரீமேக் செய்திருக்கிறேன். "அக்கா குருவி' இசை வெளியீட்டு விழாவுக்கு மஜித் மஜீதைக் அழைக்க முடிவு செய்திருக்கிறோம். அல்லது அங்கேயிருந்து நேரலையில் அவர் பேசவும் செய்வார். அவருக்கு ஒரு சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யவும் தயாராகி வருகிறோம்.

தமிழ் சினிமாவில் உங்களுக்கென ஓர் அடையாளம் இருக்கிறது.... இப்போது "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தின் தமிழ் ரீமேக்...ஏன் இந்த திடீர் மாற்றம்?

"உயிர்' படத்துக்குப் பின் "சதம்' என்று ஒரு படத்தைத் தொடங்கினேன். அது ஒரு விளையாட்டை மையமாக வைத்த கதை. ஆனால், அந்தப் படத்தை எடுக்க முடியவில்லை. "மிருகம்' படத்தை எடுத்தேன். அதன் பின் , மண் சார்ந்து ஒரு படைப்பைக் கொடுக்கலாம் என நினைத்து "சரித்திரம்' படத்தைத் தொடங்கினேன். அதுவும் சில காரணங்களால் நின்று விட்டது. பிறகு, "சிந்து சமவெளி' எடுத்தேன். அதுக்குப் பிறகு, "சித்திரம்' என்று ஒரு படம் செய்ய நினைத்தேன். அதுவும் என்னால் முடியவில்லை. "கங்காரு' எடுத்தேன். "கங்காரு' நல்ல கதைதான், தமிழ் மக்களைப் போய் அது சேரவில்லை. தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. அதை இப்போது உணர்ந்து வந்திருக்கிறேன். சினிமா தரக்கூடிய உணர்வுகளும் கதைகளும் எப்போதும் தீரவே தீராது. என் அடையாளம் இனி மாறும்.

தமிழ் படுத்துதலில் என்னென்ன மாற்றங்கள்....

இது உலகத்துக்கே பொதுவானது. மொழிகள் கடந்த உணர்வு. "சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' பள்ளி வாசலில் மூச்சிரைக்க நிற்கிற அந்தக் குட்டிப் பெண் என்னை இப்போதும் ஏதோ செய்து கொண்டே இருக்கிறாள். கால்களுக்கு ஒரு ஜோடி ஷூ வாங்குவதற்காக ஒரு அண்ணனும் தங்கையும் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் அந்தப் படத்தின் களம். ரீமேக்கில் அதன் ஒரிஜினல் எமோஷன் எதுவும் மாறாமல், அதே உணர்வு இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அந்தப் படத்தில் வருகிற மாதிரி ஒரு ஊரை தமிழ்நாடு முழுக்கத் தேடி, கொடைக்கானல் பக்கத்துல இருக்கிற பூம்பாறை என்ற மலைக் கிராமத்தைத் தேர்ந்தெடுத்தோம். தவிர, இந்த ஊரைத் தேர்ந்தெடுக்க இன்னொரு காரணமும் இருக்கு. படத்துல வருகிற பிரதான பிரச்னை இந்தக் காலகட்டத்துக்குப் பொருந்தாது. அதனால், கதைக்களம் 1990-களில் நடக்கிற மாதிரி மாற்றினோம். பூம்பாறையின் பெரும்பாலான வீடுகள் 500 ஆண்டுகள் பழைமையானவை. தவிர, படத்தின் கதைப்படி இந்தக் கிராமத்துக்குப் பக்கத்துல ஒரு சிறு நகரம் இருக்க வேணடும். கொடைக்கானல் அதற்குப் பொருத்தமாக இருந்தது. இது மட்டுமின்றி ஒரு காதல் கதை உள்ளுக்குள்ளே புதிதாக இருக்கும்.

இளையராஜா என்ன விசேஷம்...

நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜா தொட்டு விட்டார். இனி என்ன இருக்கிறது... இசையின் இன்னொரு பரிமாணம்தான் இந்தப் படம். இந்த தலைமுறைக்கு அவர் கொண்டு போய் சேர்க்க நினைக்கிற இசை. அவ்வளவு இலகுவாகக் கைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் பலமே ராஜாவின் இசைதான். படத்துக்காக மூன்று பாடல்கள் தவிர, அவரின் 11 பாடல்களைப் பிரத்யேக உரிமை பெற்றுப் பயன்படுத்தி இருக்கிறோம். ராஜாவின் இசை உள்ளே வந்த பின்னர்தான், படத்துக்கு இன்னொரு கலர் வந்து சேர்ந்தது.

இப்போது இசையின் வடிவம் மாறியிருக்கலாம். உயிரோட்டம் மாறியிருக்கலாம். எத்தனை காலம் ஆனாலும் ராஜாவின் இசை மாறாது. அலைகடலும் ஆழ்கடலும் அவர்தான் என்றான பின், கரைகளும், நுரைகளும் என்னவாகும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT