முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

ரோஜா மலரே! - 82: தமிழுக்குப் பெருமை சேர்த்த கலைஞர்! - குமாரி சச்சு

இயக்குநர் சக்தி சமந்தா சொன்ன விஷயம் இது தான். "இசைக்கு மொழி கிடையாது, வயதும் கிடையாது. எஸ். டி பர்மன் ஒரு மிகச் சிறந்த இசை அமைப்பாளர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:


இயக்குநர் சக்தி சமந்தா சொன்ன விஷயம் இது தான். "இசைக்கு மொழி கிடையாது, வயதும் கிடையாது. எஸ். டி பர்மன் ஒரு மிகச் சிறந்த இசை அமைப்பாளர். ஆகையால் தான், நான் அவரை இந்தப் படத்துக்கு இசையமைக்க ஓப்பந்தம் செய்ய விரும்பி அழைத்தேன். அவரும் ஒப்புக் கொண்டு வந்தார்.  "ஆராதனா' படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாட்டும் சிறப்பான முறையில் அமைந்துவிட்டன. எனக்கு மிக்க மகிழ்ச்சி'', என்றார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், "சொர்க்கம்' படத்தில் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் நானும், நாகேஷும் "ஆராதனா' படத்தில் வரும் "ரூப்பு தேரா மஸ்தானா' என்ற பாடலை பாடிக்கொண்டே ஆடுவோம். அன்று இருந்த நிலையில், யாரும் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்து நாங்கள் ஆடவில்லை. 

நாங்களே கற்பனை செய்து அந்தப் பாட்டுக்கு நடனம் ஆடினோம். "சொர்க்கம்' படம் வெளியான போது, எங்கள் நடனமும், காட்சியும் பிரபலமாயின. இதை சென்னையில் இருக்கும் யாரோ பார்த்து விட்டு, ஹிந்தி பட இயக்குநர் சக்தி சமந்தாவுக்கு சொல்லிவிட்டார்கள். அதுவும் நீங்கள் சீரியஸ் ஆனான காட்சியில், அந்தப் பாடலை வைத்துப் படமாக்கி இருந்தீர்கள். ஆனால் "சொர்க்கம்' படத்தில், உங்கள் படத்தில் இடம் பெற்ற "ரூப்பு  தேரா மஸ்தானா' என்ற பாடலை, ஒரு காமெடி காட்சியில் வைத்து விட்டார்கள்' என்று சொல்லிவிட, இயக்குநர் சக்தி சமந்தா "சொர்க்கம்' பட இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவுக்குப் போன் செய்து விவரம் கேட்டார். 

இயக்குநர் ராமண்ணா, ஹிந்திப் பட இயக்குநர் சக்தி சமந்தாவிற்குக் காட்சியின் தன்மையை விளக்கி விட்டு, "நாங்கள் எடுத்த காட்சியை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன். நீங்களே பார்த்து விட்டுச் சொல்லுங்கள். நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் அந்தக் காட்சியை நீக்கி விடுகிறேன்'என்று சொன்னார். சொன்னதுடன் இல்லாமல், நாங்கள் இருவரும் நடித்து இருந்த நகைச்சுவை காட்சியை, சக்தி சமந்தாவுக்கு அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த சக்தி சமந்தா, எங்கள் இருவரின் நடிப்பையும் பார்த்து பாராட்டி விட்டு, முழுமையான சம்மதம் தெரிவித்தார். அந்த அளவிற்கு ஹிந்திப்பட இயக்குநரைக் கூடக் கவர்ந்தது எங்கள் நகைச்சுவை நடனக்காட்சி. 

"சொர்க்கம்' படம் என் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம். அதில் நான்கு வேடங்களில் நடித்திருப்பேன். முதல் வேடம் தாய். அவருக்கு மூன்று மகள்கள். ஒரே ஒரு மகளுக்கு மட்டும் காதலராக நாகேஷ் நடித்திருப்பார். இந்த நான்கு வேடங்களில் வித்தியாசங்கள் காண்பிக்க வேண்டும். அதில் நாங்கள் வித்தியாசங்கள் காண்பித்தோம். உடை விஷயத்தில் காண்பித்தோம். அது மட்டுமல்ல, எங்கள் சிகை அலங்காரத்தில், நடிப்பில் எல்லாவற்றிலும் வேறுபாடு காண்பித்தோம்.

இந்த நகைச்சுவை காட்சிகளை எழுதியது, கவிஞர் சுப்பு ஆறுமுகம். இவர் வில்லுப்பாட்டில் புகழ் பெற்றவர். மகான்களின் சரிதங்களையும், அவர்கள் போதித்த தத்துவங்களையும், பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக, வில்லுபாட்டின் வழியே கதையாகச் சொல்லி விடுவார். இவர் பல படங்களுக்கும் நகைச்சுவை வசனங்களை எழுதியுள்ளார். 

இவருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது, மத்திய அரசால் வழங்கப்பட்டது. அவர் பிரமாதமாக இந்தப் படத்தில் நகைச்சுவை காட்சிகளை எழுதி இருந்தார். வில்லிசை வேந்தர் என்று புகழப்படும் சுப்பு ஆறுமுகம் தன்னுடைய 14- ஆவது வயதிலே, "குமரன் பாட்டு" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.

இது "பொன்னி" என்ற இலக்கிய மாத இதழில் தொடராக வெளியிடப்பட்டது. இவரை சென்னைக்கு அழைத்து வந்தது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், இவரைத் தனது வீட்டிலேயே தங்க வைத்து, கல்கி எழுதிய காந்தி மகானின் சுயசரிதையை கொடுத்து, அதை வில்லுப்பாட்டாக்கிப் பாடச் செய்தார். சென்னையில் இயங்கும் தேசிய கிராமியக்கலை ஆதரவு மையத்தின் ஏற்பாட்டில், ஐந்து நாள் சிறப்பு வில்லுப்பாட்டுப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. அந்தப் பயிற்சி முகாமில் 12 மாணவர்கள் பயிற்சி பெற்று மிகவும் பயனடைந்தனர். இந்த வில்லுப்பாட்டு பயிற்சியை அளித்தவர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் .  இவருக்கு 2005-ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருதும், 2004-ஆம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார்  நினைவு அறக்கட்டளை விருதும், வழங்கப்பட்டது. 

"மனிதர்கள் ஜாக்கிரதை' என்று ஒரு நாடகம், இவரால் எழுதி புத்தகமாக வெளியிடப்பட்டது. பின் அதுவே நாடகமாகவும் மேடையேற்றப்பட்டது. "காப்பு கட்டி சத்திரம்' என்று ஒரு வானொலித் தொடர் நாடகத்திலும், இவரது பங்கு கணிசமாக உண்டு.

"காந்தி மகான் கதை', "திரும்பி வந்த பாரதி', "திலகர் கதை', "புத்தர் கதை' இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி, தானே மேடையில் நடத்தி இருக்கிறார். மேலும் திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில், தமிழை ஒலிக்கச் செய்தார். அதாவது தியாகப் பிரம்மத்தைப் பற்றி, தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார். இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இந்த வில்லுபாட்டு  நிகழ்ச்சிகளை  செய்திருக்கிறார். 

"'சொர்க்கம்'' படத்தில்  நான்கு கதாபாத்திரங்களுக்கான வசனத்தை சுப்பு ஆறுமுகம் சிறப்பாக எழுதி இருந்தார். நாகேஷ் மிகவும் பிஸியாக இருந்த காலம். அவர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் கால்ஷீட் கொடுக்க முடிந்தது. நானும் அன்று பிஸியாகத்தான் இருந்தேன். நான்கு ரோல் என்பதால், "மாஸ்க் ஷாட்' 

எடுத்தார்கள். இன்று உள்ள நிலையில், இதை (கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்) முறையில் மிகவும் சுலபமாக செய்து விடலாம். மூன்று மகள்களும் அம்மாவிடம் பேசும்படி காட்சிகள் இருந்தன. அது மட்டுமல்லாமல்,  மகள்களும் அவர்களின் பங்கிற்கு வசனம் பேசி நடிக்க வேண்டும். அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளராத காலம். 

எல்லாமே காமிரா மூலம் தான் செய்ய வேண்டும். அதை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு மகளாக நானே நடித்து எடுக்க வேண்டும். 35 எம்எம் பிலிமில் தான் இந்த நான்கு ரோலையும் காட்ட வேண்டும். இதில் ஒளிப்பதிவாளர் உழைப்பு நான்கு மடங்காகும். அது மட்டுமல்லாமல், நடிகர்கள் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். நாகேஷ் ஒரு கதாபாத்திரம் செய்தார். அதனால் அவர் தன்னுடைய கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்து விட்டுச் சென்று விடுவார். ஆனால் நான் அப்படிப் போக முடியாது. நான் உடையை, சிகை அலங்காரத்தை மாற்றி, தாய் மட்டுமல்ல, 3 மகள் கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும். 

இந்த வேடத்தில் ஒரு பாட்டும் இருந்தது. காலையில் 7 மணிக்கு வந்தால், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு படப்பிடிப்பு முடியும். இதற்குக் காரணம், காமிராவை ஓர் இடத்தில் வைத்து விட்டால்காட்சி எடுத்து முடிக்கப்படும் வரை காமிராவை நகர்த்த மாட்டார்கள். இதன் இயக்குநர் ராமண்ணா அந்தக் காட்சிகளை எப்படி எடுத்தார் தெரியுமா?

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.