முகப்பு
இந்தியா

கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி!சூடுபிடிக்கும் பிரசாரக் களம்!

கேரளம், அஸ்ஸாமில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (மாா்ச் 23) நிறைவடைகிறது. இரு மாநிலங்களிலும் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது.

Updated On : 22 மார்ச், 2026 at 8:01 PM
கேரள மாநிலம் பறவூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாநில காங்கிரஸ் தலைவா் வி.டி.சதீசன்.
பகிர்:

கேரளம், அஸ்ஸாமில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (மாா்ச் 23) நிறைவடைகிறது. இரு மாநிலங்களிலும் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளம், 126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

அண்டை மாநிலமான கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் களம் காண்கிறது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) போட்டியிடுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் உள்ளதால், மும்முனைப் போட்டி நிலவுகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸும் முனைப்பு காட்டுகின்றன.

இவ்விரு மாநிலங்களிலும் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 26-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதால், தோ்தல் பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது. வரும் நாள்களில் தேசியத் தலைவா்கள் பலரும் இந்த மாநிலங்களில் முகாமிடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.