ஞாயிறு கொண்டாட்டம்

ரத்தத்தின் ரத்தமே...   34

என்ன திட்டினாலும் கேட்டுக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் சில பேர் அப்படியே உட்கார்ந்திருப்பதுண்டு.

டாக்டர் எஸ். அமுதகுமார்

என்ன திட்டினாலும் கேட்டுக்கொண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் சில பேர் அப்படியே உட்கார்ந்திருப்பதுண்டு. இந்த மாதிரி நபர்களை சூடு சொரணை இல்லாதவன் என்று சொல்லி திட்டுவார்கள். சூடு என்பது வெப்பம் உணர்தல் சம்பந்தப்பட்டது. சொரணை என்பது தொடு உணர்வு சம்பந்தப்பட்டது. இரண்டுமே நரம்பின் செயல்பாட்டுக்கும் ரத்தத்தின் செயல்பாட்டுக்கும் சம்பந்தப்பட்டது. நரம்பின் செயல்பாடு ரத்தத்தின் செயல்பாடு சரியாக இல்லையென்றால் குளிர்ச்சி, வெப்பம், தொடுதல், கிள்ளுதல், அமுக்குதல், அழுத்துதல் போன்ற தொடு உணர்வுகள் எதுவுமே தெரியாமல் போகும்.

"நாராய் நாராய் செங்கால் நாராய்' என்று தொடங்கும் பாடலை சங்ககாலப் புலவர்களில் ஒருவரான சத்திமுத்தப் புலவர் பாடிய பாடல் இது. இந்தப் புலவர் தம் ஊர்விட்டு அயலூர் சென்று வறுமையால் மிகவும் வாடி தளர்ந்துபோய் பாழடைந்து இடிந்துபோன ஒரு குட்டிச்சுவரின் அருகில் கடுங்குளிருக்கு பயந்து ஓரமாக ஒதுங்கியிருக்கும் போது நாரைகள் இரண்டு ஜோடியாக வானில் பறப்பதைக் கண்டு வறுமையிலும் தன் பிரிவாலும் தமது ஊரில் வாடிக்கொண்டிருக்கும் தன் மனைவிக்கு இந்த நாரைகளைத் தூதாக அனுப்புவதுபோல் இந்த நாரைவிடு தூது பாடல் அமையும்.

"நாரையே நாரையே சிவந்த கால்களை உடைய நாரையே நீயும் உன் பெட்டையும் தென் திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடியபின் வடதிசைக்கு திரும்பும்போது எங்கள் ஊரிலுள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி நனைந்த சுவர்களையும், கூரையையும், கனைக்கும் பல்லிகளையும் கொண்ட வீட்டில், என்னை எதிர்பார்த்திருக்கும் என் மனைவியிடம், எங்கள் அரசன் மாறன் வழுதி ஆளும் மதுரையில், கடுங்குளிரில், போர்த்திக் கொள்ள சரியான ஆடையில்லாமல், உடல் மெலிந்து போய், வாடிப்போய், போர்வை இல்லாததால் கைகளைக் கொண்டு உடம்பைப் பொத்தி கால்களைக் கொண்டு உடல் மேல் தழுவி, பெட்டிக்குள் சுருங்கி மடங்கி படுத்திருக்கும் பாம்பைப் போல, உன் ஏழைக் கணவனைக் கண்டோம் என்று சொல்லுங்கள்'  என்ற பொருளில் புலவர் கூறியிருப்பார்.

கைகளையும், கால்களையும் போர்வையாகவும் தலையணையாகவும் உபயோகித்த இந்தப் புலவரைப் போல், கைகளையும் கால்களையும் கண்டபடி மடக்கி பல மணி நேரங்கள் ஒரே இடத்தில், ஒரே நிலையில் உட்கார்ந்திருக்கும் பலருக்கு இந்தத் தற்காலிகமாக மரத்துப் போதல், பெருங்கால் பிடித்து கொள்ளுதல் உடம்பில் ஒரு பாகம் உணர்வற்றுப் போதல், போன்றவை ஏற்படுவதுண்டு. இந்தச் செயலை சிலபேர் கால் தூங்கி விட்டது என்று சொல்வார்கள். மருத்துவ மொழியில் இதற்கு ட்ரான்ஸியென்ட் பெராஸ்தீஸியாஅதாவது தற்காலிகமாக மரத்துப் போதல்' என்று சொல்வதுண்டு.

தற்காலிகமாக மரத்துப் போதல்,  என்பது உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

1. இது மிகச்சிறிய மிக நுண்ணிய நரம்புகளின் மீது ஏற்படும் அதிகபட்ச அழுத்தத்தினால் வரலாம். 

2. அல்லது மிகச் சிறிய மிக நுண்ணிய ரத்தக்குழாய்களில் ஏற்படும் ரத்தத் தடையினாலும் வரலாம். இந்த இரண்டு செயல்களுமே திடீரென்று வந்து திடீரென்று போய்விடும். வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. எல்லாமே சில நொடிகளில் நடந்து முடிந்துவிடும். ஆனால் சில நொடிகளே நடக்கும் இந்த மரத்துப் போதல் செயலுக்கு நீங்கள் மணிக்கணக்காக செய்த கைகளை மடித்து வைத்தல், கால்களை மடக்கி வைத்தல் போன்ற இயற்கை நிலையிலிருந்து மாறுபட்ட பல செயல்களே காரணங்களாகும்.

இந்த மரத்துப் போதல் விஷயம் சில பேருக்கு மணிக்கணக்காக நாட்கணக்காக வாரக்கணக்காகக் கூட தொடரலாம். கூச்சம், உணர்வின்மை போன்றவை கூட இந்த மரத்துப் போதலோடு சேர்ந்த செயல்களே. முடி அளவு மெல்லிய மிகச்சிறிய, மிக நுண்ணிய நரம்புகள் பாதிக்கப்பட்டாலோ, சிதைந்து போனாலோ மேற்கூறிய மாதிரி கூச்சம் மரத்துப் போதல் உணர்வற்றுப் போதல் போன்றவைகள் ஏற்படலாம். 

கை கால்கள் உள்ளங்கை பாதம் போன்ற இடங்களில் கூச்சம் அல்லது உணர்வின்மை கைகளில் அல்லது கால்களில் கையுறை அல்லது சாக்ஸ் போடாமலேயே போட்டிருப்பது போன்ற ஓர் உணர்வு மிகச்சிறிய பொருள்களைக் கூட தூக்க முடியாமல் கீழே அவ்வப்பொழுது அடிக்கடி கைதவறி விட்டு விடுவது  குண்டூசியைக் கொண்டு குத்துவதைப் போன்றதொரு வலி மெல்லிதாக எலக்ட்ரிக் ஷாக் அடித்தது போன்றதொரு உணர்வு போன்ற செயல்கள் யாவும் நரம்புகள் பாதிக்கப்பட்டால் ஏற்படும்.

கை கால்கள் மட்டும் தான் மரத்துப் போகும் என்றில்லை. முகம், தொடை இடுப்பின் பின்பகுதி, புட்டம், பிறப்புறுப்புகள் இருக்குமிடம் முதலிய இடங்களும் மரத்துப் போக வாய்ப்புண்டு. பக்கவாதம், தலை, மூளை, குருத்தெலும்பு முதலிய பாகங்களில் விபத்தினால் பாதிப்பு, வைட்டமின் பி12 குறைவு, முதலியவைகளும் மரத்துப் போதலை ஏற்படுத்தும். சில நேரங்களில் குளவி, தேனீ, வண்டு கட்டெறும்பு போன்றவைகள் கடித்து விட்டாலோ, கொட்டிவிட்டாலோ கூட அந்த இடத்தில் மரத்துப் போதல் ஏற்படுவதுண்டு. என்னென்ன செய்தால், மரத்துப் போதலை குறைக்கலாம். மரத்துப் போதலை அறவே அகற்றலாம்.

1. நன்றாக ஓய்வெடுத்தால் மரத்துப் போதல் குறைந்துவிடும். 2. மசாஜ் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக மரத்துப் போதல் குறையும். 3. மரத்துப்போன இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் சரியாகிவிடும். 4. சில சமயங்களில் வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுத்தாலும் சரியாகிவிடும். 5. யோகா போன்ற சிறிய சிறிய உடற் பயிற்சிகளை வீட்டிலேயே செய்தால் ரத்த ஓட்டம் நன்கு அதிகமாகி மரத்துப் போவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். 6. இறுக்கமான காலணிகள் மற்றும்  சாக்ஸ் போட்டிருந்தால் உடனே கழற்றிவிட வேண்டும். 7. இறுக்கமான பேண்ட் போட்டிருந்தால் கழற்றிவிட வேண்டும். 8. சரியான தூக்கம் இல்லையென்றால் கூட கால்கள் மரத்துப்போக வாய்ப்புண்டு 9. மது தொடர்ந்து அருந்துபவர்கள் மது அருந்துவதைக் குறைத்தால் மரத்துப் போதல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக ஆரம்பித்துவிடும். 10. சத்தான சரிவிகித உணவு உடலுக்குக் கிடைக்கவில்லையென்றாலும் கால்கள் மரத்துப் போக வாய்ப்புண்டு. 11. மன அழுத்தம் கூட மரத்துப் போதலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. 12. ஒரு சிட்டிகை அளவு எப்ஸம் உப்பை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் ரத்த ஓட்டம் நன்கு வேகமாகும். எப்ஸம் உப்பில் மக்னீசியம் இருக்கிறது. மக்னீசியம் உடலுக்கு குறிப்பாக நரம்புகளுக்கு மிகவும் தேவையானதாகும்.  13. படுத்திருக்கும்போது கால்களுக்கு தலையணை வைத்துக் கொள்வது நல்லது. 14. ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டு அல்லது உட்கார்ந்து கொண்டு இருப்பதை தவிர்க்க வேண்டும். 15. இடுப்புக்குக் கீழ் அணியும் ஆடைகளை இறுக்கமாக அணிய வேண்டாம். 16. நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து ஜந்து நிமிடங்கள் ஒரு சுற்று சுற்றி நடந்துவிட்டு வந்து உட்காருவது நல்லது. 17. உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. நடைப்பயிற்சி மேற்கொள்வது என்பது மிக மிக அவசியம். 18. முடிந்தவரை சோம்பேறித்தனமாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்காமல்  கொஞ்சம் வீட்டுக்குள்ளேயே அங்கும் இங்கும் நடமாடுவது நல்லது. 19. படுத்தது படுத்தபடி உட்கார்ந்து உட்கார்ந்தபடி போட்டது போட்டபடி கிடந்தது கிடந்தபடி இருந்தது இருந்தபடி என்றிருந்தால் நாடி நரம்பெல்லாம் ஆடி அடங்கிப் போய்விடும். எனவே எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். கை   கால்களுக்கு மொத்தத்தில் உடலுக்கு ஏதாவது வேலையைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். மரத்தல் என்பது மறந்தே போய்விடும். 

சொல்ல முடியாத, விவரிக்க முடியாத, நடமாட முடியாத தொடர்ந்து அடிக்கடி வலியுள்ள சில நாள்பட்ட வியாதிகள் இருந்தால் கை கால்கள் மரத்துப் போக வாய்ப்புண்டு. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் நீங்கள் கையை உதறிவிட்டால் சரியாகிவிடும்.  காலை உதறிவிட்டால் சரியாகிவிடும் என்று வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு இருக்காமல் உடனே உங்கள் குடும்ப டாக்டரைப் பார்ப்பது மிகவும் நல்லது.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT