முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வாராணசி தமிழ்ச் சங்கமம்: உ.பி. - தமிழகம்: கலாசார பாலம்!

"வாராணசி தமிழ்ச் சங்கமம்' - உ.பி.க்கும் தமிழகத்துக்கும் கலாசார பாலம் என்கிறார் வாராணசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:04 AM
பகிர்:

"வாராணசி தமிழ்ச் சங்கமம்' - உ.பி.க்கும் தமிழகத்துக்கும் கலாசார பாலம் என்கிறார் வாராணசி மாவட்ட ஆட்சியர் எஸ்.ராஜலிங்கம். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக இருந்தபோது, அவர் நவ. 6-இல் பொறுப்பேற்றுள்ளது பெருமைக்குரியதாக அமைந்தது. இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட கடையநல்லூர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். பணியாற்றி வரும் அவரை, முதல்வர் யோகி ஆதியநாத் நியமித்திருக்கிறார்.

ராஜலிங்கத்துடன் ஒர் சந்திப்பு:

ஆட்சிப் பணியில் சேரும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

அப்பா சுப்பையாவுக்கு இந்தியன் வங்கியில் வேலை. அம்மா மலையம்மாள் குடும்பத் தலைவி. எனக்கு ஒரு தங்கை ரேவதி. புளியங்குடியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் (என்.ஐ.ஐ.டி.) கெமிக்கல் என்ஜினீயரிங் முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இரண்டே மாதங்கள்தான் அங்கே பணியாற்றினேன். கை நிறைய சம்பளம் கிடைத்தாலும், வேலையில் மன நிறைவு, ஆத்ம திருப்தி கிடைக்கவில்லை. அந்தச் சமயத்தில் எனக்குள்ளே ஏற்பட்ட ஒரு தேடலில்தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் எண்ணம் வந்தது. உடனே வேலையை ராஜிநாமா செய்துவிட்டு தென்காசிக்கு வந்துவிட்டேன்.

எவ்வாறு தேர்வுக்குத் தயார்ப்படுத்திக் கொண்டீர்கள்?

ஆர்வம் இருந்தாலும், சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து முழுமையாகத் தெரியாது. தென்காசியிலேயே ஒரு நூல் நிலையத்துக்குச் சென்று படிக்க ஆரம்பித்தேன். நுழைவுத்தேர்வு எழுதி, தமிழக அரசின் சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சிக்குத் தேர்வானேன். அங்கே பயிற்சியை முடித்து, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்.

2005-இல் முதல் முறை தேர்வு எழுதியபோது, நேர்முகத் தேர்வு வரை சென்றாலும், இறுதியில் தேர்வாகவில்லை. அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்தபோது, உத்தரப் பிரதேசத்தில் ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வானேன். உத்தரப் பிரதேச காவல்துறையில் பணியில் சேர்ந்த பிறகு, 2006-இல் மீண்டும் ஒரு முறை தேர்வு எழுதினேன். மறுபடியும் ஐ.பி.எஸ். தான் கிடைத்தது. அடுத்து ஒருமுறை தீவிரமாக முயற்சி செய்ய ஐ.ஏ.எஸ். பணிக்குத் தேர்வானேன்.

ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். இரு பணிகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?

குற்றம் நடக்காமல் தடுத்தல், குற்றவாளிகளைக் கண்டுபிடித்தல், அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக்கொடுப்பது போன்ற பணிகள் காவல் துறையில் இருக்கும். மாவட்ட கண்காணிப்பாளர் பதவி வரை களப்பணிகள் இருக்கும். அதற்கு மேல் என்றால், பெரும்பாலும் மேற்பார்வையிடும் வழிகாட்டும் பணிதான்!

ஆனால் ஆட்சிப் பணி என்றால், அனைத்து அரசுத்துறைகளின் பணியையும் ஒருங்கிணைத்து, நிர்வகிக்க வேண்டும். பொதுமக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நல்லதொரு பணிகளை நிறைய செய்யலாம்.

பல்வேறு துறைகளிலும் வெவ்வேறு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பணியாற்றவும், அதன் மூலமாக நம் அறிவைப் பெருக்கிக் கொள்ளவும் வழி உண்டு.

அரசு கொள்கை முடிவுகள் எடுக்கும்போதும், மக்கள் நலத் திட்டங்கள் தீட்டும்போதும், பல உபயோகமான கருத்துகளைச் சொல்ல முடியும். என் குணங்களுக்கு ஐ.ஏ.எஸ். பணி ஏற்றதாக இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் பால்வளத் துறை, கல்வித் துறை, வணிக வரித் துறைகளில் பணியாற்றி இருக்கிறேன். மாவட்ட ஆட்சியராக ஆனதில் நான், விரும்பிய மன நிறைவு கிடைக்கிறது.

காவல் துறை அலுவலராக இருந்தபோது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?

மொராதாபாத் மாவட்டத்தில், ஒரு குறிப்பிட்ட பிரிவு பழங்குடியினருக்கு தொழிலே சாராயம் காய்ச்சுவதுதான்! நடவடிக்கைகள்பல மேற்கொண்டும், அவர்கள் சாராயம் காய்ச்சுவதை நிறுத்துவதாக இல்லை. அவர்களின் பரம்பரைத் தொழிலே அதுதான். அவர்கள் வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல், அவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுப்பதால் எந்தப் பயனுமில்லை என்பது எனக்குப் புரிந்தது. அந்தச் சம்பவம் நான் மறுபடியும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத எனக்குத் தூண்டுதலாக இருந்தது.

மேற்கு உ.பி.யில் ஒரு காலகட்டத்தில் பணத் தேவைக்காக ஆள் கடத்தும் சம்பவங்கள் நிறைய நடைபெற்றன. கேட்டபடி பணம் தராவிட்டால், கடத்திய நபரைக் கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள். நான் அலிகாரில் பணியாற்றியபோது ஒரு கும்பல் ஏழு வயது குழந்தையைக் கடத்திச் சென்று, பணம் கேட்டார்கள்.

கைதிகள், குற்றவாளிகளின் தகவல்களைத் திரட்டி, புலனாய்வையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி, அந்தக் குழந்தையை 72 மணி நேரத்துக்குள் பத்திரமாக மீட்டு வந்தோம். "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.' எனும் திரைப்படத்தில் வருவதைப் போல, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதும் 20 பேரை கைது செய்தோம்.

மாவட்ட ஆட்சியரானபோது மக்களுக்கு நேரடியாக உதவ முடிந்ததா?

உ.பி.யின் இரண்டாவது பெரிய மாவட்டமான சோன்பத்ராவின் ஒரு பகுதியில் பல்லாண்டுகளாக ஒரு சிறு தொகையை செலுத்திவிட்டு, விவசாயத்தில் ஈடுபட்டு வந்த பழங்குடியின மக்களை ஒரு நாள் திடீரென்று நிலத்தைவிட்டு வெளியேற்ற சில ஆதிக்க ஜாதியினர் முயன்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பிரச்னையில், துப்பாக்கிகளால் சுடப்பட்டு பதினோரு பழங்குடியினர் இறந்துபோயினர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்துக்கு விரைந்து, மாவட்ட நிர்வாகத்தினர் பலரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்தார். பலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

முதல்வரிடமிருந்து எனக்கும். இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரிக்கும் அழைப்பு வர நாங்கள் உடனே சென்று சந்தித்தோம். எங்களை சோன்பத்ரா மாவட்டத்துக்கு ஆட்சியராக நானும், எஸ்.பி.யாக அந்த ஐ.பி.எஸ். அதிகாரியும் பொறுப்பேற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டது. அன்றே இருவரும் லக்னெளவிலிருந்து ஹெலிகாப்டரில் சென்று சோன்பத்ராவில் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

1955-ஆம் ஆண்டு முதல் அந்த நிலத்துக்குரிய ஆவணங்களை ஆராய்ந்து, ஆதிக்க ஜாதியினரிடமிருந்து ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அந்த நிலங்களை சட்டப்பூர்வமாக மீட்டெடுத்து, சுமார் 300 பழங்குடியினருக்கு பட்டாக்களை ஒரே மாதத்தில் வழங்கிட ஏற்பாடு செய்தேன். இதற்கான விழாவில், முதல்வர் என்னை பாராட்டினார்.

"தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சி நடைபெறுகிற நேரத்தில் ஒரு தமிழர் வாராணசி ஆட்சியர் பொறுப்பேற்றுள்ளது தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. புதிய பொறுப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வாராணசி பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதி. எனவே இது பெருமைக்குரிய, கெளரவம் மிகுந்த பொறுப்பு. இந்த வாய்ப்பு எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. உ.பி. மக்கள் அன்போடு ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. காசி தமிழ்ச்சங்கமம் நேரத்தில் வாராணசி மாவட்ட ஆட்சியராக இருப்பதும், தமிழர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததிலும் மிக்க சந்தோஷம். காசி தமிழ்ச்சங்கமம் குறித்த இணைய வழிக் கூட்டத்தில் பிரதமர் எனது கருத்துகளையும் கேட்டதும் பெருமிதமாக இருந்தது.

"தமிழ்ச்சங்கமத்துக்கு வருபவர்கள் வெறும் சுற்றுலாப் பயணிகள் இல்லை; அவர்கள் அனைவரும் நமது விருந்தினர்கள்; ஒரு சிறு அசெளகரியமும் இல்லாமல் அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்' என்று பிரதமரும், முதல்வரும் கூறினர். ஏதாவது நிவர்த்திக்க வேண்டுமா?' என்று கேட்டால், "எல்லாம் அற்புதமாக உள்ளன! என்று தமிழர்கள் பாராட்டியபோது, ,மகிழ்ச்சி அடைந்தேன்.

வாராணசியிலேயே சுமார் 200 தமிழ்க்குடும்பங்கள் ஐந்தாறு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம் இதனை தங்கள் குடும்பக் கொண்டாட்டமாக நினைத்து மகிழ்கின்றனர்.

தமிழகத்தில் மறைந்துவரும் சில பாரம்பரியக் கலைகளின் நிகழ்ச்சிகள் கூட இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றை இங்கே வந்திருக்கும் தமிழர்களும், உ.பி. மக்களும் கூட கண்டு ரசித்தனர். மொத்தத்தில், காசி தமிழ்ச் சங்கமம் தமிழகத்துக்கும், உத்தரப் பிரதேசத்துக்கும் இடையிலான கலாசாரப் பாலம்.

மொழிகளாலும், பழக்கவழக்கங்களாலும் வேறுபட்டிருந்தாலும், இந்தியர்கள் என்ற உணர்வை தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகள் மக்கள் மனதில் ஏற்படுத்தும். தமிழகத்துக்கும் காசிக்கும் இடையிலான உறவு தொன்மை வாய்ந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →