ஞாயிறு கொண்டாட்டம்

நலமோடு வாழ 40 நிமிடம்!

சென்னை அரசினர் சித்த மருத்துவராக கல்லூரியில்,  விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் மருத்துவர் ஆ.சாய்சதீஷ்.

DIN

சென்னை அரசினர் சித்த மருத்துவராக கல்லூரியில், விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் மருத்துவர் ஆ.சாய்சதீஷ். அரசு சித்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், விரைவில் நலம் பெறவும், ஆரோக்கியத்துடன் வாழவும் 40 நிமிடத்தில் யோகா, ஆசனங்கள், பிராணாயாமம் செய்வதற்கான பயிற்சியளிக்கிறார். அது என்ன? இதோ:

நம் உடல் நன்றாக இருப்பதற்கும் நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் நோயில்லா நெறிமுறையை வகுத்துள்ளனர். குறிப்பாக சித்த மருத்துவத்தில் எண்ணற்ற வழிமுறைகளை திருமூலர் சித்தர் கூறியுள்ளார்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

என்று உடம்பை வளர்க்கும் வழி முறைகளை கூறியுள்ளார்.

நம் உடல் மூன்று வகைப்படும். 1. சூக்கும் உடல்(ஆன்ம உடல்) 2.காரண உடல் (மன உடல்) 3. ஸ்தூல உடல் (பருவுடம்பு) இதில் நாம் மன உடல், பருவுடல் இரண்டையும் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் இந்த இரண்டில் எதில் பாதிப்பு நிகழ்ந்தாலும் பருவுடலை பாதித்து நோய்களை உண்டாக்கி ஆயுளை குறைக்கும்.

அதற்கான சிறிய எளிய அனைவரும் செய்யக்கூடிய பயிற்சி உள்ளன. இதனை செய்வதற்கு 40 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

1.சூரிய நமஸ்காரம்(தளர்வு பயிற்சி)-5 நிமிடம்
2.சித்தர் ஆசனங்கள்-4 
பத்மாசனம், வஜ்ராசனம், தடாசனம், புஜங்காசனம் - 10நிமிடம்
3.சித்தர் வர்மங்கள்- 4
திலர்த வர்மம், தும்மி காலம், அடப்பகாலம், விலங்கு வர்மம்- 5 நிமிடம்
4.சித்தர் முத்திரை- 4
லிங்க முத்திரை, பிராண முத்திரை, சூரிய முத்திரை-5 நிமிடம்
5.சித்தர் திருமூலர் மூச்சுப்பயிற்சி
( பிராணாயாமம்) -10 நிமிடம்
6.சவாசனம் -( நனவு நிலை உறக்கம்) - 5 நிமிடம்
நாம் நோயில்லா வாழவும், உளப்பிணி, உடல் பிணி இல்லாமல் வாழவும் இந்த பயிற்சிகள் சிறந்த முறையில்உதவும்.

1.சூரிய நமஸ்காரம் (தளர்வு பயிற்சி)

பன்னிரண்டு யோகாசனங்கள் அடங்கிய ஒரு தொகுதி சூரிய நமஸ்காரம். அதனால் ஒட்டு மொத்த யோகாசனம் என்று இதனை சொல்லலாம். உடலில் பிடிப்பு வராமல் இருக்கவும், வாயுக்கள் சேராமல் இருக்கவும் உதவுகிறது இந்த சூரிய நமஸ்காரம். உடலை நல்ல வடிவத்தில் வைப்பதுடன் மனதையும் அமைதிப்படுத்தி, நலமுடன் வைக்கின்றது. அதிகாலையில் வெறும் வயிற்றுடன் சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்தது.

2. ஆசனங்கள்

பத்மாசனம்

யோகாசனங்களில் மிக முக்கியமானதும் முதன்மையானதுமான ஓர் ஆசனம் தான் பத்மாசனம். பத்மம் என்றால் தாமரையைக் குறிக்கும். தாமரை வடிவில் அமர்வதால் தான் இந்த ஆசனம் பத்மாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

விரிப்பின் மீது அமர்ந்து கொண்டு வலது பாதத்தை இடது தொடையின் மேலும் இடதுபாதத்தை வலது தொடையின் மேலும் பொருந்தும்படியாக அமைத்துக் கொள்ளவேண்டும். இரண்டு கால்களும் அடிவயிற்றை ஒட்டினாற்போல் இருக்க வேண்டும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். உங்களுடைய முழங்கால்கள் தரையில் படும்படி நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.

அமரும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது நல்லது. பத்மாசனத்தில் அமர்ந்து கையின் கட்டைவிரலின் நுனி ஆள்காட்டி விரலின் நுனியைத் தொடுமாறு இருக்க வேண்டும். நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்திக் கட்டுப்படுத்தவே இந்த சின்முத்திரை.

வாதம், பித்தம், கபம் சம நிலையை அடையும். மூளை நன்றாக செயல்பட உதவும், அது உங்களின் ஜீரண சக்தியை அதிகரித்து, செரிமான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

வஜ்ராசனம்

கால்கள் இரண்டையும் மடக்கி இரு பக்கங்களிலும் பாதங்கள் தெரிய அமர்வதற்கு பதிலாக, அவைகளை அருகருகில் வைத்து அவைகளின் மீது புட்டங்கள் வைத்தும் அமரலாம். இரண்டு கால்களின் பாத விரல்கள் ஒன்றன் மீது ஒன்று பதிந்துள்ள நிலையில் நேராக அமரவேண்டும். இடுப்புவலி, வாதம், மூலம் போன்ற வியாதிகள் தீரும்.

தடாசனம்

விரிப்பில் இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து நிற்கவும். பின்னர் இரண்டு கைகளையும் மேலே தூக்கி கைகளைக் கோர்த்து உள்ளங்கை வெளிப் பார்க்கும் படி தலைக்கு மேலே உயர்த்தவும். இப்போது மூச்சை இழுக்கவும். பின்னர் மூச்சைவெளிவிட்டு கைகளை மடக்காமல் இடுப்பை இடது - வலதுபக்கம் வளைக்கவும்.இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் மெதுவாக மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.

இதனால் நுரையீரல் நன்கு விரிவடைகிறது. மார்பு பகுதி தசைகள் வலுப் பெறுகின்றன.கால்,பாதம், குதிகால்,தொடை, தசைகள் வலிமைப் பெறுகின்றன.நினைவாற்றல் மேம்படும்.


புஜங்காசனம்

விரிப்பின் மேல், குப்புறப்படுத்து கைகளை நீட்டி வைக்கவும். பின் கைகளை மடக்கி உள்ளங்கைகளை மார்புக்கு நேராக பலமாக ஊன்றி வைக்கவும்.மூச்சை உள் இழுத்து, தலையை தரையில் இருந்து மேலே தூக்கி நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியை மெல்ல உயர்த்தவும். தாடை கீழ் நோக்கி இருக்க வேண்டும். இடுப்புப் பகுதி தரையிலேயே நிலைத்து இருக்க வேண்டும். முழங்கைகள் உடலோடு ஒட்டியபடி இருக்க வேண்டும்.பிறகு நிதானமாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டு தலையை கீழே இறக்கவும்.

நுரையீரலை பலப்படுத்தும். அனைத்து சுவாச நோய்களும் சரியாக்கும். முதுகெலும்பை வலுவாக்கும். தண்டுவடத்தை திடப்படுத்தும். மேற்கண்ட ஆசனங்களை தொடர்ந்து செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்.

இத்துடன் வர்ம பயிற்சிகளும் செய்யலாம்.


3. வர்ம பயிற்சிகள்


திலர்த வர்மம்

நெற்றியின் நடுவில் இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ளது. இந்த புள்ளியை நடுவிரல் கொண்டு 30 விநாடிகள் அழுத்தி விடவும்.

தும்மி காலம்

தொண்டை குழியில் கீழே உள்ளது. சுட்டு விரலால் இந்த வர்மபுள்ளியை 30 விநாடிகள் லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அடப்ப காலம்

அக்குளிலிருந்து 10 விரல் கீழே பக்கவாட்டில் உள்ளது. இதனை 3 முறை முன் பின்னாக அசைத்து 1 முறை மேல் கீழாக அசைத்தல் வேண்டும்.

விலங்கு வர்மம்

தோள்பட்டை உட்புறமாக காரை எலும்பின் கீழே உள்ளது. 3 விரல்கள் கொண்டு இந்த வர்மத்தினை வலப்பக்கமாக சுழற்சி செய்தல் வேண்டும்.

4. முத்திரைகள்:

லிங்க முத்திரை

இரண்டு கைவிரல் களையும், உள்ளங்கை படும்படி கோர்த்து பிணைத்துக் கொள்ள வேண்டும்.

இடது கை பெருவிரல் நேராக மேலே தெரியும் படி நீட்டிக்கொள்ள வேண்டும். இந்த முத்திரையால் சுவாச பிரச்னை சீராகும். உடலில் உள்ள நோய் கிருமிகள் வெளியேறும்.

பிராண முத்திரை

நமது மோதிர விரல் நுனியும், சிறு விரல் நுனியும் பெருவிரல் நுனியும் தொடும்படி வைத்துக்கொள்ள வேண்டும். அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. இந்த முத்திரையை செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சூரிய முத்திரை

மோதிர விரலை பெருவிரலின் அடிபாகத்தில் தொடும்படி வைத்துக்கொள்ள வேண்டும். பெருவிரலை மோதிர விரலின் மீது வைத்து லேசாக அழுத்த வேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கொழுப்பு, ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு நீங்கி மன அமைதி ஏற்படும்.


5. திருமூலர் மூச்சு பயிற்சி (பிராணாயாமம்)

பிராணாயாமம் என்று அழைக்கப்படும் மூச்சு பயிற்சியை குறைந்தது 9 முறை செய்ய வேண்டும். 2 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு உங்கள் சுவாசத்தை கவனிக்க வேண்டும்.

வலது நாசியை அடைத்து இடது நாசியால் சுவாசத்தை 2 விநாடிகள் உள்ள இழுக்க வேண்டும். பின்னர் 2 நாசி துவாரத்தையும் அடைத்து 8 விநாடிகள் மூச்சை அடக்க வேண்டும். இதன் பிறகு வலது நாசி துவாரம் வழியாக 4 விநாடிகள் சுவாசத்தை வெளியேற்ற வேண்டும். இதன் மூலம் நுரையீரலில் பிராண சக்தி அதிகரிக்கும். நுரையீரல் பாதுகாக்கப்படும். சுவாச பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.இந்த பயிற்சி நமது ஆன்ம உடலை விழிப்பு நிலையில் வைத்திருக்க உதவும். பிராணாயாமத்தை விடியற்காலையில் செய்தால் பித்தம் நீங்கும். மத்தியானத்தில் செய்தால் வஞ்சக வாதம் நீங்கும். மாலையில் செய்தால் கபம் நீங்கும்.


6.சவாசனம் (நனவு நிலை உறக்கம்)

நாம் அன்றாடம் உறக்கம் என்பது 8 மணி நேர அளவு ஆகும். இந்த சவாசன பயிற்சியில் அரைமணி நேர பயிற்சியில் அந்த ஆற்றல் கிடைக்கும். இந்த பயிற்சியால் நம் உடலின் முக்கிய உறுப்புகளான நுரையீரல், இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம், நோய் வராமலும் நன்றாக செயல்படவும் உதவும்.

இந்த பயிற்சி நாம் கண்களை மூடிக்கொண்டு நம் சுவாசத்தினை 50 முறை மனதினால் எண்ணும் போது நம் வயிற்றுப் பகுதி ஏறி இறங்கும். இதை தினமும் 5 நிமிடம் காலை-மாலை செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு முழு தடை விதிக்க கோரிக்கை

பாஜக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலை

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

ஷீஷ் மஹாலில் வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பி வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT