வேலை கேட்காதீர்கள் வேலை கொடுங்கள்!
""எனக்கு போதுமான உயரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனது திறமை, வல்லமையைப் பாருங்கள்... வெளியே தெரியும் எனது சிறிய உருவத்தை வைத்து என்னை எடை போடாதீர்கள்.
""எனக்கு போதுமான உயரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனது திறமை, வல்லமையைப் பாருங்கள்... வெளியே தெரியும் எனது சிறிய உருவத்தை வைத்து என்னை எடை போடாதீர்கள். கனவுகளை காண்பதற்கோ... கனவுகளை நனவாக்குவதற்கோ உயரம் ஒரு தடை அல்ல'' என்று சொல்லுபவர் திஷா பாண்ட்யா.
வயது 36 என்றாலும் உயரத்தில் சிறுமி போல் குட்டையாக இருக்கும் பெண் மாற்றுத்திறனாளி. ஓவியர், கிராஃபிக் டிசைனர், கேமரா கலைஞர், நம்பிக்கையை விதைக்கும் பேச்சாளர், இறகுப் பந்தாட்ட வீராங்கனை என்று திஷாவுக்குப் பல முகங்கள் உண்டு.
"நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள். கடவுள் எனது உயரத்தில் தடங்கல் செய்துவிட்டான். ஆனால் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு தீர்க்கத்தை அளித்திருக்கிறான். "என்ன நேரா சர்க்கஸ்ஸிலிருந்து வந்துட்டியா' என்று கேட்டு கேலி கிண்டல் செய்வார்கள். எனது குடும்பத்தில் அனைவரும் உயரம் குறைபாடுள்ளவர்கள். நாங்கள் உயரத்தில் வடிவத்தில் வித்தியாசமாக இருக்கிறோம் என்பது உண்மைதான். "வாழ்ந்து காட்டணும்' என்ற உத்வேகத்தை எனக்கு ஊட்டியது பெற்றோர்தான். என்ன பிரச்னை வந்தாலும் "அது கிடக்குது .. பரவாயில்லை..' என்று முன்னேறு என்று சொல்லி வளர்த்தார்கள்.
Advertisement
பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அலையோ அலை என்று அலைந்தேன். குள்ளமான என்னைப் பார்த்துவிட்டு வேலைக்குத் யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. குள்ளமான மாற்றுத் திறனாளியான அப்பாவுக்கும் அவரது இளமைக் காலத்தில் இதே அனுபவம்தான். கடைசியில்..."அவங்க எனக்கு வேலை கொடுக்காட்டா என்ன... நான் நாலு பேரை வேலைக்கு வைத்து காட்டுகிறேன்.." என்று தீர்மானித்து கிடைத்த சின்னச் சின்ன வேலைகளைச் செய்யத் தொடங்கினார். கடைசியில் அஞ்சாறு பேர்களுக்கு வேலை கொடுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உரிமையாளரானார். அதுபோலவே ... நானும் வாழ்க்கையில் முன்னேறி சாதித்திருக்கிறேன்.. பிரபல நிறுவனங்களுடன் எனது வேலை இணைந்திருக்கிறது. மற்றவர்களுக்கு நான் ஒரு முன்மாதிரியாகி இருக்கிறேன்.
"பொருத்தமான ஜோடி வேறு இடங்களிலிருந்து கிடைத்தால் திருமணம் செய்து கொண்டு கணவன் ஊரில் செட்டில் ஆகு' என்று பெற்றோர் சொன்னாலும், நான் மும்பையை விட்டுப் போக மாட்டேன். எனக்கு எல்லாம் தந்த மும்பை, கணவனையும் கண்டிப்பாகத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அப்படியே எனக்குப் பொருத்தமான வரன் மும்பையில் கிடைக்கவில்லை என்றாலும், நான் திருமணமாகாமல் மும்பையில் வாழ்வேனே தவிர, வேறு ஊர், நகர் வரனைத் திருமணம் செய்து கொண்டு மும்பையை விட்டுப் போக மாட்டேன் என்பதில் தீர்மானமாக இருந்தேன்.
"இன்று உயரம் குறைந்தவர்களுக்காக நடத்தப்படும் இறகுப் பந்தாட்டத்தில் உலக நாடுகளின் அரங்குகளில் விளையாடி வருகிறேன். இறகுப் பந்தாட்டத்தை எனக்கு அறிமுகம் செய்தவர் மார்க் தர்மை. அவரும் மாற்றுத்திறனாளிதான்...! தேசிய அளவில் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப் பந்தாட்டத்தில் பெண்களுக்கான, ஆண்-பெண் கலப்பு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளேன்.
அமெரிக்காவில் எங்களை போன்று உயரம் குறைந்தவர்களுக்காக "லிட்டில் ஃபோக்ஸ் ஆஃப் அமெரிக்கா' என்ற அமைப்பு உள்ளது. அதுபோல் இந்தியாவிலும் "லிட்டில் ஃபோக்ஸ் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பை மூன்று ஆண்டுகளுக்குமுன் நானும் எனது நட்பு வட்டமும் சேர்ந்து தொடங்கியுள்ளோம். உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளின் நலம் காக்க, கோரிக்கைகள் வைக்க இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பில் சுமார் 250 பேர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் நாற்பது பேர்கள் பல்வேறு விளையாட்டுகளுடன் தொடர்புள்ளவர்கள்.
எங்களுக்குள்ள பொதுப் பிரச்னை விளையாட்டு பயிற்சிக்காக எங்களுடன் விளையாட எங்களைப் போன்றவர்கள் கிடைக்க மாட்டார்கள். உயரம் குறைபாடில்லாத வீரர் வீராங்கனைகளுடன் விளையாடி நாங்கள் பயிற்சி செய்ய முடியாது. இந்த சூழ்நிலையில் சென்ற வாரம் டிசம்பர் 24 முதல் 26 வரை புவனேஷ்வரில் எங்களுக்கான நான்காம் தேசிய இறகுப் பந்தாட்டப் போட்டிகள் நடைபெற்றன. 25 மாநிலங்களிலிருந்து சுமார் 500 விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஊடகங்கள் எதுவும் இந்த விளையாட்டு நிகழ்ச்சியை கண்டு கொள்ளவில்லை.
மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய போட்டிகளிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அடுத்துவருவது உயரம் குறைந்தவர்களுக்கான உலக விடியோ கேம்ஸ் போட்டிகள் இந்த ஆண்டு (2022) நடக்கப் போகிறது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகமானால் இந்தப் போட்டி நடப்பது தள்ளிப் போகலாம் என்று சொல்லும் திஷா பாண்ட்யா பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கிரியேட்டிவ் ஹெட்டாக பணிபுரிகிறார். மும்பை நகரம் அன்பளிப்பு செய்த மாற்றுத் திறனாளியும் இறகுப் பந்தாட்டக்காரருமான மிதேஷ் தாக்கர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.