ஞாயிறு கொண்டாட்டம்

மூவரைத் தவிர யாரும் கிரியேட்டர்கள் இல்லை!

""எங்கேயோ அந்த போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம்.

ஜி. அசோக்


""எங்கேயோ அந்த போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம். " நீ மானாக இருந்தால், புலியைவிட வேகமாக ஓடு. நீ புலியாக இருந்தால், மானைவிட வேகமாக ஓடு'... அந்த வரிகள் என்னைப் பாதித்தது. ஏனென்றால் என் வாழ்க்கையே அதுதான்! - ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசுகிறார் சாம் சி.எஸ். தற்கால சினிமா இசையில் தவிர்க்க முடியாத பெயர். தனித்துவ இசையை விரும்பும் இயக்குநர்களின் "குட் புக்'கில் இருக்கிறார்.  "விக்ரம் வேதா', "கைதி', "அடங்க மறு',  "சாணி காயிதம்' என படத்துக்குப் படம் கவனிக்க வைப்பவரின் சமீபத்திய ஹிட் "ராக்கெட்ரி', "சுழல்' வெப் சீரிஸ். 

ஒவ்வொன்றிலும் தனித்துவம் தெரிகிறது....  ரொம்பவே ரசிக்கிறோம்... வாழ்த்துக்கள்...

நன்றி! அனைத்துக்கும்  உணர்வுகள்தான்  காரணம்.  உணர்வுகளை இதயத்துக்குள் கடத்துவதுதான் இசையின் வேலை. என் எல்லா படங்களிலும்  அது நன்றாகவே நடந்திருப்பதாக உணர்கிறேன்.  "விக்ரம் வேதா', "கைதி' என எல்லா படங்களுக்குமே ஒரே உழைப்புதான்.  இதுவரை சிக்காத எலைட் பிடித்து வேலை செய்கிறேன். 

எல்லா படங்களுமே  நிறைய ரசிகர்களை எனக்குக் கொண்டு வந்துள்ளது. அதைவிட  புத்தம் புது இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடம் போய் கதை சொல்லும் போதே,  "" சார் இந்தக் கதைக்கு சாம் சி.எஸ். இசை இருந்தால் நன்றாக இருக்கும்'' என்று சொல்லுகிறார்கள்.  இதை தயாரிப்பாளர்களே சொல்லும் போது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.  பின்னணி இசையில் அதி முக்கியத்துவம் கொடுக்கிறேன். பாடல்கள் பொருந்தி வந்தால் இன்னும் நல்ல மேஜிக் நிகழும். 

இப்போது "சுழல்' வெப் சீரிஸ் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.  ஆர்பார்ட்டம் இல்லாமல் ஆரம்பிக்கு கதை. ஒவ்வொரு எபிசோடிலும் தடதடத்து பயணிக்க வேண்டும். அதை உணர்ந்து அதற்கு பின்னணி இசை கொடுத்தேன்.  இந்த வேளையில் வாய்ப்பு கொடுத்த ஒவ்வொரு  இயக்குநருக்கும் நன்றி.   மற்றபடி எதையும் சாதித்து விட்டதாக  பெருமிதம் ஒரு சதவிகிதம் கூட என்னிடம் இல்லை. நான் ஏதோ பெரிய ஆள் என நினைக்கவில்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி. நன்றி. 

ரொம்பவே தன்னடக்கத்துடன் பேசுறீங்க...

என் உயரம் எனக்குத் தெரிவதுதான் இதற்குக் காரணம்.  இந்தத் துறைக்கு நான் வருவதற்கு எந்தத் திட்டமிடலும் கிடையாது.  சிலர் சொல்லுவது போல், சினிமா, இசை என்பது எனக்கு விபத்துதான். கம்பம் அருகில் இருக்கிற நாராயணன் தேவன் பட்டி கிராமம். அங்கிருந்து சென்னை வந்ததே பெரிய கதை. நல்ல படிப்பு, ஐடி துறையில் நல்ல சம்பளம் என போய்க் கொண்டு இருந்தது. திடீரென்று எல்லாவற்றையும் விட்டு விட்டு இசை, கீ போர்டு என வந்து விட்டேன். ஆரம்பத்தில் விளம்பர படங்களுக்கு இசை அமைத்தேன். வருமானம் மிக வும் குறைவு. இருந்தாலும் அதிசயம் நிகழும் என்பது போல் காத்திருந்தேன். "அம்புலி' படம் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் வாய்ப்புகள் எதுவும் இல்லை. இருந்தாலும் காத்திருந்து, நீங்கள் கவனிக்கும் இடத்துக்கு வந்திருக்கிறேன். இதுதான் நான். வேறு என்ன இருக்கிறது நான் சொல்ல... 

பின்னணி இசையை கவனிக்க வைக்கிறீர்கள்... அதில்தான் கூடுதல் கவனமோ... 

இயக்குநர்கள் கதையை முதன் முறையாக விவரிக்கும் போதே பின்னணி இசை குறித்த குறிப்புகள் என் மனதில் தோன்றிவிடும். கதாபாத்திரங்கள், கள சூழல்கள், வசனங்கள், கதை நகரும் போக்கு,  இசை முழுவதுமாக மெளனிக்கப்பட வேண்டிய நிமிடங்கள், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள தருணங்கள்... ஆகியவற்றை துல்லியமாக அவதானித்த பிறகு, என்னுடைய இசைக் கோர்வையை தொடங்குகிறேன். 

இயக்குநர்களின் வேண்டுகோள் அல்லது படக்குழுவினரின் இசை சார்ந்த கோரிக்கை ஏதேனும் இருந்தால் அவற்றையும் கேட்டு பின்னணி இசையை தொடர்கிறேன். வித்தியாசமான ஒலி குறிப்புகள் மூலம் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கவும் முயற்சிக்கிறேன். 

கதை, திரைக்கதை, அதனுடைய பின்னணி இசையை எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எந்த பாணியிலான சினிமா என்பதையும் அவதானித்து பின்னணி இசையை வழங்குகிறேன். ரசிகர்களின் ரசனையையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் கடந்து ஓர் ஒலியை வழங்கும் போது, அவர்களின் மகிழ்ச்சியை கரவொலியாக உணர்கிறேன்.

பின்னணியிசைக்காக எடுக்கும் முயற்சிகளைப் போல், படத்தில் இடம்பெறும் பாடல்களுக்காகவும் பிரத்யேக தேடல் இருக்கும். பாடல்களை கதைகளமும், கதாப்பாத்திரமும், அதன் திரைக்கதையும்தான் தீர்மானிக்கிறது. மாண்டேஜஸ் பாடல்கள் என்றாலும், அதிலும் ஓர் இசை சார்ந்த அனுபவம் பார்வையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற பெரு விருப்பத்துடன் பணியாற்றுகிறேன். இசை ரசிகர்களின் காதுகளில் ஒலி சப்தமாக சென்றடையாமல் நாதலயத்துடன் இனிய ஒலியாக சேரவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். மெட்டமைத்த பிறகு பாடல்கள் உருவாவதும், பாடல்கள் எழுதப்பட்ட பிறகு மெட்டுகள் உருவாதும் இயல்பு தான் என்றாலும், வெற்றிக்கரமான பாடல்கள் அமைய வேண்டும் என்பது தான் இறுதி இலக்கு.

அறைக்குள்ளேயே இசைப் பணியை முடித்து விடுவீர்களாமே...

அதிகாலை எழுவது பள்ளி நாள்களில் இருந்தே பழகி விட்டது. அதை மாற்றிக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

அதற்கென தனி பழக்க, வழக்கம் எதையும் வைத்துக் கொள்வதில்லை. எல்லாம் கேள்வி ஞானம்தான். எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இந்த மூன்று பேரைத் தவிர இங்கே யாரும் கிரியேட்டர்கள் இல்லை. எல்லாவற்றையும் அவர்களே தொடங்கி முடித்து விட்டார்கள். நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மூவரும்  தொட்டு விட்டார்கள். அலைகடலும்  ஆழ்கடலும் அவர்கள் என்றான பின், கரைகளும், நுரைகளும் என்னவாகும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT