பக்தர்கள் அமைத்த நந்தவனம்
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நந்தவனம் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நந்தவனம் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரிக்கு மேற்கே, இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது களக்காடு. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க அருள்மிகு கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. 11-ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட மன்னரால் எழுப்பப்பட்ட இந்தக் கோயில் வெளிப் பிரகாரத்தில் முற்காலத்தில் இருந்த நந்தவனம், காலப்போக்கில் அழிந்துவிட்டது.
இந்தக் கோயிலுக்கு வழக்கமாக வந்து செல்லும் பக்தர் ஜவஹர் (45) உள்ளிட்ட பக்தர்கள் சிலர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், புதராகக் கிடந்த கோயில் வெளிப் பிரகாரத்தைச் சீரமைத்து அங்கு மரங்களை நட்டு பராமரிக்கத் தொடங்கினர். பல அரியவகை மரக்கன்றுகள், மூலிகைச் செடிகளும் இதில் அடங்கும்.
கோயில் வெளிப் பிரகாரம் அடர்ந்த சோலையாக மாறத் தொடங்கியது. இங்கு 27 வகையான ராசிக்குரிய மரங்கள், வில்வம், கோயிலின் ஸ்தல விருட்சமான புன்னை மற்றும் புரசை மரம் என 100.க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
கோயிலில் சுவாமிக்கு சூடுவதற்காக மனோரஞ்சிதம், கார்த்திகை மாதம் மட்டுமே பூக்கும் மந்தாகரப் பூ, முல்லை, பாரிஜாதம் உள்ளிட்ட பூஞ்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக, களக்காடு பெயர் வரக் காரணமான களா மரங்களும் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
இது குறித்து ஜவஹர் கூறியதாவது:
""நாம் தினம் தினம் சென்றுவரும் கோயிலின் வெளிப் பிரகாரம் புதர்மண்டிக் கிடப்பதைச் சீரமைக்க நினைத்தோம். கோயிலின் நந்தவனத்தை பழையபடி மீட்டெடுக்க நல்வாய்ப்பு கிடைத்ததாகக் கருதி தொடர்ந்து 4 ஆண்டுகளாக பக்தர்களின் தொடர் ஆதரவுடன் மரக்கன்றுகளை நட்டு சோலையாக மாற்றியுள்ளோம். மரங்களுக்கு காய்ந்த இலைகளையே உரமாக இட்டு வருகிறோம்'' என்றார்.
இதுகுறித்து பக்தர் சரவணப்பெருமாள் கூறியதாவது:
""இந்த நந்தவனத்தில் 43 சிற்றினங்களைச் சார்ந்த மரங்கள் உள்ளன. விவசாயத் தோட்டத்தில் மரம் நடுவதில் ஏற்பட்ட ஆர்வம், தற்போது கோயில் வளாகத்தில் நந்தவனத்தை மீட்டெடுக்க நினைத்து, அதில் வெற்றியும் அடைந்திருப்பதாகவே கருதுகிறோம். கோயில் செயல் அலுவலர் மாரியப்பனும் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்தார்'' என்றார்.
மூலிகை தாவரங்களின் மணம், பூக்களின் நறுமண வாசனை, மாசற்ற தூய காற்றை சுவாசிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது என்கின்றனர் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள்.