முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழ் நடிகைகளுக்கு ஒரே நிலைமைதான்!

சாக்ஷி அகர்வால்.... பெயர்தான் வட இந்திய சாயல். ஆனால் பக்கா சென்னை பொண்ணு. "யுகன்', "ஆதியன்', "காலா' என வரிசைக் கட்டும் படங்களில் ஹீரோயின்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

சாக்ஷி அகர்வால்.... பெயர்தான் வட இந்திய சாயல். ஆனால் பக்கா சென்னை பொண்ணு. "யுகன்', "ஆதியன்', "காலா' என வரிசைக் கட்டும் படங்களில் ஹீரோயின். எதார்த்தம், மார்டன் என பிரதிபலித்துக்கொண்டிருப்பவர் அடுத்து "புறவி', "சிண்ட்ரலா', "ஆயிரம் ஜென்மங்கள்' என பரபரப்பாக இயங்கி வருகிறார்.

தமிழ் பெண்களுக்கு  அதிகம் வாய்ப்பில்லை என்பதால்தான், சாக்ஷி அகர்வால் என பெயர் வைத்துக் கொண்டீர்களா....

இல்லை. எனக்கு இயல்பாகவே வைக்கப்பட்ட பெயர்தான் சாக்ஷி அகர்வால். நான் பக்கா சென்னை பொண்ணு.   மாடலிங், சினிமா இதுதான் என் வரலாறு. மறைப்பதற்கு இங்கே எதுவும் இல்லை. மற்ற மொழி ஹீரோயின்கள்தான் தமிழில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகைகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.  தமிழில் மட்டும்தான் தமிழ்ப் பொண்ணுங்க நடிக்கிறதே இல்லை. ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நன்றாக தமிழ் பேசுவார்கள். ஆனால், ஆரம்பத்தில் அவர்களுக்கு  தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் மாஸ் ஹீரோயினாக ஆனதற்கு பின்புதான் தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரித்து அவர்களை வரவேற்றது. இது மாதிரி நிறைய பேர் இங்கே இருக்கிறார்கள். நாமதான் அவர்களை அடையாளம் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறோம். வடநாட்டுப் பொண்ணுங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிற சினிமா துறையினருக்கு, ஏன் நம்ம ஊர் பொண்ணுங்களை சரியாப் பார்த்துக்கத் தெரியலை என்கிற வருத்தம் எனக்குள் நிறையவே இருக்கிறது. 

Advertisement

ஒன்றுக்கு மேற்பட்ட ஹீரோயின்கள்  ரோல் மட்டும்தான் உங்களுக்கு வருகிறதா...?

நாம் சின்ன ரோலில் நடிக்கிறோமே என்கிற மனப்போக்கு இருக்கக் கூடாது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் திறம்பட நடித்துக் காட்ட வேண்டும். இதை புரிந்துக் கொண்டால் எத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் சமாளித்து விடலாம். தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. முன்னணி கதாபாத்திரங்களில் நாம சரியா நடிக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் மனதில் நம் முகம் பதியாது. அதுவே சின்ன ரோலில் திறம்பட நடித்தோம் என்றால் நல்ல பெயர் கிடைக்கும். அவ்வளவுதான். 

மற்ற மொழிப் படங்களில் நடித்த அனுபவம்... சினிமாவில் எனக்குத் தைரியத்தைக் கொடுத்ததே மற்ற மொழிப்படங்கள்தாம். இதுவரை ஒரு கன்னட படம். ஒரு மலையாளப் படம். இரண்டு படங்கள்தான். எனக்கு மொழி ஒரு பெரிய பிரச்னை இல்லை.  ஆனால், மலையாளப் படங்களும் கிட்டத்தட்ட தமிழ்ப் படங்கள் மாதிரிதான். என்னால் மலையாளம் புரிந்துக் கொள்ள முடியும். எனக்கு நிறைய மலையாளப் பட வாய்ப்புகள் வந்தது.  பிற மொழிப் படங்களில் நடிக்க முடியும் என்ற  நம்பிக்கை கொடுத்ததே இந்தப் படங்கள்தாம்.

"பிக்பாஸ்' கமல், "காலா' ரஜினி.... எப்படி இருந்தது அனுபவம்...
"காலா' படத்தில் சில காட்சிகள் வந்து விட்டுப் போகிற  பெண் கதாபாத்திரங்களுக்குக்கூட அதிக முக்கியத்துவம் இருக்கும். அதனால் நானும் வெளியே தெரிந்தேன். ரஜினி சாருடன் நடித்தது பெரும் அனுபவம். சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத வாய்ப்பு. ரஞ்சித் சாருக்கு நன்றி. 

என் ஸ்டைலில்தான் நான் நடித்தேன்.  கமல் மறக்க முடியாதவர். என்னால் தனியாக வாழ முடியும். மற்றவரை சார்ந்தும் வாழ முடியும். ஆனால், பிக் பாஸ் வாழ்க்கை தனி. எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன்.  அந்த வீட்டில் இவ்வளவு நாள்கள் தாக்கு பிடிக்க முடிந்ததே பெரும் சவால். 

யார் இயக்கத்தில் நடிக்க ஆசை....

வெற்றி மாறன் ரொம்பவே பிடித்த இயக்குநர். அவர் இயக்கிய "அசுரன்' அவ்வளவு பிடிக்கும். ஒரு சிக்கலான கதை. அதை அவர் அவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லியிருந்தார். அது மாதிரி ஒரு கதையில் அவர் இயக்கத்தில் நடிக்க விருப்பம்.  சில சமயங்களில் வெளிநாட்டு ஹீரோயின்களைக்கூட தேர்ந்தெடுப்பார்கள். காரணம், நம் மனசுல வெள்ளை நிறம்தான் அழகு என்று பதிவாகியிருக்கிறது.   ஒரு கதாபாத்திரத்தின் சாயலை புரிந்துக் கொண்டு என்னை அணுகினால், உழைக்கத் தயார். 

இன்னும் பெண்கள் சார்ந்த படங்கள் தமிழில் இல்லையே என்கிற வருத்தம் பரவலாக இருக்கிறது....

ஆமாம்... ஏனென்றால் தமிழ் சினிமாவில் பெண்களுக்குக் கொடுக்கப்படுகிற இடம் மிகக் குறைவு. 10 வருஷத்துக்கு ஒருதடவைதான் "அருவி', "அறம்', "காக்கா முட்டை' மாதிரியான படங்கள் வருகின்றன. நயன்தாரா நடித்ததால் "அறம்' படம் மக்கள் மத்தியிலயும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நயன்தாரா அப்படியான கதாபாத்திரங்களில் நடித்தால் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் பத்து வருடங்களாக அவர் மக்கள் பார்வையில் இருக்கிறார். மக்கள் பார்வையில் இருக்கிற நடிகை நடித்தால்தான் அது பெண் சார்ந்த படமாக இருக்கும். அப்போதுதான் பெரிய ஒப்பனிங் கிடைக்கும். நயன்தாராவுக்கு கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments