ஞாயிறு கொண்டாட்டம்

திருவிளக்கு சொல்லும் உண்மைகள்

நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனை வழிபட திருக்கோயிலுக்குச் செல்கிறோம்.

கி.ஸ்ரீதரன்


நமக்கு நல்வாழ்வு அளிக்கும் இறைவனை வழிபட திருக்கோயிலுக்குச் செல்கிறோம். இறைவழிபாடு மட்டுமல்லாமல், சிற்பம், ஓவியம், செப்புத்திருமேனி வார்ப்பு, இசை, நடனம் போன்ற நுண்கலைகள் செழித்து வளர்வதற்கு திருக்கோயில்கள் பெரிதும் உதவியிருக்கின்றன.

திருக்கோயில்களில் விளக்குகள் ஏற்றுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறையில் விளக்குகள் எப்பொழுதும் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும். இதனை "நந்தா விளக்கு' எனக் கூறுவர். திருக்கோயில்களில் விளக்குகள் எரிப்பதற்காக தானம் அளிக்கப்பட்ட செய்தியினைப் பெரும்பாலான கல்வெட்டுகள் கூறுகின்றன.

இறைவன் சந்நிதி அல்லது அதற்கு முன்னதாக பாவை விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளி விடுவதை பார்த்திருப்போம். அழகிய பெண்ணொருத்தி தனது கரங்களில் அகல் விளக்கு ஏந்திய நிலையில் காணப்படுவதே "பாவை விளக்கு" எனப்படும். இவை அழகிய வேலைப்பாட்டுடன் கலை அழகும் மிக்கதாகக் காணப்படும்.

இவ்விளக்கினை "தீபலட்சுமி',  "தீப நாச்சியார்',  "திருவிளக்கு நாச்சியார்' எனவும் அழைப்பர். தோளிலே பச்சைக்கிளி மற்றும் அழகிய தலை அலங்காரத்துடன் தொய்யகம், பூரப்பாளை, புல்லகம், (சந்திர பிரபை - சூரிய பிரபை), சடைத்திருகு,கடிப்பு என்று காதணி,  கழுத்திலே தாலி,  கண்டிகை,  சரப்பளி, தோள்வளை, கைவளை,  கடகம்,  கை விரல்களில் மோதிரங்கள்,  இடையில் மேகலை,  கால்களில் தண்டை,  கால் விரலில் மெட்டி போன்ற நகைகள் அணிந்தும்,  அழகிய பின்னல் சட்டையுடன் காட்சித் தரும் இவ்விளக்குகள் கோயிற்கலை வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்குகின்றன.

இலக்கியங்களில் இது போன்று பாவை விளக்குகள் தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்து வந்தது பற்றி சங்க இலக்கியங்கள் வழியாகவும் அறிந்து கொள்கிறோம். பாவை விளக்கினை வைத்திருந்தது பற்றி முல்லைப்பாட்டு (85 - 86) கூறுகின்றது.
"பாவை விளக்கில் பரூ உச்சுடர் அழல இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து'
இத்தகைய பாவை விளக்குகளை யவனும் நாட்டு கலைஞர்களும் உருவாக்கினார் என்பதை நெடுநல்வாடை (101 - 104) கூறுகிறது.

"யவனர் இயற்றிய வினைமாண் பாவை ஏற்று ஐ அகல் நிறைய நெய் சொரிந்து பரூஉத்திரி கொலீ இய' இதே செய்தியை பெரும்பாணாற்றுப் படையும் 315  318 தெரிவிக்கின்றது.

"யவனர் ஓதிம் விளக்கின் உயர் மிசைக் கொண்டவைகுறு மீனிற்பையத் தோன்றும்'

பாவை விளக்குகளைப்பற்றி பெருங்கதையும் குறிப்பிடுவதைக் காணலாம்.

திருக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளும் பல அரிய செய்திகளைக் கூறுகின்றன. தஞ்சை அருகே உள்ள திருவையாறு கோயிலில் காணப்படும் கல்வெட்டில் "மலையான்சியல் விளக்கு',  "சோழச்சியல் விளக்கு'  (பாவை விளக்கு போன்றது) "ஆர்க்குட விளக்கு',  "அனந்தலை விளக்கு' ஆகிய விளக்குகளை ராஜராஜனின் தேவி உலகமகாதேவி அளித்தாள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

திருவாரூரில் ராஜராஜசோழனின் மைந்தனான  ராஜேந்திர சோழன் தனது காதலி அணுக்கியர் பரவை நங்கையுடன் திருவாரூர்த் திருக்கோயிலுக்கு வந்து வீதிவிடங்கப் பெருமானை வணங்கினான். தான் நின்று வழிபட்ட இடத்தில் நினைவாக "குத்து விளக்கு' ஒன்றினை ஏற்ற தானம் அளித்தான். மேலும் இக்கோயிலில் "பச்சைப் பாவை உமை நங்கை' , "பாவை சரியாமுலை நங்கை'  என்ற பெயர் கொண்ட இரு பாவைவிளக்குகளையும் தனது காதலியின் விருப்பப்படி அமைத்தான் எனவும் வரலாற்றுச் சான்றுகளால் அறிகிறோம்.

கும்பகோணம் அருகில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் மராத்தியர் காலத்தைச் சேர்ந்த அழகிய பாவைவிளக்கு இன்றும் வழிபாட்டில் உள்ளது. அம்முனு அம்மணி என்ற பெண் மராத்திய மன்னன் பிரதாப சிம்மன் மீது கொண்ட காதல் நிறைவேறியது அழகிய பாவை விளக்கினை இக்கோயிலுக்கு செய்தளித்தாள். தனது வேண்டுதல் நிறைவேறவும் நிறைவேற்றியதற்கு நன்றி ஆகவும் எப்பொழுதும் கோயிலில் தீப சேவை செய்து கொண்டிருக்கும் நோக்கத்துடன் பாவை விளக்குகள் திருக்கோயில்களில் அமைக்கப்பட்டன என்பதை அறிய முடிகிறது.

இது கதை அல்ல! அந்த பாவை விளக்கின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி அக்காதல் கதையை எடுத்துக்கூறுகிறது. தனது உருவத்தையே பாவை விளக்கு தீபம் ஏந்தும் பணியினை இன்றும் செய்து வருவதை காணலாம். இது மட்டுமா! அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பாவை விளக்கின் எடை 411 சேர் ஆகும். இந்த வார்ப்பு வேலை செய்த சிற்பியின் பெயர் "கன்னார அரிய புத்திரி பத்தர்" என்பதையும் குறிப்பிடுகிறது. அரிய கலைப் பொக்கிஷம் இந்த பாவை விளக்கு!

தமிழகத்தின் தென்பகுதியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி,  ஸ்ரீவைகுண்டம் போன்ற ஊர்களில் உள்ள பலத்திருக்கோயில்களில் மண்டபத்தூண்களிலும் இது போன்ற பாவை விளக்குகளை அமைக்கும் வழக்கத்தைக் காணலாம். திருக்கோயில்களுக்குச் செல்லும் பொழுது வரலாறு கூறும் கலையழகு மிக்க பாவை விளக்குகளைக் கண்டு மகிழ்வோம்! போற்றிப் பாதுகாப்போம்!!

(தொல்லியல்துறை - பணி நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT