முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மயிலாப்பூர் மார்க்கெட்டில்...

அண்மையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க,  சென்னைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூரில் காரில் சென்றபோது,  திடீரென காய்கறிகளை வாங்கிய நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:

அண்மையில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க,  சென்னைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூரில் காரில் சென்றபோது,   திடீரென காய்கறி சந்தையில் காய்கறிகளை வாங்கிய நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.

அவருக்கு காய்கனி வாங்கும் எண்ணம் எப்படி வந்தது? , அங்கே என்ன நடந்தது? என்று உடன் சென்ற கோவை தெற்கு எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனிடம் கேட்டபோது, கூறியதாவது:

""நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளவு குறைவாகத்தான் சாப்பிடுவார்.  இருந்தாலும், மிகவும் ரசித்து,  ருசித்து சாப்பிடுவார்.  அவருக்கு கீரை வகைகள் மிகவும் பிடிக்கும்.

தில்லியில் அவரது இல்லத்தில் உள்ள தோட்டத்தில் வெண்டை  உள்ளிட்ட சில காய்கறிச் செடிகள் இருக்கின்றன.   அவர் நன்றாகச் சமைப்பார். 

கரோனா பொது முடக்கக் காலத்தில் வீட்டுப் பணியாளர்கள் வர முடியாதபோது,  அவரும்,  அவரது மகளும் சமைத்து சாப்பிட்டனர்.  வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கான உணவில் ஆந்திரம்,  தமிழ்நாட்டு சமையல் ஐட்டங்கள் இடம்பெறும்.

தில்லியில் காய்கறி சந்தையில் முளைக்கீரை,  மணத்தக்காளி போன்றவை கிடைப்பதில்லை என்று நிர்மலா சீதாராமன்  சொன்னார்.  மதிய உணவுக்குப் பின்னர்,   60-ஆவது  பிறந்த நாள் கொண்டாடிய எனது கணவருக்கு வாழ்த்து சொல்ல,  எங்கள் வீட்டுக்கு வருவதே நிதி அமைச்சரின் திட்டம். 

வீட்டுக்குப் போகிற வழியில் மயிலாப்பூரில் காய்கறி சந்தை இருக்கிறது. அங்கே நல்ல பசுமையான காய்கறிகளும், கீரை வகைகளும் நிறையகிடைக்கும்.  வாங்கிக் கோண்டு போகலாமே!  என்று சொன்னதும் உடனே சம்மதித்தார்.  

சந்தையில் அவர் காரிலிருந்து இறங்கியபோது, அங்கே இருந்தவர்களுக்கு இவர் எதற்காக இங்கே திடீரென்று வந்திருக்கிறார்?  என்று இனிய ஆச்சரியம். பாதுகாப்புக்கு உடன் வந்த காவலர்களைப் பார்த்தவுடன் சில காய்கறிக் கடைக்காரர்கள் பயந்துவிட்டனர்.

"இங்கே  ஏன் கடைபோட்டீர்கள்?' என்று எல்லாவற்றையும் எடுத்துக் கோண்டு போகப் போகிறார்கள் என நினைத்துவிட்டனர். அப்புறமாக விஷயம் தெரிந்தவுடன், அவர்களது பயம் வியப்பாக மாறிவிட்டது.

மத்திய அமைச்சர் என்ற பந்தா ஏதுமில்லாமல்,  ரொம்ப எளிமையாகவே காய்கறிக் கடைக்காரப் பெண்மணியோடு பேசினார்.  பொதுவாக, விலை விவரங்களைக் கேட்டார்.  

"கருணைக் கிழங்கு தில்லியில் கிடைப்பதே இல்லை!'  என்று சொல்லி, தானே சேகரித்து எடை போடச் சொன்னார்.  இரண்டு கிலோ வாங்கிய பிறகு, சுண்டைக்காயை வாங்கினார்.

"தண்டுக்கீரை இருக்கா?'  என்று கேட்டு இல்லாததால்,  முளைக்கீரை, மணத்தக்காளிக் கீரைகளை வாங்கினார்.  மொத்தமாக, சுமார் ரூ. 200 ஆகியிருக்கும்.  இதற்கான பணத்தை அவரது செயலாளர் உடனே அளித்தார்.

அடுத்து, வியாபாரிகளிடம் "வியாபாரம் எப்படி நடக்கிறது?,  மாத வருமானம் எவ்வளவு கிடைக்கிறது? , பிரச்னைகள் என்னென்ன? ,  அரசிடம் தேவைப்படுவை என்ன?' போன்ற விஷயங்களைஅவரிகளிடமே அமைச்சர் கேட்டுத் தெரிந்துகொண்டார். அங்கிருந்த பொதுமக்களில் சிலர், தயக்கம் ஏதுமில்லாமல் சந்தித்ததில் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அமைச்சரைப் பார்த்த பொதுமக்களில் பலர் உடனே தங்கள் கைப்பேசியில் போட்டோ, விடியோ எடுத்தனர்'' என்றார்.

காய்கறி சந்தையில் இருந்து நிர்மலா சீதாராமன் கிளம்பியபோது,   அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். 

திருச்சியைப் பூர்விகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன், தனது திருமணத்துக்குப் பின்னர் ஹைதராபாத்துக்குக் குடிபெயர்ந்தார். தற்போது தில்லியில் வசித்துவருகிறார்.

தமிழகத்துக்கு அடிக்கடி வருகை தரும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார்.  இந்த முறை அவரது சென்னை வருகையின்போது,  காய்கறி சந்தையில் காய்கறி வாங்கியது, வியாபாரிகளிடம் பேசியது பெரிய பரபரப்பையே ஏற்படுத்திவிட்டது. 

சமூக ஊடகங்களிலும் விவாதமாகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.