ஞாயிறு கொண்டாட்டம்

பனை ஓலையில் பயனுள்ள பொருள்கள்..!

பனை ஓலைகளில் பல்வேறு விதவிதமான பொருள்களைச் செய்யும் திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதி, அதை சந்தைப்படுத்தியும் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

சக்ரவர்த்தி

பனை ஓலைகளில் பல்வேறு விதவிதமான பொருள்களைச் செய்யும் திருவண்ணாமலையைச் சேர்ந்த தம்பதி, அதை சந்தைப்படுத்தியும் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

இயற்கையாகக் கிடைக்கும் மூங்கிலைக் கொண்டு இருக்கைகள், படுக்கைகள், வீட்டுக்கான பயன்பாட்டுப் பொருள்களைச் செய்வது வழக்கம். தென்னை ஓலைகளில் பந்தலுக்குப் பயன்படும் தட்டிகள், கிடுகு, பெருக்குமாறு, தேங்காய் சிரட்டை கொண்டு கப்புகள், சட்டைப் பொத்தான்கள் உள்பட பல பொருள்களையும் செய்கின்றனர். ஆனால், பனை ஓலையில் பலதரப்பட்ட பயனுள்ள பொருள்கள் செய்யப்படுகின்றன என்றால் ஆச்சரியம்தானே!

திருவண்ணாமலையைச் சேர்ந்த நீலவேணி என்ற இளம்பெண் தனது கணவர் கார்த்தியின் வழிகாட்டலுடன் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பெண்கள் அணியும் காதணிகள், கழுத்து நகைகள், ஒட்டியாணம் போன்றவற்றை உருவாக்கியதுடன் அவற்றை விற்பனையும் செய்கிறார்.

இதுகுறித்து நீலவேணி கூறியதாவது:

""எனக்கு 32 வயதாகிறது. கணிதத்தில் முதுகலைப் பட்டதாரி. பி.எட். படிப்பையும் முடித்துள்ளேன். இரு பெண் குழந்தைகள்.

அரசு வேலை கிடைக்கவில்லை. சொந்தமாக உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்கிறோம். பாரம்பரிய அரிசி வகைகள், உளுந்து போன்ற பருப்பு வகைகளையும் பயிரிடுகிறோம்.

திருவண்ணாமலை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் தொடர்பான கண்காட்சிகள் நடக்கும்போது, அதில் பங்கேற்போம்.

அங்கிருக்கும் அரங்குகளில் இருக்கும் பொருள்களைக் கண்டு, தென்னை, பனை ஓலைகளில் வழக்கம்போல வீட்டுக்குப் பயன்படும் பொருள்களைத் தாண்டி பெண்களுக்கான நகைகளை பெண்களுக்குப் பிடித்த வடிவில் செய்ய முயற்சித்து ஓய்வு நேரத்தில் ஆறுமாத காலமாகச் செய்து வருகிறோம். அணிகலன்களைப் பொருத்து ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கிறோம்.

பனை ஓலைகள் திருவண்ணாமலை வட்டாரத்தில் கிடைப்பதில்லை. அதனால் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தருவிக்கிறோம்.

ஓலைகளை நீளமாக அகலம் 2 மி.மீ. முதல் 3 மி.மீ அகலத்தில் கிழிக்க வேண்டும். அதை வைத்துதான் கம்மல், தோடு, ஜிமிக்கி செய்வோம். அதில், செயற்கை கற்களைப் பசை வைத்து ஒட்டி அழகு கூட்டுவோம். மனப் பெண் அணியும் ஒட்டியாணம் அதிகமாக விற்கிறது. மூத்த மகள் நாங்கள் ஓலை பின்னுவதை பார்த்து தானே ஓலை பின்னாக கற்றுக் கொண்டிருக்கிறாள்.

பெண்கள் அணிகலன்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் தேவையை சமாளிக்க, மகளிர் குழு ஒன்றை அமைத்து குழுவாகச் செயல்பட யோசித்து வருகிறோம்'' என்கிறார் நீலவேணி.

கார்த்திக் கூறியதாவது:

""டிப்ளமோ படித்திருக்கிறேன். இருப்பினும், இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம். தென்னை பணய ஓலைகளைக் கொண்டு திருமண அரங்கு அலங்காரம் செய்யும் வேலையையும் செய்து வருகிறேன்.

திருமண மேடை மங்களகரமாக பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்காக, தென்னை ஓலையில் மேடை அலங்காரம் செய்து கொடுக்கிறேன். பச்சை தென்னை ஓலை பின்னணியில் பார்வையாளார்களைக் கவர பனை ஓலையில் செய்த நட்சத்திரங்களைப் பொருத்துவேன்.

பெரிய, சிறிய சிவலிங்கங்களைச் செய்து கோயில்களில் வைப்பேன்.

எங்களது சொந்த கிராமமான வேடந்தவாடியில் உள்ள புகழ் பெற்ற வேதநாதீஸ்வரர் கோயில் திருவிழாவின்போது, பனை, தென்னை ஓலைகளைக் கொண்டு செய்த 16 அடி உயரமான சிவலிங்கம் பலரையும் பரவசப்படுத்தியது.
மூன்று அடி உயரமுள்ள சிவலிங்கத்தை பனை ஓலையில் செய்து, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு நினைவுப் பரிசாக அளித்தேன்.

திருமண சீர்வரிசைகளையும் பனை ஓலைகளில் செய்கிறேன்.

பாரம்பரிய அரிசி வகைகளில் அதிரசம் தயாரித்து விற்பனை செய்கிறேன்.
தென்னை ஓலையில் பெண்கள் கொண்டு செல்லும் பைகள், பழங்கள் வைக்கும் பழக் கூடைகள் போன்றவற்றையும் செய்து விற்கிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

இந்தியா - அமீரகம் இன்று மோதல்

காலிறுதியில் நிகாத் ஜரீன்

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு

SCROLL FOR NEXT