ஞாயிறு கொண்டாட்டம்

வரலாறு காட்டும் திரிசூலம்

சிவன் தம் கைகளில் மான், மழு, சூலம், கபாலம் இவற்றை ஏந்திக் காட்சியளிப்பார். இவற்றில் சூலம் ஒரு தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறது.

கி.ஸ்ரீதரன்

சிவன் தம் கைகளில் மான், மழு, சூலம், கபாலம் இவற்றை ஏந்திக் காட்சியளிப்பார். இவற்றில் சூலம் ஒரு தனிச் சிறப்பு பெற்று விளங்குகிறது.

சூலம் ஏந்தியிருக்கும் இறைவனைக் கனல் சூலத்தார், சூலஞ்சேர் கையினான், சூலதரன், சூலப் படை எம்பெருமான் சூலபாணி, திரிசூலப் படையாளர், "படைத்தலை சூலம் பற்றிய கையர், "அங்கையில் மூவிலை வேலர்' என்றெல்லாம் திருப்பதிகங்களில் போற்றப்படுகின்றது.

சூலம்: ஒரு தண்டத்திலிருந்து மூன்றாகக் கிளைத்த அமைப்புடையது சூலம், இது பிறைச்சந்திரன் போன்ற வட்டப் பகுதியின் நடுவில் கூரிய கத்தி சொரு கிய தோற்றமுடையதாகும். இதனை மூவிலை நெடுவேல், முத்தலைவேல் என்றும் கூறுவர். இவை மூன்று சக்திகளான ஆக்கல். அழித்தல், காத்தல் ஆகியவற்றைக் குறிப்பதாகச் சிற்ப நூல்கள் குறிக்கின்றன.

சூலத் தேவர் பல்வேறு வடிவங்களில் அஸ்திர தேவர், சூலபானி, சூலதேவர் எனப் பலவாறு அழைக்கப்படுகிறார்.  சிவபெருமானிடம் மட்டுமல்லாமல் துர்க்கையின் கரத்திலும் சூலப்படையைக் காணலாம்.

கணேச இரதம்: மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தவம் சிற்பம் அருகே கணேச இரதம் என அழைக்கப்படும் இரதக் கோயில் ஒன்றைக் காணலாம். அக்கோயிலில் காணப்படும் கல்வெட்டில் "அத்யந்த காமன்' என்ற மன்னன் தனது குடிமக்களுடைய விருப்பங்கள் எல்லாம் பூர்த்தியடைய வேண்டி சிவனுக்கு இக்கோயிலை எடுப்பித்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தின் மீது பார்த்தால் கல்லினாலேயே அமைக்கப்பட்ட சூலத்தைக் காணலாம். 

பல்லவர், முத்தரையர் கால குகைக் கோயில்களில் துவாரபாலகர் (வாயிற் காவலர்) சிற்பங்களைக் காணலாம். இவற்றில் ஒரு சில சிற்பங்களில் தலைக்கு இருபுறமும் கொம்பு போன்ற அமைப்பு காணப்படும். சிவனின் சின்னமான சூலதேவரின் உருவத்தைக் காட்ட முயன்றிருப்பதைக் காணலாம். தஞ்சைப் பெரிய கோயில் வாயிற்காவலர் சிற்பத்தில் தலையில் சூலம் இருப்பதைக் காணலாம்.

சூலமங்கலம்:  சோழர் காலச் சிற்பம் ஒன்று தஞ்சை மாவட்டத்தில் சூலமங்கலம் என்ற ஊரில் காணப்படுகிறது. இது சூலபாணி என அழைக்கப்படுகிறது. இரு கைகளை மடக்கிக் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தலைக்கு மேலே திரிசூலம் காணப்படுகிறது.

இதேபோன்ற சிற்பம் ஒன்று திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) கோயிலிலும் உள்ளது. இதன் தலைக்குப் பின்புறம் சூலம் காணப்படும். அச்சிற்பம் பிற்காலப் பாண்டியர் காலச் சிற்பம் ஆகும். சூலதேவரை மனித உருவமாக அமைத்த பாங்கினை இச்சிற்பங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

அஸ்திர தேவர் - பொற்கொள்கை தேவர்: கோயில்களில் ஸ்ரீபலி என்னும் வழிபாடு நடக்கும். சிவாலயங்களில் இவ்வழிபாட்டின்போது சூலத்தை எடுத்துச் செல்வர். இதனை "அஸ்திர தேவர்' எனக் கூறுவர். எல்லா சிவாலயங்களிலும் இது காணப்படும். சிலவற்றில் வெறும் சூலம் மட்டும் இருக்கும்.  சிலவற்றில் சூலத்தின் நடுவே சிவபெருமான் நந்தியுடன் காட்சியளிப்பார்.  "தீர்த்தவாரி' என்ற நிகழ்ச்சிக்காக இறைவன் ஆற்றுக்குச் செல்லும்போது சிவனின் பிரதிநிதியாகச் செல்லும் அஸ்திர தேவருக்கே உரிய வழிபாடு நடக்கும்.

அஸ்திர தேவர் வீதிகளில் வலம் வந்த பின்பே. இறைவன் வீதியுலா செல்வது வழக்கமாக உள்ளது. திருவையாறு, தஞ்சாவூர் கோயில்களில் ஸ்ரீபலி. எழுந்தருளுவதற்காக அஸ்திர தேவர் பொன்னால் செய்து அளிக்கப்பட்டார். இவ்வுருவம் "பொற்கொள்கைத் தேவர்' எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது அஸ்திர தேவர் வழிபாட்டுக்காகத் தானம் அளிக்கப்பட்டதாக திருவாவடுதுறை,  திருப்புகலூர் கோயிற் கல்வெட்டுகள் கூறுகின்றன.

சூலக்கல் - கல்வெட்டுகளில்..: பல கிராமங்களில் வயல்களுக்கு நடுவே சூலம் பொறிக்கப்பட்ட கற்கள் நின்று கொண்டிருப்பதை இன்றும் காணலாம். சூலக்கல் என்று இதனை அழைப்பர். சிவன் கோயிலுக்கு அளிக்கப் பெற்ற நிலங்களைக் குறிப்பதற்குச் கல்லில் சூலத்தைப் பொறித்து நடுவார்கள். 

கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லையை வகுப்பதற்கு அரசு அதிகாரி ஒருவர் பெண் யானை மீதேறி மக்கள் பின் தொடர நிலத்தின் நான்கு எல்லைகளையும் சுற்றி வருவார். பின்னர் நான்கு எல்லைகளிலும் எல்லைக் கல்லும், கள்ளியும் நடப்படும். நிலம் தானமாக அளிக்கப்பட்ட செய்தியைக் குறிக்கும் போது சூலக்கல்லுக்கு கிழக்கு,  திருச்சூல தேவர் எழுந்தருளி இருக்கின்ற இடத்துக்கு வடக்கு என எல்லைகள் குறிக்கிடப்படும். மேலும் தானமளிக்கப்பட்ட நிலம் கோயில் நிலம் என்பதற்கு அடையாளமாக திருச்சூல ஸ்தாபனமும்  செய்து கல்லிலும் செம்பிலும் பார்க்க வெட்டவும்" என மாகறல் கோயில் கல்வெட்டு குறிப்பது சிறப்பானது. மேலும் சில சூலக்கற்களில் கோயிலின் பெயர் கல்வெட்டாகக் குறிக்கப்பட்டுள்ளதையும் நந்தியின் சிற்ப வடிவத்தையும் காணலாம்.

சூலக் கற்களில் பொதுவாக சூலம் மட்டுமே காணப்படும். திருக்கோவிலூர் அருகே சில கற்கள் சூலமும்,  அதற்கு மேலே குடையும், சூலத்தின் இரு புறமும் விளக்குகளும் கூடிய அமைப்பில் காணப்படுகின்றன.  முன்னூரில் காணப்படும் சூலக்கல்லில் சூலத்தின் இருபுறமும் சாமரம் காணப்படும்.

கோவை மாவட்டத்தில் காணப்படும் சில சூலக்கற்களில் கீழே முதலை செதுக்கப்பட்டுள்ளது. அவினாசி திருத்தலத்தில் நடந்த முதலைவாய்ப் பிள்ளை கதை அப்பகுதியில் சிறப்பாகக் கருதப்படுவதால் அவ்வரலாறு சூலக்கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

சூலவரி: அக்காலத்தில் பல வரிகள் வழக்கத்திலிருந்தன. "சூலவரி' சூலவரி காணிக்கை என்ற ஒருவகை வரிகள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வரும் வருவாயை திருச்செங்காட்டங்குடி இறைவன் உத்தராபதி நாயனார்க்கு அளித்ததாகக் கூறுகிறது. இத்தகையச் செய்தியைத் திருத்துறைப்பூண்டி கோயில் கல்வெட்டும் கூறுகிறது.

சூலக்குறி பொறித்தல்: முதலாம் குலோத்துங்கன் காலத்தில் அழகிய பாண்டிய பல்லவராயன் என்பவன் தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சிலரைத் திருவல்லம் கோயிலில் பணிபுரியுமாறு செய்வித்தான். அவ்வாறு பணியில் சேர்ந்தவர்களுக்கு "சூல இலச்சினை பொறிக்கப்பட்டதாக அவ்வூர்க் கல்வெட்டு கூறுகிறது.

இன்றும், பலரும் தாம் சார்ந்துள்ள சமயச் சின்னங்களைத் தம்தோளில் பொறித்துக் கொள்வதைக் காண்கிறோம். சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமான் தமது தள்ளாத வயதில் பல கோயில்களுக்கும் சென்று வணங்கினார். நடு நாட்டுத் தலங்களுள் ஒன்றான திருப்பெண்ணாகடத்துக்கு வந்து "பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்  என்று உளமாற இறைவனைத் துதித்து மூவிலைச் சூலம் என்மேல் பொறி மேவு கொண்டல் துன்னார் கடந்தையில் தூங்கானை மாடச்சுடர் கொழுந்தே" என்று விண்ணப்பம் செய்து தம் திருமேனியில் இடபக்குறியும்'  சூலக்குறியும் பெற்றதாக வரலாறு கூறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT