கமுதியில் ராஜஸ்தான் கம்பு பயிர்!
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி பூமி, வானம் பார்த்த பூமி என்பர்.
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி பூமி, வானம் பார்த்த பூமி என்பர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டியைச் சேர்ந்த விவசாயி சேதுபதி மகன் சோலைராஜ், ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்தில் விளையும் கம்பு பயிர்களைப் பயிரிட்டு மகசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பயிரிட்டுள்ளார். தற்போது முழு வளர்ச்சியடைந்து கம்பு சாகுபடியை முடித்து, அறுவடை செய்துள்ளார்.
சோலைராஜ் கூறியதாவது:
""ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். ஒரு லட்சம் ஹெக்டர் நிலத்தில் பருவ மழையை மட்டுமே நம்பி நெல் விவசாயம் செய்து வருகின்றனர். கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமே ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.
குடிநீருக்கே பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தின் மீது ஆர்வம் இல்லாமல் விளைநிலங்களை தரிசு நிலங்களாக வைத்துள்ளனர்.
இதனை மாற்றும் எண்ணத்தில் கோடைக்காலத்துக்கு ஏற்ப மாற்று வகை விவசாயத்தை மேற்கொள்ள முடிவு செய்து, நண்பரின் உதவியுடன் ராஜஸ்தானில் கிலோ ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு கிலோ கம்பு விதைகளை வாங்கி வந்து, இரு ஏக்கரில் பயிரிட்டேன்.
ஏக்கருக்கு 4 குவிண்டால் என இரண்டு ஏக்கருக்கு 8 குவிண்டால் கம்பு அறுவடை செய்துள்ளேன். ஒரு குவிண்டால் கம்பு ரூ.4 ஆயிரத்துக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கிறது.
உழவுக்கு பின்னர் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி அடி உரமான யூரியா, டிஏபி ஆகியவற்றை ஒரு முறை பயன்படுத்தினால் மட்டுமே போதும். மிகக் குறைந்த செலவே ஆகிறது.
ஒரு கம்பு ஒரு மீட்டர் நீளம் விளைகிறது. இதனால் ஒரு பயிரில் அதிக விதைகள் கிடைக்கின்றன.
விருப்பமுள்ள விவசாயிகளுக்கும் கிலோ ரூ.500-க்கு மட்டுமே விற்பனை செய்து விவசாயிகளை மாற்று விவசாயத்துக்கு கொண்டு செல்ல ஊக்கப்படுத்துவேன்.
இதுபோன்ற மாற்றுப் பயிரை நடவு செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தி, சிறுதானியங்களுக்கான கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு அரசு அமைத்து கொள்முதல் செய்ய முன் வர வேண்டும்'' என்றார்.