"வி ஒன்' படத்தின் மூலம் நடிகராக வரவேற்பைப் பெற்ற ராம் அருண் காஸ்ட்ரோ அடுத்து இயக்குநராகவும் தடம் பதிக்க வருகிறார். "ஹர்காரா' என்ற பெயரில் இவர் இயக்கி நடித்து வரும் படத்துக்கு பரவலான வரவேற்பு எழுந்துள்ளது. 1800களில் கொல்கத்தாவை தலைமையமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்திய தபால் துறையை களமாக தேர்ந்தெடுத்துள்ளதே இதற்கு காரணம்!
""உயர்ந்தவராக நாம் சுட்டிக்காட்டும் ஒருவரின் வாழ்க்கையை அணுகிப் பார்த்தால் அவருக்குள் இருக்கிற சோகம் புரியும். சோகத்தைத் தொடாமல் யார் வாழ்க்கையையும் சொல்ல முடியாது. மற்ற படங்கள் எல்லாம் மகிழ்ச்சியையே முன்னிறுத்திக்கிட்டிருக்க இந்த படம், நாமெல்லாம் ஒரு காலத்தில் ஹீரோவாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு தபால்காரரின் வரவாற்றை முன்னெடுக்கவுள்ளது. களமும், கதையும் வேறு. இது சமீப படங்களிலிருந்தே முற்றிலும் வேறு படம். பரபரன்னு போற ஆக்ஷன், த்ரில்லர், வாழ்வியல், காதல் என வகையான வரலாற்றுப்பதிவு இது.1800 தொடக்கத்தில் தேனிப்பக்கம் வாழ்ந்த தமிழ் மக்கள் பற்றிய ஒரு வரலாற்றுப்பதிவு இது.
கிராமப் பகுதிகளில் வாழ்ந்த எளிய மக்களைப்பற்றிச் சொல்கிற எந்த பதிவுகளும் இதுவரை இல்லை என்பதுதான் உண்மை. அந்த வேலையை இந்தப்படம் செய்யும். சாமானிய மக்களோட உணவுத்தேடல், திருமணம் உள்ளிட்ட வாழ்வுத்தேடல்களைப் படம் சொல்லப்போகிறது. அதே சமயம் ஒரு தபால்காரர் மலைகளில், வனங்களில், முட்புதர்களில் பட்ட பாடுகள் என்ன என்பதை கண் முன்னே நிறுத்தப் போகிறது. அதை திரைக்கதையாக உருவாக்கறதில மிகப்பெரிய சவால் இருந்தது. இதுக்கான விஷயங்களைத் தேடித்தேடிப் பதிவு செய்தோம். இதைப் பற்றி சொல்ல எந்த ஆவணமும் இல்லை. அதுக்கு மட்டும் ஒன்றரை வருஷம் உழைத்தோம். ஒரு வாழ்க்கைத் தேடலோட பதிவை அதற்கான கட்டமைப்புகளோடு சொல்வது மட்டும் நோக்கமாக இல்லாமல், அதில் இருந்த சாகசங்களை தமிழ் சினிமா ரசிகனுக்குப் பிடிக்கிற திரைக்கதை அமைப்பில சொல்வதும் முக்கியமாக இருந்தது. படத்தின் முதல் பதினைந்து நிமிஷம் வருகிற உணர்வு தேடல் காட்சி ஒன்றே பரபரப்பான சாகசமாக இருக்கும்.
உடல் உழைப்பில்லாமல் இன்றைக்கு நாமெல்லாம் அஞ்சரை அடிக்கு சுருங்கிப்போக, பல நூறு வருஷங்களுக்கு முன் வாழ்ந்த நம்ம மூத்தகுடி அப்படி இல்லை. ஆறடி உயரமும், அகன்ற தோள்களுமாக தெரிந்தார்கள். அதற்கு நானே பொருத்தமாக இருப்பதாக தோன்றியதால் நடித்தேன். அசாத்திய உழைப்பு படத்தோட தேவையைப் பூர்த்தி செய்தது. வெயிலில் வெற்றுடம்பு, வெறுமையான கால்களோடு காடு மேடெல்லாம் அலைந்ததில், ஒருநாள் கூட ரத்தம் பார்க்காம ஷூட்டிங் முடியவில்லை.
குரங்கணி மலை வாழ் பெண்ணாக கௌதமி சௌத்ரி என்ற புதுமுகம் பொருந்தி வந்தார். இது இரண்டு காலக் கட்டதை இணைக்கிற கதை. 1800 தொடங்கி இப்போதைய காலக்கட்டம் எனப் போகும். சமீபத்திய தபால்காரராக காளி வெங்கட் நடிக்கிறார். "பிச்சைக்காரன்' மூர்த்தி, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், நிகோலா ஃபஸ்டர் என நடிகர்கள் துணைக்கு வந்தார்கள். தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு அசாத்தியமானது.
அந்தக்கால சப்தங்கள் வேண்டி பண்டைக்கால பிரிட்டிஷ் இசைக்கருவிகள், மும்பையிலிருந்து பண்டைய புல்லாங்குழல், திருவண்ணாமலையில் தேடி பழங்கால மூங்கில் இசைக்கருவின்னு இதற்கான இசையைத் தந்திருக்கார் ராம் சங்கர்.''
ஒரு ப்ரீயட் ஃபிலிம்.. எப்படி இருந்தது அனுபவம்....
கையில் ஈட்டி, காலில் தோல் தெருப்பு, தோளில் தொங்கும் லாந்தர் விளக்குடன் ஒரு தபால்காரரை பார்க்க முடியுமா? "இவர்தான் முதல் போஸ்ட்மேன்' என்பது போல... தபால் துறையின் வரலாற்றை வேகமாக தேடத் தொடங்கினேன். அது தொடர்பான நண்பர்களை தேடிப் பிடித்தேன். ஒவ்வொரு பயணமும் ஓர் அனுபவத்தைக் கொடுத்தது. அத்தனையையும் கொஞ்சமும் சிதறிடாமல் சேகரித்தேன். அதிக பிரம்மாண்டம் கூடாது, பீரியாடிகல் என்ற விஷயமும் தொலையக் கூடாது என்ற அடிப்படையில், இன்றைய கால கட்டத்தின் எந்தவொரு நிழலும் விழுந்து விடாதபடியும், அன்றைய கால கட்டத்தின் எந்தவொரு நிஜமும் தொலைந்து விடாத படியும் குறிப்புகளில் கவனம் செலுத்தினேன். சண்டைக் காட்சிகள், பாடல்கள் என்று எல்லா விஷயமும் "கமர்ஷியல்' தன்மையுடன் வந்திருக்கிறது.
கதையை கொஞ்சம் சொல்லுங்களேன்....
ஈ.ஐ.சி. எனப்படும் ஈஸ்ட் இன்டியா கம்பெனிக் காரர்கள் தங்களுடைய நிர்வாக வசதிக்காக, 1854இல் போஸ்டல் முறையைக் கொண்டு வருகிறார்கள். இப்போது உள்ளதைப் போல அப்போது வாகன வசதிகள் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. போஸ்ட்மேன்கள் "மெயில் ரன்னர்' என்றழைக்கப்பட்டனர். அவர்களின் வேலை தொடர்ந்து நடை ஓட்டமாகவே கடிதங்கள், பணம், பொருள்களை கொண்டு போய் உரிய முகவரியில் சேர்க்க வேண்டும். நடந்து போகக்கூடாது. தாமதமாகி விடும். ஓடவும் கூடாது விரைவில் சோர்ந்து விடும் என்பதுதான் இதற்கான முக்கிய விதி. தபாலில் கொண்டு வரப்படும் பணத்தை யாரும் வழி மறித்து கொள்ளையடித்து விடக்கூடாது என்பதற்காக ஒரு கத்தியையும், இருட்டு பயணத்தின் போது வெளிச்சத் துணையாக ஒரு லாந்தர் விளக்கையும், கால்களுக்கு கனமான ஒரு தோல் செருப்பையும் போஸ்ட் மேன்களுக்கு கொடுத்திருந்தனர். இதைப் பின்னணியில் கொண்டு அந்தக் காலகட்டத்தின் பின்னணியில் அமைந்த ஒரு கதைதான் இது.
ஹர்ஹாரா என்றால்....
ஈஸ்ட் இன்டியா கம்பெனிக்காரர்கள் போஸ்டர் முறையை கொல்கத்தாவின் கொண்டு வந்த போது, ஹர்ஹாரா என்றுதான் அது அழைக்கப்பட்டது. அதுதான் மொழிக்கேற்ப, சூழலுக்கு ஏற்ப ஆங்காங்கே மாறி வந்தது. இங்கே போஸ்டல், அஞ்சல், தபால் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.