வங்கதேசத்திலும் வாழ்கிறார் காந்தி
இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டு அமுதக் கொண்டாட்டத்தின் அங்கமாகவும், மகாத்மா காந்தியின் தியாக மரணத்தின் 75 -ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையிலும் அவரால் 1932ல் தொடக்கி வைக்கப்பட்ட...
இந்திய சுதந்திரத்தின் 75-ஆம் ஆண்டு அமுதக் கொண்டாட்டத்தின் அங்கமாகவும், மகாத்மா காந்தியின் தியாக மரணத்தின் 75 -ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையிலும் அவரால் 1932ல் தொடக்கி வைக்கப்பட்ட" ஹரிஜன சேவை சங்கம்' என்ற அமைப்பின் சார்பில் காந்திஜி உலக அமைதி பிரசாரப் பயணத்துக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் டாக்டர் சங்கர் குமார் சான்யால் தலைமையிலான 13 பேர் வங்கத் தேசத்துக்கு ஒரு வாரம் சென்று வந்தனர்.
இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவரும், சென்னை தக்கர் பாபா வித்யாலயா செயலாளருமான பி. மாருதி தனது பயண அனுபவம் குறித்து கூறியதாவது:
""நவகாளி ' மாவட்டத் தலைநகரமாகவும் இருக்கிறது. வங்கதேசத்தின் 64 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. மக்கள் தொகை சுமார் 31 லட்சம். ஆண்களைவிட பெண்கள் அதிகம். எழுத்தறிவு 51%.
மேக்னா, டாகாதியா, பெனி, முகுரி, பபானிகஞ்ச் உள்ளிட்ட பல ஜீவநதிகள் பாய்வதால், நெல், சணல், கோதுமை, தென்னை, வெங்காயம், பூண்டு போன்றவை விளைகின்றன.
1946'ஆம் ஆண்டு அக்டோபர்' நவம்பரில் தனிநாடு வேண்டி முஸ்லிம் லீக் விடுத்த அறைகூவலையடுத்து, வன்முறை நிகழ்ந்தது. நவகாளியில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பலியாயினர். மன வேதனையடைந்த காந்திஜி நவகாளிக்குச் சென்று, நான்கு மாதங்களில் 50 கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். அவருடன் "எல்லை காந்தி' என அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கானும் பயணித்தார்.
அப்போது, "பாரிஸ்டர்' பட்டம் பெற்ற ஹேமந்த் குமார் கோஷ் என்ற வங்காளி காளியில் அமைதி ஏற்படுத்தவும், அந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்காகவும் தனது சொத்து முழுவதையும் காந்திஜியிடம் ஒப்படைத்தார். அப்போது துவக்கப்பட்டதுதான் நவகாளி காந்திஜி ஆசிரமம்.
இந்தியா' பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நவகாளியில் இருந்த பல காந்தியத் தொண்டர்கள் இந்தியா திரும்பிவிட்டனர். பாகிஸ்தானிய அரசும் காந்தி ஆசிரமவாசிகளுக்கு பல்வேறு தொல்லைகளையும் அளித்தது. சுமார் 2670 ஏக்கர் நிலத்தைக் கொண்டிருந்த ஆசிரமத்துக்கு , தற்போது 23 ஏக்கர் நிலம் மட்டுமே சொந்தமாக உள்ளது.
ஆசிரம மேலாளராக இருந்த சாரு சௌத்ரி என்ற பெண்மணி, 1963'இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1971'இல் இந்தியாவின் உதவியுடன் வங்கதேசம் உருவான பிறகுதான் புதிய அரசு அவரை விடுதலை செய்தது. அதன் பிறகும் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படாவிட்டாலும், காந்தி ஆசிரமத்தின் பணிகள் தங்கு தடையின்று நடைபெற்று வருகின்றன.
கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாட்டுக்கும் காந்தி ஆசிரமம் கை கொடுத்து வருகிறது. அந்த மாவட்டத்தில் மக்கள் வசதிக்காக ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, ஒற்றுமை நிலவ காந்திஜி ஆசிரமம் பணியாற்றி வருகிறது.
2021'ஆம் ஆண்டு அக்டோபரில் நவகாளி மாவட்டத்தில் துர்கா பூஜையின்போது மத வன்முறை வெடித்தது, காந்திஜி ஆசிரமத்தினர் தலையிட்டு, அமைதிப்படுத்தினர். அது மட்டுமின்றி தனிநபர் பிரச்னைகளையும் காந்தி ஆசிரமம் சமரசம் செய்து வைக்கிறது. இதுவரை 28 ஆயிரம் பிரச்னைகளைத் தீர்த்துள்ளனர் என்று அறிந்தபோது, வியப்படைய செய்கிறது.
ஆசிரம வளாகத்தில் உயரமான கைத்தடியுடனான காந்திஜி சிலை கம்பீரமாக நிற்கிறது. நவகாளியில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ண சேவாசிரமும் பல நற்பணிகளைச் செய்துவருகிறது. அந்தப் பகுதியில் பத்மா நதியின் குறுக்கே பிரம்மாண்டமான பாலம் கட்டப்பட்டுள்ளது. சீனத் தொழில் நிறுவனம் கட்டி இருக்கும் அந்த பல அடுக்குப் பாலத்தைக் கட்டிய தொழிலாளர்களில் கணிசமானவர்கள் பெண்கள்.
கிராமங்கள்தோறும் பெண்கள் அமைப்புகள் சுறுசுறுப்பாக இயங்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தப் பாடுபட்டு வருகின்றன. கிராமப் பெண்களுக்கு சிறு கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்கு சிறப்பு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
டாக்காவில் நாடாளுமன்றத்துக்கும் சென்றோம். உள்துறை அமைச்சரது அலுவலக அறையில் வங்கதேசம் உருவாவதற்கு முழு முதல்காரணமான இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் படம் இருந்தது.
சந்தித்த அனைவருமே இந்தியாவின் மீது பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டிருப்பதை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தனர். இந்தியாவின் உலக அமைதி நடவடிக்கைகளைப் பாராட்டினர்.
வங்காள தேசத்துக்கும், இந்தியாவுக்கும் நல்லுறவு நிலவினாலும் விசா வழங்குவதில் இந்தியா மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது.
முஜிபுர் ரஹ்மான் நினைவிடத்துக்குச் சென்றோம். வீட்டிலேயே அவரை பாகிஸ்தானிய அரசின் உத்தரவின்பேரில், ராணுவ உடையில் வந்தோர் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாகத் துளைத்து எடுத்த கொடூரமான சம்பவத்தை கனத்த சோகத்துடன் ஓர் ராணுவ அதிகாரி நினைவு கூர்ந்தபோது, எங்களுக்கு கண்கள் கலங்கிவிட்டன'' என்றார்.