முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மீண்டும் பயோபிக்

சூர்யா நடித்து வெளிவந்த படம் "சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை, அவரின் போராட்டம், அதன் பின் அவர் வாழ்க்கையில் கிடைத்த வெற்றி என பயோபிக் படமாக இது உருவானது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
பகிர்:


சுதா கங்கோரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் "சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத் வாழ்க்கை, அவரின் போராட்டம், அதன் பின் அவர் வாழ்க்கையில் கிடைத்த வெற்றி என பயோபிக் படமாக இது உருவானது. கரோனா பொது முடக்க காலத்தில் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 

சூர்யாவுக்கும் பெரும் திருப்பு முனை உண்டானது. தேசிய விருது மேடையை இப்படம் அலங்கரித்ததுடன், சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுதந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பயோபிக் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.  "சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. அவர் ஜோடியாக ஹிந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்துதான் பயோபிக் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார் சூர்யா. பிரிட்டானியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை வாழ்க்கை கதையில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை பிருத்விராஜ் எழுதி இயக்க இருக்கிறார்.கடந்த சில நாள்களுக்கு முன் பிருத்விராஜை, சூர்யாவும் ஜோதிகாவும் சந்தித்துப் பேசினர். அது இதற்கான சந்திப்புத்தான் என்றும் கூறப்படுகிறது. 

முறைப்படி பிரிட்டானியா நிறுவனத்தின் மறைந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளையின் குடும்பத்தை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சில நாள்களில் சூர்யா, ஜோதிகா, பிருத்விராஜ் மூவரும் ராஜன் பிள்ளையின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இதர நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →