"ஆழஅமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழிமுகவாது .... ...'- இது அவ்வையாரின் மூதுரையில் உள்ள ஓர் அருமையான பாடல். "ஆழமான கடலில் நிறைய நீர் இருக்கிறது என்றபோதிலும், ஒரு படி கொள்ளளவு கொண்ட ஒரு படியை வைத்துக் கொண்டு நான்கு படி நீரை முகர்ந்து விட முடியாது' என்று சொல்கிறார் அவ்வையார்.
இயற்பியலில் பாஸ்கல் விதி வருவதற்கு பல்லாண்டுகள் முன்பாகவே தமிழ்ச் சமூகத்தில் முகவை, அளவை பற்றிய புரிதலுடன், பயன்பாட்டில் இருந்துள்ளதை நமக்கு எடுத்துக் காட்டும் பாடல் இது. தமிழ் இலக்கியங்களில் ஏராளமான அறிவியல் கருத்துகள் இடம்பெற்றுள்ளன என்பதற்கு இதுபோல பல எடுத்துக்காட்டுகளை நம்மால் சொல்ல முடியும் என்றார் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷையன்.
சென்னை அரும்பாக்கம் டி.ஜி. வைணவக் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில், "அறிவியல் பேசலாம் வாங்க!' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான இரு நாள் பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சுதா சேஷையன் பேசும்போதுதான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் இலக்கியம், இதழியல், வணிகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம் ஏற்படுத்தவும், அறிவியல் கட்டுரைகளை எழுத ஊக்குவிப்பதும்தான் இந்தப் பயிலரங்கத்தின் நோக்கமாகும். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 80 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தொடக்க நிகழ்ச்சியில், கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவரும், கருத்தரங்கை நடத்துவதற்கு முக்கிய பங்காற்றியவருமான டாக்டர் உத்ரா துரைராஜன் எழுதிய "கண்டேன் ஆற்றலை', "யாவர்க்குமாம் கல்வி', வி.ரங்கநாயகி எழுதிய "அறிவோம் அறிவியல்', முனைவர் செல்வகோதை நாயகி எழுதிய "இலக்கியத்தளத்தில் அறிவியல் தேடல்' ஆகிய அறிவியல் தொடர்பான தமிழ்ப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து உத்ரா துரைராஜன் கூறுகையில், ""மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு பிராந்திய மொழிகளை வளர்ப்பதற்கும், அறிவியல் உள்ளிட்ட பல் துறை சார்ந்த கருத்தரங்குகளும், பயிலரங்குகளும் நடத்துவதற்கும் நிதியுதவியை அளிக்கிறது. இதன்பேரில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது'' என்றார்.
சென்னை ஐ.ஐ.டி. இயற்பியல் துறையைச் சேர்ந்த டாக்டர் சி.விஜயன் கூறுகையில், ""அடிப்படை அறிவியல் கருத்துகள் மனதில் ஆழமாகப் பதியதாய் மொழிக்கல்வி ஒருசிறந்த கருவி. இது கற்கும் திறனை மேம்படுத்துகிறது. மலையாளத்தில் "வெளிச்சம்' என்று ஒரு புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அது ஒளிபற்றிய கோட்பாடுகள், ஆராய்ச்சிகளை சாமானியர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. அதுபோல தமிழிலும் நிறைய அறிவியல் தொடர்பான புத்தகங்கள் வெளிவர வேண்டும்'' என்றார்.
எழுத்தாளர் சுதாகர் கஸ்தூரி பேசுகையில் ""அறிவியல் புனைவுகள் எழுதுவதற்கு அடிப்படை அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். மொழிப் புலமையைத் தாண்டி, அவற்றை இடத்துக்குத் தக்கவாறு பயன்படுத்த வேண்டும்.
21-ஆம் நூற்றாண்டில் அறிவியல் புனைவுகள் எத்திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றைப் படைக்க இளைஞர்கள் எப்படித் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.
""ஒரு சலவைத் தொழிலாளி வழக்கமான கரி இஸ்திரிப் பெட்டிக்குப் பதிலாகத் தான் இருக்கும் இடத்திலேயே கிடைக்கும் சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும்இஸ்திரிப்பெட்டியைப் பயன்படுத்துவதன் மூலமாகச் செலவையும் மிச்சப்படுத்தி, சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்'' என்றார் திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி மாணவி வினிஷா. இவரது கண்டுபிடிப்புக்கு தேசிய புதிய கண்டுபிடிப்புக் கழகம், டாக்டர் கலாம் விருதளித்த விபரங்களைப்பகிர்ந்துகொண்டார் பத்திரிகையாளர் சந்திரமெளலி.
""ஒருவர் எழுத்தாளராகவோ, பேச்சாளராகவோ ஆவதற்கு தங்கள் மொழிவளத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன்அவசியம்'' என்றார் விவேகானந்த கேந்திரத்தின் பாலசுப்ரமணியம்.
அறிவியல் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை என்பதை எளிய எடுத்துக்காட்டுக்களோடு விளக்கியதுடன், அன்றாட வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கும் அறிவியலை கவனிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் முருகேஷ் கூறினார்.
அறிவியலில் இதழியலுக்கும், இதழியலில் அறிவியலுக்கும் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அறிவியல், வரலாற்றுப் பாடப் புத்தகங்கள், பொதுமக்களுக்கான அறிவியல் புத்தகங்கள் என பலவற்றையும் தமிழில் மொழிபெயர்க்கும் தமிழ்நாடு அரசின் முத்தமிழ் அறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்த தகவல்களை வைணவக் கல்லூரியின் டாக்டர் ரங்கநாயகி விளக்கினார்.
அறிவியல்ஆர்வலரான ரங்கநாதன் கோபு பேசுகையில், ""அன்றாடம் பயன்படுத்தும் மாவு அறைக்கும் கிரைண்டரைக் கண்டுபிடித்தவர் கோவையைச் சேர்ந்த சபாபதி என்பதுகூட நம்மில் பலருக்கும் தெரியாதது துரதிருஷ்டம்.
அவர் ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் தொட்டே இருந்துவரும் சில தொழில்நுட்பங்கள் குறித்த காணொலிகளைக் காட்டியபோது மாணவர்கள் மிகுந்த வியப்புக்குள்ளாயினர்.
மத்திய அரசின்அறிவியல் தொழில்நுட்பத் துறையானது "அறிவியல் பலகை' என்ற அறிவியல் இதழின் மூலமாகவும், யூடியூப் காணொலிகள் மூலமாகவும் விஞ்ஞானிகள் பற்றிய தகவல்களைஅளிப்பதையும், ஜூம் கூட்டங்கள் வாயிலாக அறிவியலை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பது குறித்தும் விளக்கினார் அறிவியல் அதிகாரியான லெனின் தமிழ்க்
கோவன்.
மழை, பெருமழை, புயல், வெள்ளம், சூறாவளி போன்றவற்றின் பின்னால் உள்ள அறிவியலை எளிமையாக விளக்கிய முன்னாள் வானிலையாளர் பாலசுப்ரமணியன், ""தமிழ் இலக்கியங்களில் வானியல் சார்ந்த கருத்துகள் கொட்டிக்கிடக்கின்றன.
நம்மைச் சுற்றியுள்ள பஞ்சபூதங்களை கூர்ந்து கவனிப்பதே அறிவியலின் அடித்தளம்'' என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.