மனித நேயம் மிக்க மகாத்மா
தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி இருந்தபோது 1906இல் அங்கு வெளியான 'இந்திய ஒப்பினியன்' என்ற இதழில் 'ஆரோக்கிய வழி' என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதினார்.
தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி இருந்தபோது 1906இல் அங்கு வெளியான 'இந்திய ஒப்பினியன்' என்ற இதழில் 'ஆரோக்கிய வழி' என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதினார். அந்தக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளிவந்தது. அந்த நூல் குறித்து இந்தியாவிலும் பேசப்பட்டது. ஆனால், இந்தியாவில் அந்த நூல் கிடைக்கவில்லை. இதையறிந்து காந்திஜியின் அனுமதியை சுவாமி அகண்டானந்தர் பெற்று, இந்தியப் பதிப்பை வெளியிட்டார். அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
ஆங்கில மொழி பெயர்ப்பும் வந்தது. அது வெளிநாட்டவர்களுக்கும் கிடைத்தது. அதன்பின்னர், ஐரோப்பிய மொழிகளிலும் வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, சில கட்டுரைகளை எழுதி, இரண்டாவது தொகுப்பை வெளியிடுமாறு காந்திஜியை பலரும் வற்புறுத்தினர்.
1942இல் ஆகஸ்ட் மாதத்தின் கடைசியில் ஆகாகான் மாளிகையில் காந்திஜி சிறை வைக்கப்பட்டபோது, நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று இரண்டாம் பதிப்பை வெளியிட முன்வந்தார்.
அப்போது காந்திஜி, ''எனக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 'ஆரோக்கியத் திறவுகோல்' என்ற தலைப்பில் புதிய நூல் எழுதத் தொடங்கிவிட்டேன்' என்றார்.
ஒருசமயம் காந்திஜியும், ஜவஹர்லால் நேருவும் பாத யாத்திரை சென்றுகொண்டிருந்தனர்.
வழியில் பெரிய பள்ளம் இருப்பதைக் கண்ட நேரு, சிறிது தூரம் பின்னால் சென்று வேகமாக ஓடி வந்து பள்ளத்தைத் தாண்டினார்.
ஆனால் காந்திஜியோ, ஒரு நீளமான மரப்பலகையைப் போட்டு அதன் மீது ஏறி பள்ளத்தைக் கடந்தார். இதைப் பார்த்த நேரு, ''என்னைப் போல நீங்களும் ஓடிவந்து பள்ளத்தைக் கடத்தியிருக்கலாமே'' என்று கேட்டார்.
இதற்கு சிரித்தவாறு, ''இந்தப் பள்ளத்தைத் தாண்ட நீங்கள் எவ்வளவு தூரம் பின்னால் சென்று, ஓடி வந்தீர்கள் தெரியுமா? அப்படி நான் பின்வாங்க விரும்பவில்லை. இருந்த இடத்தில் இருந்தே முன்னேற விரும்புகிறேன்.'' என்றார் காந்திஜி.