நடிகராக இரா. முத்தரசன்
பெரும் ஆளுமையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள், தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை எனப் பல வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன.
பெரும் ஆளுமையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த வாழ்க்கை வரலாற்றுப் படங்கள், தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை எனப் பல வடிவங்களில் உருவாக்கப்படுகின்றன. இந்த வகையில் மோடி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர். என அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு படங்கள் உருவாகி வெளிவந்த வண்ணம் உள்ளன. முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் வாழ்க்கையை வெப் சீரியஸாக எடுக்கும் முதற்கட்ட முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. இது ஒரு புறம் இருக்க அரசியல் தலைவர்கள் பலர் தன்னை கவர்ந்த கதைகளில் நடித்து வருகின்றனர். இதற்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன். இவர் நடித்து வரும் படத்துக்கு "அரிசி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சண்முகம் தயாரிக்கிறார். முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார். அவரது மனைவியாக ரஷியா மாயன் நடிக்கிறார். சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் விஜயகுமார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல. மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த கதையின் சிறப்பு. தோழர் இரா. முத்தரசன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். அவரும் ஒப்புதல் தந்தார். அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், குடவாசல் அருகே உள்ள சிறு சிறு கிராமங்களில் 35 நாள்கள் நடந்து முடிந்திருக்கிறது. அப்பகுதி விவசாயிகளும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். படம் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது'' என்றார்.