ஞாயிறு கொண்டாட்டம்

வியக்க வைக்கும் குடைவரை கோயில்கள்

புதுக்கோட்டையின் பாரம்பரிய குடைவரை கோயில்கள்

ஆ.திலகவதி

தமிழகத்தின் பராம்பரியத்தை இன்றும் பறைசாற்றும் அற்புதங்களில் ஒன்று குடைவரை கோயில்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில கோயில்களின் சிறப்புகளைக் காண்போம்.

குடுமியான்மலை குடைவரை:

அன்னவாசல் அருகே யுள்ள குடுமியான்மலை சிக்கந்தநாதர் கோயிலும், குடைவரையும், இசைக்கல்வெட்டும் மிகச் சிறப்பு வாய்ந்தவை. சிற்பங்கள் மிக அழகுற வடிக்கப்பட்டுள்ளன. மாலிக் காபூரின் படையெடுப்பில் சில சிற்பங்கள் சிதிலமடைந்துள்ளன. இங்குள்ள இசைக்கல்வெட்டு கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருமயம், மலையடிபட்டி உள்ளிட்ட ஊர்களிலும் இதுபோன்ற இசைக் கல்வெட்டுகள் உள்ளன.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், கி.பி. 1215 முதல் 1265 வரை மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொருவருக்கும் வரிப் பணம் விதிக்கப்பட்டு, பணத்தைத் தவிர்த்த பிற பங்களிப்புகளும் ஏற்கப்பட்டன.

73,300 தங்க நாணயங்களை விலை கொடுத்துக் கோயிலின் சில நிலப் பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள் உமையாள் நாச்சி, குகைக்கோயிலை அடுத்து

அம்மன் சன்னதியைக் கட்டி, அதில் மலையமங்கை என்ற செளந்தர நாயகி சிலையைப் பிரதிஷ்டை செய்தாள். விசலூர், பின்னங்குடி, மருங்கூர் (மருங்குபட்டி), காரையூர், மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டு கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில், குடுமியான்மலைப் பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டன.

நார்த்தாமலை குடைவரை:

நார்த்தாமலையில் சோழர் காலத்து கற்கோயிலும், குடைவரை கோயிலும் அழகான கட்டமைப்பும் வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. உட்சுற்று (பிரகாரம்) வட்ட வடிவில் அமைந்துள்ளன. இங்கு ஐந்து குடைவரைகள் அமைந்துள்ளன.

கி.பி. 9 - ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து முத்தரையர்கள் ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டிலும், பின்னர் சோழர்கள், பாண்டியர்களின் கட்டுப்பாட்டிலும் இருந்த பகுதி. இந்தக் கிராமத்தின் பழைய பெயர் 'நகரத்தார் மலை'. பின்பு மருவி 'நார்த்தாமலை' ஆனது. 'நானாதேசத்து ஐநூற்றுவர்' எனும் வணிகக் குழுவினர் இங்கு தங்கித்தான் வாணிபம் செய்திருக்கின்றனர்.

நார்த்தாமலையின் முக்கிய அடையாளம் 'விஜயாலய சோழீச்சுவரம்' கோயில். மேலமலையின் அடிவாரத்திலிருந்து சுமார் அரை கி.மீ தொலைவுக்கு மேலேறிச் சென்றால் தலைவிரி சிங்கம் (தலையருவி சிங்கம்) என்ற சுனையைக் காணலாம்.

இங்கு சுமார் 20 அடி ஆழத்தில் சிவனுக்காக வெட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று நீருக்குள் மூழ்கியிருக்கிறது. அதன் அருகிலேயே 1871 -ஆம் ஆண்டு தொண்டைமான் ராணியால் சுனைநீர் இறைக்கப்பட்டு லிங்கத்தைத் தரிசித்த செய்தி கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. நீருக்குள் மூழ்கியபடி அருள்பாலிக்கும் சிவனை வணங்கிவிட்டு, மேலேறிச் சென்றால் விஜயாலய சோழீச்சுவரத்தைக் காணலாம்.

சமணர் குகையாக இருந்த இந்தக் குடைவரைக் கோயில் பிற்காலத்தில் விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் அர்த்த மண்டபத்தில் 12 ஆளுயர விஷ்ணு சிலைகள் உள்ளன. இந்த மண்டபத்துக்கு முன்னுள்ள மேடையின் பீடத்தில் யாளி, யானை, சிங்கம் உள்ளிட்ட உருவங்களை வரிசையாகக் கொண்ட சிற்பத்தொகுதி உள்ளது. அதாவது திருமால் சுதர்சன சக்கரத்தை ஏவுவதைப் போன்று உருவாக்கப்பட்ட 'மோஷன் பிக்சர்' சிலைகள் இவை.

இதற்கு அருகே உள்ளது 'பழியிலி ஈசுவரம்' எனும் சிறிய குடைவரைக் கோயில் இது. ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த முத்தரையர் தலைவன் 'சாத்தன் பழியிலி' என்பவனால் கட்டப்பட்டது. இங்கு லிங்கம், துவாரபாலகர்கள் சூழக் கருவறைக்குள் 'பழியிலி சிவனார்' அருள்புரிகிறார்.

சித்தன்னவாசல் குடைவரை:

சித்தன்னவாசல் மலையில் சமணர் குகைக்கோயில் உள்ளது. ஒரு சிறு அறையும் வெளியே ஒரு தாழ்வாரமும் உள்ளன. சுவர்களில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. இதனருகிலுள்ள அன்னவாசலும் பல நூற்றாண்டுகளாகச் சிறந்த சமண மையங்களாக விளங்கின.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு அவனிய சேகர ஸ்ரீவல்லப பாண்டியன் (கி.பி. 815-862) ஆட்சி செய்தபொழுது இளம் கெளதமன் என்ற ஆசிரியர் திருப்பணி செய்து, இங்கு உலகம் வியக்கும் ஓவியங்களைத் தோற்றுவித்தார் என்று அறியப்படுகின்றது. இங்குள்ள சுவர் ஓவியங்கள் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் உருவானவை என்ற கருத்தும் உள்ளது.

பல்லவர்களுக்கு நிகராக பாண்டியர்களும் குடைவரைகள், கட்டுமானக் கோயில்களில் ஓவியங்களை தென் தமிழகத்தில் வரைந்துள்ளனர். பெரும்பாலான ஓவியங்கள் அழிந்த நிலையில் சித்தன்னவாசலில் மட்டும் சில ஓவியங்கள் நல்ல நிலையில் உள்ளன.

இந்த ஓவியங்கள், அஜந்தா, பனைமலை, காஞ்சி கைலாசநாதர் கோவில்களில் உள்ள ஓவியங்களைப் போல் உள்ளன. சித்தன்னவாசல் ஓவியங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. இயற்கைப் பொருள்களிலிருந்து தயாரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. பாறையின் மீது சுதைப்பூச்சை மிக மெல்லிய கனத்தில் அமைத்து அவற்றின் மீது இவ்வோவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

திருகோகர்ணம் குடைவரை:

முதலாம் மகேந்திரவர்மனால் எடுப்பிக்கப்பட்ட குடைவரைக் கோயில் திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலக் குடைவரைக் கோயிலாகும். தாய்ப்பாறையிலேயே லிங்கம் வெட்டப்பட்டுள்ளது.

மண்டபங்கள், திருச்சுற்று போன்றவை சோழர்கள், பாண்டியர்களால் 11, 13-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. தொண்டைமான் அரசர்களின் குலதெய்வமாக இக்கோயிலில் பெரியநாயகி அம்மன் உள்ளார். ராய கோபுரம் அமைந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுகள் கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளைக் குறிப்பிடுகின்றன.

அனுப்ப மண்டபத்தில் ராமாயண ஓவியங்கள் விஜயநகரத்தார் ஆட்சிக்காலத்தில் தீட்டப்பட்டுள்ளன.

தேவர்மலை குடைவரை:

தேவர்மலை குடைவரை, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சர்ச்சைக்குரிய வகையில், மனித உருவமும் காணப்படுகிறது. கருவறையில் சிவலிங்கம் தாய்ப்பாறையிலேயே குடையப்பட்டு உள்ளது.

இந்தக் கோயிலை தேவார வைப்புத்தலமாக சிலர் கருதுகின்றனர். சேக்கிழார் இவ்வூரை 'மிழலை நாட்டு மிழலை' என்று கூறுவதாக சிலர் கூறுகின்றனர். சோழர் ஆட்சியின்போது இவ்வூர் கானநாட்டு விருதராஜ பயங்கர வளநாட்டுப் படைப்பற்றான மலையாலங்குடி என்றே கல்வெட்டு கிடைக்கின்றது.

மலையடிப்பட்டி குடைவரை:

இங்கு எழில் நிறைந்த இயற்கைச் சூழலில் ஒரு மாபெரும் பாறையில் இரண்டு கோயில்கள் ஒன்றாக இணைந்து இரு குடைவரைக் கோயில் அமைந்திருக்கிறது. ஒன்று சிவனுக்காகவும், மற்றொன்று அனந்தபத்மநாப சுவாமிக்காகவும் அமைக்கப்பட்டவை. 730-இல் நந்திவர்ம பல்லவ மன்னர் இங்குள்ள மலையை குடைந்து வாகீஸ்வரர் என்றழைக்கப்படும் கோயில் எழுப்பித்துள்ளார்.

தெளிவாகச் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும் நிறைந்திருக்கின்றன. 15 அடி உயரத்தில் மூலவர் சிலை செதுக்கப்பட்டிருக்கின்றது, மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவ கணங்களும் தெய்வ வடிவங்களும் என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக, இந்தச் சுவர் காட்சியளிக்கிறது.

திருமயம் குடைவரை:

திருமயத்தில், முத்தரையர்கள் ஆட்சிக்காலத்தில் அகழப்பட்ட குடைவரைக்கோயில் உள்ளது. இங்குள்ள விஷ்ணு கோயில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலைவிட பழமையானது என்றும், இதற்கு 'ஆதிரங்கம்' என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.

திருமய்யத்தின் பள்ளிகொண்ட பெருமாள் சிலை இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும். முத்தரையர்கள், பாண்டியர்கள், போசாளர்கள், விசயநகர மன்னர்கள், நாயக்க அரசர்களின் ஆட்சிக் காலங்களில் இக்குடைவரைக் கோயில் விரிவாக்கம் பெற்றுள்ளது.

பூவாலைக்குடி குடைவரை:

இங்குள்ள ஏரியைக் கடந்துதான் இக்கோயிலுக்குச் செல்ல வேண்டும். கருவறை முன்சுவர், முக மண்டபம், பெருமண்டபம், முன்பண்டபம் என்ற கூராய் கட்டப்பட்டுள்ளது. குடைவரைக்கு வெளியே உள்ள அம்மன் சுந்தரவல்லி என அழைக்கப்படுகிறார், பைரவர். சண்டேசர், ஆறுமுகருக்கு தனித்தனியாய் சன்னதி எழுப்பப்பட்டுள்ளது. சிவலிங்கம் தாய்ப்பாறையில் குடையப்பட்டுள்ளது.

ராயவரம் குடைவரை:

திருமய்யம் அருகேயுள்ள கடியப்பட்டி, ராயவரம் இடையே ஒரு தொலைதூர கிராமமான குளாலக்கோட்டையூரையொட்டிய, தட்டையான தாழ்வான குன்றில் பாறை வெட்டப்பட்டுள்ளது. இங்கு சன்னதி, தெய்வம் இரண்டும் அநாமதேயமானவை. உள்ளூரில் 'பாறைக்கோயில்' என்று அழைக்கப்படுகிறது.

மலையக்கோயில் குடைவரை:

குக்கிராமமான இங்கு தரிசு, வெறிச்சோடிய வீடுகள், மிகச் சில சிதறிய குடியிருப்புகளோடு குடைவரைக் கோயில் காணப்படுகிறது. பாறை வெட்டப்பட்ட குகைகள் இரண்டும் அதன் மீது பாய்ந்துள்ளன. குன்றின் கிழக்கு முனை தாய்ப்பாறையிலிருந்து சுத்தப்படுத்தப்பட்ட பாறைகளும் அதைச் சுற்றி சிதறிக் கிடக்கின்றன. மலையில் இரண்டு பாறை வெட்டப்பட்ட கோயில்கள் உள்ளன.

திருக்கோளக்குடிக் குடைவரை:

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோளக்குடியில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயிலை 'திருக்களக்குடி' என்றும் அழைப்பதுண்டு. இது ஒரு பாண்டியர் காலக் குடைவரை. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இந்தக் கோயில்கள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் கீழ் உள்ளது.

இக்குடைவரைக்கு அண்மையிலும், அதற்குச் செல்லும் வழியிலும் பல காலகட்டங்களையும் சேர்ந்த பிற்காலக் கோயில்களும், கட்டுமானங்களும் காணப்படுகின்றன. சுமார் 1300 ஆண்டுகள் பழம்பெருமை கொண்ட இத்தலத்துக்கு மேலும் அழகு சேர்த்து, பக்திமனம் பரப்பும் விதமாக ஒரே குன்றில் அடிவாரம், மையப்பகுதி, சிகரம் என மூன்று தளங்களில் வெவ்வேறு பெயர்களில் சிவன் எழுந்தருளியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT