அல்போன்ஸ் குமரன் தாசீசியஸ் 1940இல் யாழ்ப்பாணத்திலுள்ள தாளையடி கிராமத்தில் பிறந்தவர். சிறந்த நாடகக்காரரான இவரைப் பற்றி அம்ஷன் குமார் எடுத்திருக்கும் ஆவணப் படம், அண்மையில் என்.எஃப்.டி.சி. தாகூர் திரையரங்கில் திரையிடப்பட்டது.
நவீன நாடகத்துக்கு இவரின் பங்களிப்பை ஆவணப் படம் சொன்னது.
பள்ளிப் பருவத்தின்போதும், கல்லூரிப் பருவத்தின்போதும் இவர் நாடகங்களில் நடித்தார். இளமைப் பருவத்தில் இருந்தே நடிப்புத் திறன் மிகுந்தவராகக் கண்டறியப்பட்டார். முதன்முதலில் ஆங்கிலப் பேராசிரியர் அஷ்லி ஹல்பேயிடம் நாடகக் கலையின் நுணுக்கங்களைக் கற்றறிந்தார். பின்னர், எர்னெல்ட் மெக்கென்டைர் என்பவரிடம் பயின்றார்.
பின்னர், மூல வேர்களையும் தேடிச் சென்றார். கிராமம், கிராமமாகச் சென்று கூத்துப் பாடல்களைச் சேகரித்தார். அவர்களைக் கொண்டே பாடவைத்து இலங்கை வாணொலியில் ஒலிபரப்பவும் செய்தார்.
ந.சுந்தரலிங்கத்தின் "அபசுரம்' என்ற நாடகத்திலும், "விழிப்பு' என்ற நாடகத்திலும் நடித்தது அவருக்குப் புகழைத் தந்தது. "பொறுத்தது போதும்' தாசீசியலே எழுதி மேடையேற்றிய நாடகம்.
இந்த நாடகத்தில் புராதன நடன, கூத்து வடிவங்களைப் பயன்படுத்தினார்.
மு.சண்முகலிங்கம் யாழ் நாடகக் கல்லூரியைத் தொடங்கியபோது அதில் சேர்ந்து மாணவர்களுக்குப் பயிற்சி ஆசிரியராக தாசீசியல் பணிபுரிந்தார்.
1985-இல் தாசீசியஸ் லண்டன் சென்றார். "லண்டன் களரி' என்ற நாடக அமைப்பு உருவெடுத்தது. லண்டன் களரிக்காக, "ஏன் ஓடுகிறாய்?' என்ற நாடகத்தை அரங்கேறினார். புலம் பெயரும் தமிழர்களின் துன்பத்தை நாடகம் சொன்னது.
1986இல் தாசீசியஸ் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு வந்தார். அவர் பங்களிப்பைச் செய்த "ஐயோ' எனும் நாடகம் சுவிட்சர்லாந்து நாட்டு மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. தமிழர்களை உடலுழைப்புப் புரிவோர் என மட்டுமே அறிந்த சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் தமிழர்கள் பண்பாடு, கலை பற்றியும் தெரிந்துகொண்டு வியந்தனர்.
தாசீசியஸ் தனக்குக் கிடைத்த நேரத்தை எல்லாம் நாடகத்துக்காகவும், நாடகப் பயிற்சிகள் தருவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தினார்.
எண்பத்து மூன்று வயதாகும் தாசீசியஸ் தொடர்ந்து நாடகப் பயிற்சிகளை அளித்து வருகிறார்.
தமிழர்களின் வேர்களான கூத்து மரபுகளை மேற்கத்திய நாடக மரபுகளுடன் இணைத்து அவற்றை உலக அரங்குக்குக் கொண்டு சேர்த்த முன்னோடியான தாசீசியஸ் என்ற மகா கலைஞர் பற்றிய அம்ஷன் குமாரின் ஆவணப் படம் ஒரு சிலிர்ப்பூட்டும் கலை அனுபவமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.