வயநாடு சூரல்மலைப் பகுதியில் இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் தங்க ஆபரணங்கள் இருந்த சிறுபெட்டியைக் கண்டுபிடித்து, அதை உரிய பெண்ணிடம் அளித்த மனித நேயமிக்கச் செயலைப் பலரையும் வியக்க வைத்துள்ளது.
கேரள மாநிலத்துக்கு உள்பட்ட வயநாடு நிலச்சரிவின்போது பல நூறு வீடுகள் இருந்த சுவடு தெரியாமல் பொடிப் பொடியாகிவிட்டது. நிலச்சரிவுடன் பெருமழையும் சேர்ந்து கொள்ள, நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களும் காட்டு வெள்ளமாகப் பெருகிய மழைநீர், சேறு சகதியால் மூழ்கடிக்கப்பட்டனர். இழுத்துச் செல்லப்பட்டனர். சிலர் மட்டும் உயிர் தப்பியுள்ளனர்.
சில ஊர்கள் காணாமல் போயிருக்கும் நிலையில் வீட்டில் இருந்த நகைகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதுதவிர, சகதி சேற்றில் புதைபட்டுள்ளன.
இந்த நிலையில், தனது 60 பவுன் தங்க நகைகளும், ஏழு லட்சம் ரூபாயையும் இழந்துவிட்டதாக காப்பி தோட்டத்தில் பணிபுரியும் விவசாயி ஒருவர், அதைத் தேடி அவரது வீட்டுக்கு அருகே வந்து அழுது புலம்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்தக் காணொளிக்கு, 'நீங்க உயிர் பிழைச்சதே ஆச்சரியம். உங்க பணமும் நகையும் போனா போகட்டும். திரும்பவும் நீங்கள் அவற்றை உண்டாக்கிக் கொள்ளலாம்'' என்று பலரும் பின்னூட்டம் அளித்திருந்தனர்.
இந்தச் சூழலில், வயநாடு சூரல்மலை பகுதியில், இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர்கள் தங்க ஆபரணங்கள் இருந்த சிறு பெட்டியைக் கண்டுபிடித்தனர். அதைத் தேடி அலைந்த பெண்ணிடம் காவல்துறை முன்னிலையில் தன்னார்வலர்கள் ஒப்படைத்தனர்.
சொந்தங்களைப் பறிகொடுத்துவிட்டு, வீடு, உடைமைகளை இழந்து நின்ற அந்தப் பெண்மணிக்கு திரும்பக் கிடைத்தது எதுவாயினும் விலைமதிக்க முடியாதவைதானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.