வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் சில மனிதர்களை சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது. எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம்.
இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். சிரிக்க மட்டும் வைக்காமல், இப்படி சிந்திக்க வைக்கவும் முடிகிற கதைதான் இது.'' நம்பிக்கை கரம் நீட்டுகிறார் இயக்குநர் காமராஜ் வேல். இயக்குநர்கள் விஜய் மில்டன், கோபி நயினார் ஆகியோரின் உதவியாளர். "அதர்ம கதைகள்' படத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்கு அறிமுகமாகிறார்.
அதர்ம கதைகள்... தலைப்பே கவனம் ஈர்க்கிறது...
முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாம பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாக பதிய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன். அதை நான்கு வடிவங்களாக பிரித்தேன். நான்கு கதைகள், எல்லாவற்றிலுமே வெவ்வேறு கதைகள். தமிழில் மெல்ல ஊடுருவி வரும் ஆந்தாலஜி வகை சினிமா இது. எல்லோரும் எதாவது ஒரு நேரத்தில் சந்திக்கிற பிரச்னை இந்தக் கதையில் இருக்கும். பணக்காரனையோ, கோடீஸ்வரனையோ, பலம் பொருந்திய தாதாவையோ எங்கேயாவது சந்திப்போம். அவர்கள் நமக்கு உதவுவார்கள், இல்லையெனில் நமக்கே எதிராக திரும்புவார்கள். அப்படி ஒரு சூழல்தான் கதை. வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளை சுட்டிக் காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. நல்ல கமர்ஷியல் படம். எல்லோரும் பார்த்து கழிக்கும் ஒரு சாதாரண கதை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளம். அவ்வளவுதான்.
உள்ளடக்கம் எப்படி இருக்கும்....
போஸ்டர் பார்த்தாலே உங்களுக்குள் ஒரு கதை ஓடும். அதுதான் இந்த கதையின் ஸ்பெஷல். இதில் என்னடா ஸ்பெஷல் என்று உங்களுக்கு மனசு ஓரத்தில் தோன்றிருக்கும். ஆனால் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். வாழ்க்கையின் அனுதினங்களில் சுழலும் சமானியன். வீடு, மனைவி, மகன் என வாழும் வாழ்க்கை. ஆள், பணம், அரசியல், அதிகாரம் எல்லாம் பொருந்தியவர்களை எளியவர்கள் சந்திக்கும் போது, என்ன நடக்கும் இதுதான் கதை. காதல், அன்பு, ஆக்ஷன் எல்லாமும் காட்சிகள். புதுப் புது காட்சிகளாக எடுத்து முடித்திருக்கிறேன். நிச்சயம் இது எல்லாருக்குமான சினிமாவாக இருக்கும்.
கதைக்கான தொடக்க புள்ளி எது....
அதிகாரம் என்பது சகல மட்டங்களிலும் நம்மை படுத்தி எடுக்கிறது. கோயில்களில், மருத்துவமனைகளில், பள்ளிகளில், சாமானியர்கள் அத்தனை பேரும் காத்திருக்க அதிகாரம் படைத்தவர்கள முதல் ஆளாக உள்ளே போய் வருகிறார்கள். அதிகாரம் படைத்தவர்களின் தூரத்து சொந்தங்களுக்கு கூட பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாடு எப்போதும் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒன்றாகவும், இல்லாதவர்களுக்கு வேறாகவும் இருக்கிறது. ஒரு நடிகைக்காக அடித்துக் கொள்கிற இரண்டு நடிகர்களை எந்த போலீஸýம் எதுவும் செய்ய முடியாது இந்த தேசத்தில். ஆனால், சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் பொரி கடலை விற்கும் கிழவனை கொண்டு போய் ராத்திரியெல்லாம் ஸ்டேஷனில் உட்காரவைத்து துன்புறுத்தும். நேற்று வரை
ஒன்றரையணாவுக்கு பெறாதவர்கள், கவுன்சிலர் ஆனதில், எம்.எல்.ஏ. ஆனதில்.... கார், அடியாள்கள், செல்வாக்கு என பறக்கிறார்கள்... எல்லாவற்றையும் சாமனியான் சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்படித்தான் இந்தக் கதையின் உள்ளே போனேன். வெற்றி, சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி, பூ ராமு, சுனில் ரெட்டி, ஸ்ரீதேவா... இப்படி நடிகர்கள்.
மீண்டும் ஒரு அரசியல் விமர்சன படமா...
மனித வாழ்வுதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த இலக்கணத்தை கொண்டே இதை எழுதியிருக்கிறேன். மனிதர்களுக்கு சமூகத்தின் மேல் பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்த சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும் சிறுபான்மை என ஜாதிகளின் அடுக்குகளை கொண்ட இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால், ஜாதியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஒரு உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்து செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.