பிரமாண்டமான கோட்டைகளை ராஜஸ்தான் தன்னகத்தே கொண்டுள்ளது. வீரம், கட்டடக் கலை, கம்பீரங்களுக்கு அடையாளமாக இன்றும் விளங்கிவரும் கோட்டைகளில் உதய்பூர், ஜோத்பூர், ஜெய்ப்பூர், பிகானீர், சித்தூர் கோட்டைகள் அருங்காட்சியங்களாக மாற்றப்பட்டுள்ளன. இவற்றில் யாரும் வாழ்வதில்லை. பகலில் பார்வையாளர்கள் வந்து சென்றாலும், இரவில் கோட்டைகள் நிசப்தத்தில் மூழ்கியுள்ளன.
உலகில் மக்கள் வாழும், சுவாசிக்கும் கோட்டையாக நிற்பது ஜெய்சல்மெர் கோட்டை மட்டும்தான். இங்கு அரச குடும்ப வாரிசுகள் மட்டுமின்றி, கோட்டையைக் கட்டியபோது குடியேறியவர்களின் வாரிசுகளும் இன்றும் வாழ்ந்துவருகின்றனர். இந்தக் கோட்டைக்கு வயது 862 ஆண்டுகள்.
1156-ஆம் ஆண்டில் எதிரிகளிடமிருந்து குடிமக்களின் பாதுகாப்புக்காக "ராவல் ஜெய்சல் என்ற மன்னர் தனது பூர்விக நகரமான "லுதுர்வா'வை மக்களுடன் காலி செய்துவிட்டு, சுமார் 18 கி.மீ. தூரத்தில் "திரிகுடா' குன்றின் மேல் கட்டிய கோட்டைதான் ஜெய்சல்மெர் கோட்டையே "தங்கக் கோட்டை' என்று அழைக்கப்படுகிறது. தங்க நிற மென்மையான பாறைகளை வெட்டி கோட்டை கட்டப்பட்டதால், பொன்னிறத்தில் மின்னுகிறது.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு கோட்டைக்குள் வாழும் மக்களின் சந்ததிகள் பெருகவே வசிக்க இடம் போதாததால், வெளியே வந்து வீடுகளைக் கட்டிக் கொண்டனர். அவர்கள் கட்டிய வீடுகளும் பொன்னிற கற்களால் கட்டப்பட்டிருப்பதால் நகரமே பொன்னிறமாக மின்னுகிறது. விரிவாக்கத்தில், கோட்டையைச் சுற்றி வீடுகள் முளைக்க, கோட்டை ஜெய்சல்மெர் நகரின் மையப் பகுதியாக மாறிவிட்டது.
தார் பாலைவனத்தில், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோட்டையானது புயல், பூகம்பம், பெருமழை போன்ற இயற்கையின் சீற்றங்களைச் சமாளித்து நிற்கின்றன. இருந்தாலும், சிறிதுசிறிதாகப் பலமிழந்து வருவதை கோட்டையின் உள்ளும் புறமும் நடக்கும் மராமத்து வேலைகள் உறுதி செய்கின்றன.
"உலகின் பாரம்பரிய நகரம்' என்று யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இந்த நகரம். இந்திய, ஆசிய வர்த்தகர்கள் பயணம் செய்த பாரம்பரிய "பட்டுப் பாதை' (சில்கி வே) என்ற வணிக வழியில் ஒரு முக்கிய சந்தையாக, பலவகை வணிகங்களின் சந்திப்பாகவே ஜெய்சல்மெர் அமைந்திருந்தது. அதனால்தான் இந்த ஊரைக் கைப்பற்ற அலாவுதீன் கில்ஜி முதல் ஹுமாயுன் வரை படையெடுத்து வந்தனர்.
ஜெய்சல்மெர் மூலமாக இந்தியாவின் வணிகத்தை மத்திய ஆசியா, எகிப்து, அரேபியா, பாரசீகம், ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணைத்திருந்தது. காலப்போக்கில் கடல் வழி மார்க்கம் விரிவானதாலும், மிகப் பெரிய துறைமுகமாக மும்பை மாறியதாலும், "பட்டுப் பாதை' வழி நடந்த வர்த்தகத்தின் பகட்டு குறைந்தது.
1947-இல் பாகிஸ்தான் உருவான போது, "இந்தியா- பாக்' எல்லை வரையறை செய்யப்பட்டதால், அனைத்து வணிகப் பாதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஜெய்சல்மெரின் எல்லையாகக் காணப்படுவது. தண்ணீர் இல்லாத வறட்சியான தார் பாலைவனம்தான். இந்தியா - பாகிஸ்தான் இடையே யுத்தம் ஏற்பட்ட போது இந்திய படைகளுக்கு ராணுவப் பொருள்களை விநியோகிக்கும் இடமாக ஜெய்சல்மெர் முக்கியத்துவம் பெற்றது. அதனால், பேருந்து சாலைகள், ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டு ஜெய்சல்மெரை சுற்றுலாத் தலமாக மாற்றியது.
ஜெய்சல்மெர் நகரில் சமணர்கள் கட்டிய ஆலயங்கள், சிற்பங்கள், கலை வேலைப்பாடுகள் மலைக்க வைக்கும். 16-ஆவது தீர்த்தங்கரர் சாந்திநாதர், 23-ஆவது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் போன்ற சமண குருக்களின் ஆலயங்களும் உள்ளன. தொல்பொருள்கள், அரிய சுவடிகளைக் கொண்ட மிகப் பழமையான நூலகங்களையும் பெற்றுள்ளது. லோதர்வா, அமர்சாகர், பரமஅம்சர், பொக்ரான் போன்ற ஜைன புனித தலங்கள் ஜெய்சல்மர்ரை சுற்றி உள்ளன.
பொக்ரான் பகுதியில்தான் இந்தியா அணுகுண்டு சோதனையை நடத்தியது.
பாதுகாப்புக்காக, இரண்டு அடுக்கு தடுப்பு சுவர்களைக் கொண்டிருக்கும் ஜெய்சல்மெர் கோட்டைக்கு நான்கு வாசல்கள் உள்ளன. கோட்டைக்குள் இருப்பவை குறுகிய பாதைகள் என்பதால், ஆட்டோக்கள்தான் போகும். கோட்டையினுள் அரண்மனை, பொதுமக்களது வீடுகள், கடைகள், கோயில்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் செயல்படுகின்றன.
பாலைவனப் பகுதி என்பதால், தண்ணீர் கிடைக்காமல், கோட்டை கட்டப்படும் போது, கற்களை ஒன்றின் மீது ஒன்று வைத்து சாந்துக் கலவையைத் தவிர்த்துள்ளனர். ஆனால் கற்கள் இடைவெளியில்லாமல் அசையாது ஒன்றையொன்று பிடித்துகொள்ளும் வண்ணம் பாறைகளை கற்களைச் செதுக்கி பொருத்தியுள்ளனர்.
கோடையில் இந்த நகரம் வெப்பம் ஐம்பது டிகிரி செல்ஸியஸ் இருந்தாலும், கோட்டையினுள் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும்.
கலை வண்ணத்தில், வேலைப்பாடுகளில் மன்னரின் அரண்மனைக்கு சமமாக "ஹவேலி' எனப்படும் அமைச்சர்கள், தனவந்தர்கள் உள்ளிட்டோருக்கான ஐந்து மாளிகைகள் கட்டப்பட்டுள்ளன. பொன்னிற பாறைகளில் சிற்ப வேலைகள், சாளரங்கள், உள்ளே சிறு சிறு கண்ணாடிகள் ஒட்டப்பட்டு வேயப்பட்டிருக்கும் ஜொலிக்கும் உள் கூரைகள்.. என்று ஆடம்பரத்தின் அமர்க்களங்களை இந்த ஹவேலிகளிலும் காணலாம். ஹவேலியைப் பார்வையிட நுழைவுக் கட்டணம் உண்டு. ஆனால், தங்கக் கோட்டைக்குள் நுழைய கட்டணம் இல்லை.
பாலைவனம் என்பதால் ஒட்டகங்கள் அதிகம். ஒட்டகச் சவாரி செய்யலாம். மாலை வேளைகளில் பாலைவனத்தில் குளிரூட்டப்பட்ட கூடாரங்களை அமைத்து தங்கும் வசதியும் செய்து தருகின்றனர். இரவு வாடகை ஆறு ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.
முகாம்களில் இரவு நேரத்தில் ஜெய்சல்மெர் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் பாட்டுகள், நடனங்கள், வித்தைகள் பார்வையாளர்களுக்கு விருந்துகள் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி துவக்கத்தில் ஒட்டக விழா நடக்கும். ஒட்டகங்களின் ஓட்டப் பந்தயம், ஒட்டகத்தில் அமர்ந்து விளையாடும் போலோ விளையாட்டு அரங்கேறும். அணுகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்ட போக்ரானில் அடிக்கடி ஓட்டகச் சந்தை நடைபெறுகின்றன. ஜெய்சல்மெர்ரில் ஒட்டகங்களின் தோல்களில் செய்யப்பட்ட காலணிகள், பைகள் பிரசித்தி பெற்றவையாகும்.
ஜோத்பூர் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து ரயில்கள், பஸ்கள், கார்கள் மூலமாக ஜெய்சல்மெர் வரலாம். இந்தியாவின் எந்த பாகத்திலிருந்தும் ரயில் மார்க்கமாக ஜெய்சல்மெர் வர வசதி உள்ளது.
ஜெய்சல்மெர்ரின் முக்கியத்துவம் குறித்து சத்யஜித்ரே "சோனார் கிலா' எனும் நாவலை 1971-இல் எழுதினார். அவரே 1974-இல் திரைப்படமாகவும் தயாரித்து இயக்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.