ஜாகிர் 
ஞாயிறு கொண்டாட்டம்

தந்துவிட்டேன் என்னை..!

பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் ஹுஸைன் என்றாலே , அவரது பத்து விரல்களின் நர்த்தனங்களும், ஒலிநயத்துடன் ஒத்திசைந்து அங்கும் இங்கும் ஆடும் அவரது நீண்ட தலைமுடியும் நினைவுக்கு வரும்.

பிஸ்மி பரிணாமன்

பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் ஹுஸைன் என்றாலே , அவரது பத்து விரல்களின் நர்த்தனங்களும், ஒலிநயத்துடன் ஒத்திசைந்து அங்கும் இங்கும் ஆடும் அவரது நீண்ட தலைமுடியும் நினைவுக்கு வரும்.

'தாஜ்மஹால்' டீ தூள் விளம்பரங்களில் நீண்ட காலமாக ஜாகீர் மாடலாக இருந்தார். அவர்களுடன் போட்ட ஒப்பந்தத்தில் 'ஜாகிர் தனது தலைமுடியை குட்டையாக வெட்டக் கூடாது' என்ற விதி சேர்க்கப்பட்டிருந்தது. அதனால், ஜாகிர் தனது சிகையை நிரந்தரமாகக் குறிப்பிட்ட வடிவில் வைத்துகொள்ள வேண்டிவந்தது. 'தலைமுடி தானாகக் கொட்டுவதை என்னால் நிறுத்த முடியவில்லை. அதேசமயம், சிகை அலங்காரத்தைத் திருத்திக் கொள்ளவும் முடியவில்லை' என்று ஹாஸ்யத்துடன் சொல்லுவார் ஜாகிர்.

இவர் அமெரிக்காவில் வசிக்கத் தொடங்கியபோது, நீண்ட தலைமுடி கிடையாது. இருப்பினும், அமெரிக்காவில் நீண்ட தலை முடி கொண்ட ஹிப்பிகள் ஜாகிரின் கவனத்தைக் கவர்ந்தனர். ஜாகிர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் தபேலா ஆசிரியராக இருந்தபோது, முதலாம் ஆண்டில் வாரத்துக்கு 25 டாலர்கள் மட்டுமே சம்பளமாகக் கிடைத்தது.

அதில், முடி வெட்டி கொள்ளும் செலவை ஜாகிரால் தாங்க முடியவில்லை. அதனால் ஹிப்பிக்கள் போன்று முடியை வளர்க்க முடிவு செய்தார். அந்த நேரத்தில் ஜாகிர் 'சாந்தி' என்ற 'ராக் அன் ரோல்' குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். அதனால் நீண்ட தலைமுடி அந்த இசைக் குழுவுக்கும், அமெரிக்காவின் கலாசாரத்துக்கும் பொருந்தியது.

இந்தியா திரும்பியவுடன் ஜாகிர் தனது தந்தை அல்லா ரக்காவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றியபோது, தபேலா இசையுடன் ஜாகிரின் தலைமுடி அலை பாய்வதும் ரசிகர்களைக் கவர்ந்தது. இதையறிந்த விளம்பர நிறுவனம் 'தலைமுடியை வெட்டிக் கொள்ள கூடாது' என்ற கட்டுப்பாட்டை விதித்தது.

தபேலா அறிமுகமானதே 19-ஆம் நூற்றாண்டில்தான். இசை நிகழ்ச்சிகளில் தபேலா கலைஞர்களின் பெயரைப் போட மாட்டார்கள். இசைத்தட்டுகளின் உறைகளில் தபேலா கலைஞரின் பெயர் அச்சிடப்படாது. ஊதியமும் மிகவும் குறைவு. 'கச்சேரியின் முக்கிய அங்கமான தபேலா இசைக் கலைஞர்கள் மீது யாரும் கவனம் செலுத்தியதில்லை' என்று ஜாகிர் தனது சுய சரிதையில் பதிவு செய்துள்ளார்.

இசைக் கச்சேரிகளில் துணைக் கருவியாக இருந்த தபேலாவை தனி இசைக் கருவி ஸ்தானத்துக்கு உயர்த்தியவர் ஜாகிர். இருந்தாலும், 'மும்மூர்த்திகளான பண்டிட் சம்தா பிரசாத், பண்டிட் கிஷன் மகாராஜ், ஜாகிரின் குருவும் தந்தையுமான உஸ்தாத் அல்லா ரக்கா ஆகியோர் தபேலாவைப் பிரபலமாக்கினர்' என்று சொல்லி வந்தவர் ஜாகிர்.

ஹிந்துஸ்தானி, அனைத்து மேற்கத்திய இசையின் நெளிவு சுளிவுகளுக்கு பொருந்துமாறு தபேலாவுடன் கற்பனை செய்ய முடியாத லாகவத்துடன் விளையாடுவார் ஜாகிர்.

தூய்மையான சாஸ்திரீய இசையைத் தாண்டி ஜாகிர் அனைத்துப் பிரிவு இசைகளில் பரிசோதனை நடத்தி இசைப் பிரியர்களுக்கு புதிய அனுபவங்களை வாரி வழங்கி வந்தவர். பன்னாட்டு இசை மரபுகளின் கலவையான 'உலக இசையை' பிரபலப்படுத்திய இசைக்கலைஞர்களில் ஜாகீரும் ஒருவர். குறிப்பாக, 'கிராமி' விருதினை வென்ற ஜாகிரின் 'சக்தி' இசைக்குழுவில், ஜாஸ் கிடார் கலைஞர் ஜான் மெக்லாலின், வயலின் கலைஞர் எல். ஷங்கர், கடம் மேஸ்ட்ரோ விநாயக்ராம் கூட்டாக பங்களிப்பு செய்து வந்தனர்.

'உலக இசையில் சக்தி' இசைக் குழுவின் பங்களிப்பு தனித்துவமாக அமைய, இந்திய இசை, 'ஜாஸ்' இசையில் பொதுவான ஒரு முக்கிய அம்சத்தை வரம்பில்லாமல் ஜாகிர் ஆராய்ந்ததுதான் காரணம்.

பலரால் இசை மேதாவியாக அங்கீகரிக்கப்பட்டாலும், ஜாகிர் எந்தவித இசை விதிகளையும் மீறவில்லை, ஆனால் இசையின் எல்லைகளை விரிவுபடுத்தி, தனிப் பாணியை உருவாக்கினார்.

ஜாகிர் பஞ்சாப் கரானாவைச் (பாணி) சேர்ந்தவராக இருந்தாலும், தந்தை அல்லா ரக்கா காரணமாக தபேலாவின் ஆறு பாணிகளில் கைதேர்ந்தவர். மேடை நிகழ்ச்சிகளின்போது தபேலா வாசிப்பை ரசிகர்களுடன் ஒரு அலைவரிசையில் இணைத்திருந்தார். ஜாகிர் இசைக் கலைஞர் மட்டுமல்ல; தேர்ந்த மக்கள் தொடர்பாளரும்கூட! ஒரே சமயத்தில் நான்கு தபேலாக்களைக் கையாளும் ஜாகிர், நான்கு 'கிராமி' விருதுகளைப் பெற்ற முதல் இந்தியர்.

அவரது ஆரம்ப காலத்தில் உஸ்தாத் ஜாகிர் அடிக்கடி ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வார். பயணத்தின்போது, தபேலாவை எப்போதும் தனது மடியில் குழந்தையை வைத்திருப்பது போல வைத்திருப்பார்.

பெரும்பாலான குழந்தைகள் இசை கற்ற நேரத்தில், ஜாகிர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டார். தனது பன்னிரெண்டாம் வயதில், ஜாகிர் தபேலா இசை நிகழ்ச்சிக்காக ஐந்து ரூபாய் ஊதியமாகப் பெற்றார். அந்தச் சிறிய தொகையே ஜாகீருக்கு மிகப் பெரிதாகத் தெரிந்தது. ஜாகிரை இசை நோக்கி பயணிக்கச் செய்தது.

பன்னிரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கும் ஜாகிர், ஏழு படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 'தந்துவிட்டேன் என்னை' என்ற தமிழ் படத்திலும் ஜாகிர் நடித்துள்ளார்.

'கதக்' நடனக் கலைஞரும் ஆசிரியையுமான அன்டோனியா மின்னெகோலாதான் ஜாகிரின் மனைவி. திரைப்படத் தயாரிப்பாளரான அனிஸா குரேஷி, நடனக் கலைஞரான இஸபெல்லா குரேஷி என்ற இரண்டு மகள்கள்.

தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் ஹுஸைன் எல்லா பிரிவு இசை ரசிகர்களுக்கும் பொதுவான இசை மரபை உருவாக்கி, ரசிகர்கள் விரும்பும் இசை விருந்துகளை அளித்துவந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதா கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் அறிமுகம்

வி.கே.புரத்தில் அனைத்து சமுதாயப் பேரவைக் கூட்டம்

கழுகுமலையில் இளைஞருக்கு மிரட்டல்: மற்றொரு இளைஞா் கைது

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்பக் கூட்டம்

கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT