நாடகக் குழுக்கள் 
ஞாயிறு கொண்டாட்டம்

நாடகங்களுக்குப் புத்துயிர்..!

புதுச்சேரியில் நவீன நாடகக் குழுக்கள் ஏராளமாக உருவாகி வாய்ப்புக் கிடைக்கும் மேடைகளில் நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

வ. ஜெயபாண்டி

புதுச்சேரியில் நவீன நாடகக் குழுக்கள் ஏராளமாக உருவாகி வாய்ப்புக் கிடைக்கும் மேடைகளில் நாடகங்கள் நடத்தப்படுகின்றன. அந்த நவீன நாடகக் குழுவில் முக்கியமானது "ஆனந்த் லிட்டில் ஸ்டேஜ் கலைக் குழு'.

சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆயிரக்கணக்கான நாடகங்கள் நவீன காலத்துக்கேற்ப இயக்குநர் யோவான் தலைமையில் நடைபெற்றுள்ளன. இந்தக் குழுவின் கலைஞர்களில் பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள். இதில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், சமுதாயப் பிரச்னைகளுக்கேற்ப கதைக்களத்தை அமைத்து வருகிறார் அரசு ஊழியரான பி.செல்வகுமார்.

அவரிடம் பேசியபோது:

"எனக்கு சொந்த ஊர் புதுச்சேரி பிச்சைவீரன்பேட் பகுதியாகும். தந்தை பலராமனும் நாடகக் கலைஞர். அவருக்கு போதிய வருவாய் இல்லாதபோதும், நாடகத்தை உயிரைப் போலவே நேசித்தார். சமூக அவலங்களைச் சீரமைக்கவும், கலை, பண்பாட்டை காக்கவும் எனது அப்பா போராட்டக் கதாபாத்திரங்களிலேயே நடித்துவந்தார். அவரது பாதிப்பே எனக்கு நாடகத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.

பள்ளிப் படிப்பின்போதே நாடகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன்பின்னர், அரசுப் பணியில் சேர்ந்தாலும், இலவசமாகவே நாடக மேடைகளில் நடித்துவருகிறேன். திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், நாடகம் மீதே ஈர்ப்பு வருகிறது.

நாடகத் திருவிழா, சுதந்திரத் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விழாக்களிலும், கோயில் விழாக்களிலும் நடத்தப்படும் நாடக மேடைகளில் நவீன காலச் சமூகத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கதைக் கரு முதல் சுதந்திரச் சரித்திரக் காலத்தைப் பிரதிபலிக்கும் கதைகள் வரை எங்கள் குழுவினர் நாடகமாக நடித்து வருகிறோம்.

"நல்ல மனம் வாழ்க', "மை டியர் பூதம்' எனும் நாடகங்கள் பயங்கரவாதங்களை வேரறுத்து, இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் கதைகளை அமைத்துள்ளோம்.

புதுச்சேரியின் புண்ணிய தலமான திருக்காஞ்சியின் கங்கை வராக நதீஸ்வரர் கோயிலின் சரித்திரத்தை நாடகமாக்கி நடித்துள்ளோம்.

கோயில்களை இடித்துச் சேதப்படுத்தி, கொள்ளையிட்டதையும், அதை மீட்க புதுச்சேரியில் வாழ்ந்த அனந்தரங்கம் பிள்ளை போன்றோர் போராடி, பேச்சுவார்த்தை நடத்தியதையும் அந்நாடகத்தில் அப்படியே படம்பிடித்து காட்டியுள்ளோம்.

சமூக பிரச்னைகள், சரித்திர நிகழ்வுகள் என இரண்டையும் கலந்து நாடகம் நடத்தப்படுவதால், அனைத்துத் தரப்பினரும் ரசித்து பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடகத்தை ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிக்கும் நிலை உள்ளதால், அதற்குள் சொல்லவேண்டிய கருத்துகளைச் சொல்லும் கட்டாயமும் ஏற்படுகிறது. ஆகவே, நாடகக் கலையை மீண்டும் உயிர்ப்பிக்கும் நிலையில், அதில் காலமாற்றத்துக்கு ஏற்ப சில சமரசங்களையும் ஏற்கும் நிலையில் உள்ளோம்.

நாடகங்களில் நடிக்க ஆர்வமுள்ள இளைஞர்கள் கிடைப்பதில்லை. நாடகத்தின் மூலம் திரைப்படத் துறைக்கு செல்லவே அதிகமானோர் விரும்புகின்றனர். அதிலும் பெண்கள் நடன நிகழ்ச்சிகளுக்குச் செல்வதில் காட்டும், ஆர்வத்தை நாடகங்களை நடிக்க வருவதில் காட்டுவதில்லை. அதனால், அம்மா வேடத்தில் நடிக்கும் பெண்ணையே காதலியாக நடிக்கவைக்கும் நிலையும் ஏற்படுகிறது. அதனாலும் நாடகக் கலையின் புத்துயிரூட்டும் முயற்சி பின்னடைவைச் சந்திக்கிறது. ஆகவே, திறமையான நாடகக் கலைஞர்களை உருவாக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.

நாடகக் கலையில் வருவாய் குறைவு என்பதும் அதன் மீது இளந்தலைமுறையினர் அதிக ஆர்வம் காட்டாமலிருப்பதற்கு காரணமாகிவிடுகிறது. குறைந்த நேரத்தில் அதிகம் சம்பாதிக்கவே பலரும் ஆசைப்படுகின்றனர். எனவே, அரசு வேலையில் இருந்தாலும் நாடகக் கலைஞர்களாகி நாடகத் தமிழுக்கு உயிரூட்டிவரும் நிலையில் உள்ளோம்.

நாடகத் தமிழை வளர்க்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதன்படி நாடகக் கலைஞர்களுக்கு உதவித் தொகை திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும்.

விழிப்புணர்வு சமூக நாடகங்களை ஊர்கள் தோறும் நடத்துவதற்கு அரசு நாடகக் குழுக்களைப் பயன்படுத்த வேண்டும்.

மேடை, ஒலி பெருக்கி என யாராவது அமைத்துக் கொடுத்தால் போதும் என சரித்திர, சமூக நாடகங்களை நாங்களே செலவழித்து நடத்திக் காட்ட தயாராக உள்ளோம். தெருக்கூத்து, நடனம், இசை என பல நிகழ்ச்சிகளை திருமணம் முதல் கோயில் திருவிழாக்கள் வரை நடத்திவரும் மக்கள் நாடகங்களையும் தொடர்ந்து நடத்த முன்வர வேண்டும்.

நாடகக் கலையை தமிழர்களாகிய நாம் வாழவைக்கும் நிலையிலேயே அக்கலை உள்ளது. அது தமிழ் மொழியையும், பண்பாடு, கலாசாரத்தையும் வாழ வைக்கும் கலை என்பதுதான் உண்மை நிலை.

"நாடகமெல்லாம் கண்டேன். உன் ஆடும் அழகிலே' என்ற திரைப்படப் பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. நாடகத்தின் தன்மையை "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும், பாடல் சான்ற புலனெறி வழக்கம், கலியே பரிபாட்டு ஆயிருபாவினும் உரியதாகும் என்மனார் புலவர்' என்கிறார் தொல்காப்பியர்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழில் முக்கிய தமிழாகவே நாடகத் தமிழ் விளங்கிவருகிறது. நாடகத் தமிழின் கையில் ஏந்திய விளக்காகவே திரைப்படங்கள் உள்ளிட்ட அறிவியல் வளர்ச்சிக் கலைகள் விளங்கிவருகின்றன.

தமிழகத்தின் நாடகத் தந்தையான சங்கரதாஸ் சுவாமிகள் தனது இறுதிக்காலத்தை புதுச்சேரியில்தான் கழித்தார். அவரது கல்லறைகூட நினைவிடமாக, கருவடிக்குப்பத்தில்தான் அமைந்துள்ளது. அத்தகைய தமிழ் நாடகத்தின் பெருமை மிகு புதுச்சேரியில் நாடகக் கலை உயிர்பெற்றுவருகிறது. இன்னும் ஊக்குவித்தால், நிலைமை மாறும்'' என்கிறார் பி.செல்வகுமார்.

படங்கள் கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT