தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளி விழா படங்களைத் தந்தவர் என்ற பெருமை நடிகர் மோகனுக்கு உண்டு. பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்து வந்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் திரைக்கு வருகிறார்.
இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் ஹரா என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், "நான் கடவுள்' ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து நடிகர் மோகன் பேசும் போது...
""எத்தனை தடவை ரசிகர்களுக்கு நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. உங்களுக்கு நான் காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறேன். நான் நடித்தாலும், இல்லையென்றாலும் என் மீது அன்பு செலுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. ஏன் நடிக்கவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். என்னைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், எனக்குக் கதை பிடித்தால் மட்டுமே நான் நடிப்பேன்.
விஜய் ஸ்ரீ ஜி 7 முறை கதையைத் திருத்திய பிறகு தான் இந்தப்படத்தை ஒப்புக் கொண்டேன். இந்தப்படத்திற்குக் கோவை மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு வியப்புக்குரியது, அத்தனை மக்களுக்கும் எங்கள் நன்றி. இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் பிரமாதமாகச் செய்துள்ளார்கள். இன்றைய சிறுவர்கள் முதல் அனைவருக்கும் பிடிக்கும் படி, விஜய்ஸ்ரீ ஜி படத்தை உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின். அருமையான பாடல்களை அவர் தந்துள்ளார். மகளைப் பற்றிய பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
நேர்மையாக உண்மையாக ஒரு படத்தை உருவாக்கினால், எந்த காலத்திலும் வியாபாரம் இருக்கும் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. டீசர் பார்த்துப் படத்தை வாங்க கோவை பிரதர்ஸ் முன் வந்துள்ளார்கள், மிகவும் பெருமையாக உள்ளது. உங்கள் ஆசீர்வாதத்தில் இந்தப்படம் ஜூன் 7-ஆம் தேதி திரைக்கு வரும். கோவை பிரதர்ஸ் இப்படத்தை விநியோகிக்கிறார்கள். இந்தப்படம் எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதத்தில் இருக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.