உழைப்பே வணக்கம்..!
இங்கிலாந்து ராணியிடம் பட்டமும், பதவியும் வாங்க மறுத்தவர் எழுத்தாளர் தாமஸ் கார்லைல்.
இங்கிலாந்து ராணியிடம் பட்டமும், பதவியும் வாங்க மறுத்தவர் எழுத்தாளர் தாமஸ் கார்லைல். உலகப் பெரியோர்கள், எழுத்தாளர்கள், அறிவியல் அறிஞர்களுக்குச் சிறந்த வாழ்க்கைத் துணைவிகள் வாய்ப்பது மிகவும் அரிது. அந்த அரிய வாய்ப்பு தாமஸ் கார்லைல்லுக்கு கிடைத்தது. அவருடைய மனைவி ஜேன்வெல்ஷ், இருவரும் நெடுங்காலம் இனிதே வாழ்ந்தனர். வயது முதிர்வால், ஜேன்வெல்ஷ் மரணமுற்றார்.
'ஜேன் வெல்ஷ் கார்லைல், தாமஸ் கார்லைலின் துணைவி. இங்கே புதைக்கப்பட்டுள்ளாள். அவளது வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்தவள். அன்பும் பாசமும் நன்றியும் உடையவள். நாற்பது ஆண்டுகளாக அவளது கணவர்க்கு உண்மை அன்புடன் உதவி, நண்பராக இருந்துவந்தார்.
தனது இனிய பேச்சாலும் செய்கையாலும் அவரது கணவன் செய்ய முயன்ற ஒவ்வொன்றும் அலுப்பில்லாமல் துணை நின்று, ஊக்கப்படுத்தி அவரை முன்னேற்றினார். திடீரென்று அவரிடமிருந்து பறித்துக் கொள்ளப்பட்டார். கணவனது வாழ்க்கையின் ஒளியே அழிந்துவிட்டது'' } இவ்வாறு மனைவியின் கல்லறையில் எழுதி வைத்தார் தாமஸ் கார்லைல்.
'உழைப்பே வணக்கம்'' என்ற சொற்றொடர் தாமஸ் கார்லைலின் தாரக மந்திரம், ஆங்கில இலக்கியத்தில் தனியிடத்தைப் பெற்றார் அவர். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில உரைநடைகளை எழுதியுள்ளார். அனைத்து நூல்களுமே புகழ் பெற்றது. இவற்றில் முக்கியமானவை} "பிரெஞ்சு புரட்சி', "பிரெடரிக் எனும் பெரியோர்', "சார்ட்டர் ரிசார்ட்ஸ்' முதலிய நூல்கள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவை.
இவரது எளிய, அதே நேரம் வலிமையான நடை தனிச்சிறப்பைப் பெற்றது. இலக்கண வரம்பைக் கடந்தது. பல வாக்கியங்களுக்கு வினைச் சொல்லே இருக்காது. வாசிப்போருக்கு ஆனந்தம் அளிக்கும். உண்மையை வலியுறுத்திக் கூறுவார். அதில், சிறிதும் சலனம் இருக்காது. ஆனாலும் நேர்மை ஒளி வீசிய அவரது பண்பட்ட நெஞ்சிலிருந்து வந்தமையால் அழுத்தமும், ஆழமும் கொண்ட கருத்துடன் அவரது படைப்புகள் விளங்கின.
இவர், "பிரெஞ்சு புரட்சி' என்ற அரிய நூலை அரும்பாடுபட்டு அரிய பல ஆதாரங்களுடன் இரவு, பகலாக உழைத்து, செவ்வனே எழுதி முடித்ததும் அதை தன் இனிய நண்பர் ஜான்
ஸ்டூவேர்ட் மில் என்பவரிடம் கொடுத்து, வாசித்துப் பார்த்து கருத்துக் கூறுமாறு கூறி கையெழுத்துப் பிரதிகள் முழுவதையும் கொடுத்தார். அந்த நண்பர் அதை வாங்கிச் சென்று, ஆழ்ந்து படித்துவிட்டு ஆங்காங்கே உள்ள பக்கங்களில் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். அந்தக் கையெழுத்துப் பிரதிகளையெல்லாம் தனது மேஜையில் வைத்திருந்தார் அவர்.
ஜான் ஸ்டூவர்ட் மில் வீட்டின் வேலைக்காரியாகப் பணிபுரிந்து வந்த வயதான பெண்மணி அந்தக் கையெழுத்துப் பிரதிகளையெல்லாம் குபபைகள் என்று கருதி, அவற்றையெல்லாம் அள்ளி எடுத்துகொண்டு சென்று அடுப்பெரிக்கப் பயன்படுத்திவிட்டார். அனைத்தும் தீயில் கருகி சாம்பலானது.
இந்தத் துயரச் செய்திகளைக் கேட்ட கார்லைல் தன் நண்பரை சிறிதும் கடிந்துகொள்ளாமல், 'கவலைப்பட வேண்டாம். அக்கதை முழுவதும் என் மனதில் பதிந்திருக்கிறது'' என்று ஆறுதல் கூறிவிட்டு, பழைய குறிப்பு எதுவுமே இல்லாத நிலையில், அதை நூலை மீண்டும் செவ்வனே எழுதி முடித்தார். "பிரெஞ்சு புரட்சி' என்ற அந்த அற்புத நூல் புத்தக உலகில் பெரும் சாதனையைப் படைத்தது.
தாமஸ் கார்லைல் ஏழ்மையில் பிறந்தார். பல துன்பங்களுக்கு இடையே கஷ்டப்பட்டு, படித்தார். ஏழ்மையை ஒழிக்கப் பாடுபட்டார். உண்டு, உறங்கி வாழும் சோம்பேறிகளைக் கடுமையாகத் தாக்கினார். உழைப்பாளர்களைப் பாராட்டிப் புகழ்ந்தார்.
வைதீக கிறிஸ்துவ மதத்தையும், அதன் மூட நம்பிக்கைகளையும் கடுமையாகக் கண்டித்தார். எதிர்ப்புக் குரல்களை எழுப்பினார். ஆனால், அவர் பிறந்த நாடான இங்கிலாந்து, அவரை கண்டுகொள்ளவில்லை. பாராட்டவில்லை. அவரது படைப்புகளின் அருமை, பெருமைகள் தெரியாமல் இருந்தது. உலக மக்கள் பாராட்டிய பின்னரே, தாமஸ் கார்லைலின் சிறப்பை உணரத் தொடங்கியது.
காலம் தாழ்த்தி அவருடைய வயதான காலத்தில், பட்டமும் பதவியும், பரிசுகளும் அளித்துச் சிறப்பிக்க எண்ணியது. இதனால் வேதனைப்பட்ட அவர், இங்கிலாந்து ராணி அறிவித்த பட்டத்தையும் உதவியையும் ஏற்க மறுத்துவிட்டார். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவராக உருவாகி, 1881}ஆம் ஆண்டு தனது 85-ஆம் வயதில் மறைந்தார் தாமஸ் கார்லைல்.
பேரறிஞர்கள் உடல்கள் புதைக்கப்பட்ட புகழ்மிக்க "வெஸ்ட் மினிஸ்டர் அபே'யில் தன்மை புதைக்க வேண்டாம் என்று அவர் முன்கூட்டியே தெரிவித்துவிட்டார். தாம் பிறந்த ஸ்காட்லாந்து பகுதியில் அவர் விருப்பப்படியே பெற்றோருக்கு அருகே புதைக்கப்பட்டார்.