முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

காலத்தை வென்றவர்களின் வாழ்வில்..!

மக்கள் நலப் பணிகளாலும், பல்வேறு வகைகளிலும் காலத்தை வென்று மக்கள் மனங்களில் இன்றும் நிலைத்து நிற்கும் தலைவர்கள் பலரும் உண்டு.

Updated On : 6 அக்டோபர், 2024 at 6:29 PM
பகிர்:
Updated On : 6 அக்டோபர், 2024 at 6:26 PM

மக்கள் நலப் பணிகளாலும், பல்வேறு வகைகளிலும் காலத்தை வென்று மக்கள் மனங்களில் இன்றும் நிலைத்து நிற்கும் தலைவர்கள் பலரும் உண்டு. அவர்களில் சிலரின் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள்:

ராஜாஜி முதல்வராக இருந்தபோது சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. சென்னையில் இருந்து மக்கள் வெளியேறிச் செல்ல ஏற்பாடு செய்வது குறித்து அரசு அலுவலர்கள் பரிசீலித்தனர். ஆனால் அதை ராஜாஜி மறுத்து, 'ஒரு குறிப்பிட்ட நாளன்று சென்னையைக் காப்பாற்ற எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் இறைவனை வேண்டி பிரார்த்திக்கலாம்' என்றார். இதை கம்யூனிஸ்ட் கட்சியினர் கேலி செய்தனர். ஆனால், ராஜாஜியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் திரண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

என்ன ஆச்சரியம்! இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் சென்னை மாநகரில் மேகங்கள் திரண்டு மூன்று நாள்கள் இடைவிடாமல் மழை கொட்டியது. நீர்நிலைகள் நிரம்பின. இது நடந்தது மே மாதத்தில்! 'மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் அதிசயம் நிகழும்' என்று பெருமிதமாகச் சொன்னார் ராஜாஜி.

Advertisement

Updated On : 6 அக்டோபர், 2024 at 6:28 PM

சிறுவயதில் நெப்போலியன் ஒரு ராணுவ விடுதியில் தங்கிப் படித்தார். உடன் அவர் அறையில் இன்னொரு மாணவரும் தங்கியிருந்தார். ஒருநாள் தனது பொருள் ஒன்று காணவில்லை என்று விடுதிக் காப்பாளரிடம் புகார் செய்தார் சக மாணவர். நெப்போலியன் மீது சந்தேகப்பட்டு விடுதிக் காப்பாளர் அவரை அடித்தார். அதற்குள் வேறொரு மாணவர் திருடியது தெரியவந்தது.

விடுதிக் காப்பாளரும் பரிதாபப்பட்டு நெப்போலியனிடம், 'ஏம்பா, உன்னை அடிப்பதற்கு முன்பு உண்மையை சொல்லி இருக்கலாமே' என்றார்.

நெப்போலியன் நிமிர்ந்து, 'ஐயா, நீங்கள் என்னை அடிப்பதற்கு முன்பு விசாரிக்கவில்லையே. அடித்துகொண்டே கேட்டதால் நான் உண்மையை சொன்னாலும் அடிக்கு பயந்து ஒப்புக் கொண்டதாகத்தான் அர்த்தமாகும். நான் பயந்ததாக யாரும் எந்த நிலையிலும் நினைக்க இடம் தர மாட்டேன்' என்றார்.

-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

Updated On : 6 அக்டோபர், 2024 at 6:26 PM

'காங்கிரஸ் கட்சி தோல்வியுற்ற நிலையில் உங்கள் கட்சித் தொண்டர்கள் அரசியல் வாழ்வுக்காக, வேறு கட்சிக்குச் சென்றுவிட மாட்டார்களா?' என்று 'துக்ளக்' ஆசிரியர் சோ கேட்ட கேள்விக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் அளித்த பதில்:

'காங்கிரஸýக்கு இப்போதைய ஆதரவும் குறையாது. கட்சித் தொண்டர்களும் மாற மாட்டார்கள். என் கையில் அதிகாரம் இல்லாதபோதும், என் பின்னால் தொண்டர்கள் இருக்கின்றனர். நான் பதவியில் இருந்து கீழே சென்றாலும், அவர்கள் என்னிடமே இருக்கின்றனர். இதைவிட கீழே போக முடியும்னு சொன்னாலும் போகலாம். நான் எதை கொடுத்தேன்னு என்னிடம் இருக்கின்றனர்.

அவர்கள் எதுவுமே வேண்டாமுன்னு நினைப்போர். பெரியவர்கள் சிலர் வேண்டுமானால் என்னைவிட்டு போகலாம். அரசியலில் அது நடக்கவே செய்யும். ஒன்றும் வருத்தம் இல்லை. ஆனால், தொண்டர்கள் என்னைவிட்டு செல்ல மாட்டார்கள். கொடி கட்டக் கூட பணம் தந்ததில்லை. என்னால் வாக்குகள் வாங்க முடியவில்லை. அப்போதும் என் கூட இருக்கிற தொண்டர்கள் எப்படி என்னைவிட்டு செல்வார்கள்' என்றார் காமராஜர்.

Updated On : 6 அக்டோபர், 2024 at 6:28 PM

1932-இல் தீர்த்தஹள்ளியில் பிறந்த கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி, ஞானபீட விருது, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றவர். இவரது 'பரா' எனும் நாவல் திரைப்படமாகியது. எம்.எஸ்.சத்யு இயக்க, ஆனந்தநாக் முக்கிய பாத்திரத்தில் நடிக்க சிறந்த படமாக வெளியாகிறது. 'பஞ்சம்' எனும் பெயரில் வந்த சிறந்த கலைப்படம் அது. இந்தியிலும் 'சுக்'. மிகவும் வறண்ட பிரதேசமான பீதர், பிஜப்பூரை நிலைக்கண்களாகக் கொண்ட கதை. இதன் கதாநாயகன் மாவட்ட ஆட்சியர்.

இரண்டு பகுதிகளும் வறண்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் நீரைத் தேடி அலைகின்றனர். அரசியல்வாதிகளின் தலையீட்டால், முட்டுக்கட்டை போடப்படுகிறது. இறுதியில் ஆட்சியர் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே கிளைமாக்ஸ்.

Updated On : 6 அக்டோபர், 2024 at 6:29 PM

'ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடு செனகல். இது பிரெஞ்சு அரசுக்கு அடிமையாக இருந்தது. அந்த நாடு விடுதலை பெறுவதற்கு லியோபோல்டு செடர் செங்கோர் என்பவர் போராடினார். பிற்காலத்தில் ஆட்சித் தலைவரும் ஆனார். விடுதலைப் போராட்டத் தலைவர் என்பதோடு, கவிஞர், மொழி ஆய்வாளர் என பன்முகத் தன்மைகளைப் பெற்றவர். பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளை அறிந்த அவர், சிலப்பதிகாரத்தையும் படித்துள்ளார்.

செனகல் நாட்டில் வோலஃப் புலார், பம்பரா, பெங்கோ ஆகிய மொழிகளில் திராவிட மொழிகள் கலந்திருப்பதை ஆய்வு செய்து கண்டறிந்தவர் இவர். 'டெங்கோ கருப்பினத்தவர்களே உலகின் முதல் மக்கள் பண்பாட்டைத் தொடங்கியவர்கள்' என்று 1974-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'நீக்ரோத்துவமும் திராவிடப் பண்பாடும்' என்னும் தலைப்பில் ஆய்வுரை வழங்கினார் இவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.