வாக்காளரின் பொறுப்பும், கடமையும்...
வாக்களிக்கும் முன்பாக ஒரு கட்சியின் கொள்கைகள், அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் திறமை, நேர்மை, உழைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கும்போது தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் "நம் நாட்டின் பெருமைமிகு ஜனநாயகத் திருவிழா' என்று குறிப்பிட்டார். தேர்தலை திருவிழா என்று குறிப்பிட்டதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னைப் பொருத்தவரை நாட்டின் வளர்ச்சியை, மாநிலத்தின் வளர்ச்சியை உண்மையான அர்ப்பணிப்புடன் கொண்டுசெல்லப் போகிற ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஜனநாயகக் கடமையும், பொறுப்பும் செயல்படுத்த வேண்டிய வாக்காளரின் கடமைக்கான நாள் என்றுதான் பார்க்கிறேன்.
தேர்தலில் வாக்களிப்பதை ஜனநாயகக் கடமையாக ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பொறுப்புணர்ந்து வாக்களிக்க வேண்டும். இவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லவில்லை; உங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்று தோன்றுகிறதோ அவருக்கு வாக்களியுங்கள்.
தேர்தல் ஆணையம் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனால், வாக்குப்பதிவு 50, 60, 70 சதவீதம்தான் பதிவாகின்றன. தேர்தல் ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரப்படி பார்த்தால் வாக்களிக்காதவர்கள் குறைந்தது 30 சதவீதம், சில தொகுதிகளில் அது 40 சதவீதமாகக்கூட இருக்கிறது. வாக்களிப்பதைத் தவிர்த்து, அன்றைய தினம் தங்களுக்குக் கிடைத்த விடுமுறை தினம் என்று ஓய்வு அல்லது கேளிக்கைகளுக்கு அந்த நாளை செலவிடுகிறார்கள்.
Advertisement
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம். பேரவைத் தேர்தலுக்காக 75,032 வாக்குப்பதிவு மையங்கள் அமைய உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிப்பறை, தகவல் பலகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான சாய்வுப் பாதை, சக்கர நாற்காலிகள், வாக்காளர்கள் எடுத்து வரும் கைப்பேசிகளைப் பாதுகாப்பதற்கான வசதி என வாக்குப் பதிவை அதிகரிப்பதற்காக அனைத்தையும் தேர்தல் ஆணையம் செய்து வருவது பாராட்டுக்குரியது.
தேர்தல் என்றாலே விழிப்புணர்வு, கட்டுப்பாடு, கெடுபிடி என்பது தற்சமயம் அதிகரித்திருக்கிறது. பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றே தமிழகம் முழுவதும் 1,872 பறக்கும் படை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இது தவிர, தேர்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். வங்கிப் பரிவர்த்தனைகளை வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். தேர்தல் ஆணையம் சில உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்திருக்கிறது. இதற்குக் காரணம், அவர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாளர்கள் என்பதுதான். அதிகாரிகளைப் பொருத்தவரை அவர்கள் மக்களுக்கான பணிகளைச் செய்ய வேண்டும். இதில் ஆளும் கட்சி ஆதரவு என்ற சந்தேக நிழல் அவர்கள் மீது விழக் கூடாது.
எதிர்க்கட்சிகள் புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை என்று விளக்கம் சொல்கிறது தேர்தல் ஆணையம். ஆட்சிக்கு வந்தாலும் அதே அதிகாரிகளை வைத்துத்தான் வேலை வாங்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகள் மறந்து விடுகின்றன. நான் (கட்டுரையாளர்) தேர்தலை சந்தித்த காலத்தில் இது போன்ற பறக்கும் படை, வருமான வரி சோதனை, துணை ராணுவம், அதிகாரிகள் மாற்றம் போன்றவை இல்லை.
தேர்தல் பிரசாரத்தின்போது என்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை நான் நேரில் சந்தித்த போது, அவரை நான் எதிரியாக பார்க்காமல் ஒரு போட்டி வேட்பாளர் என்று மட்டுமே பார்த்தேன் என்பதால், அவரிடம் நலன் விசாரிப்பது,
வாழ்த்துச் சொல்வதில் எனக்கு எந்தச் சங்கடமும் இருந்ததில்லை. ஆனால், இப்போது அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
தேர்தல் பிரசாரம், வாக்கு சேகரித்தல் என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டார்கள் என்ற அளவில் தேர்தல் பிரசாரம் முடிவடையும். ஆனால், தமிழ்நாட்டைப் பொருத்தவரை அறிஞர் அண்ணாதான் ஒவ்வொரு வாக்காளரையும் வீடு வீடாகச் சென்று தொண்டர்கள் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதைச் செயல்படுத்தவும் செய்தார். வீடு வீடாக பிரசாரம் என்பதை அவர் 1957-இல் அறிமுகப்படுத்தினார். அதை இப்போது எல்லா கட்சிகளுமே பின்பற்றத் தொடங்கிவிட்டன.
இரவு பத்து மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ய இப்போது அனுமதி இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் பிரசாரத்துக்கான வரையறை எதையும் சொல்லவில்லை என்பதால், நள்ளிரவு வரை தேர்தல் பிரசார கூட்டங்கள் நடந்திருக்கின்றன. அதேபோல், வாக்குக்குப் பணம் என்பது ஆட்சியில் எம்ஜிஆர் இருந்தவரை தமிழ்நாட்டில் இல்லை.
2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளருக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா நடைபெற்றது கண்டறியப்பட்டு அந்தத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இறுதியாக, அதே ஆண்டு நவம்பரில் அந்த இரண்டு தொகுதிகளுக்கும் தனியாக தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கடந்த மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கையால் வாக்காளர்களுக்கு வாக்களிக்க கொடுப்பதற்காக எடுத்துச் சென்ற ரூ. 69.59 கோடி, ரூ.8.17 கோடி மதிப்பிலான மது பாட்டில்கள், ரூ. 330 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ. 99.85 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 35.21 கோடி மதிப்பிலான இலவசப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதே சமயம், அடகுக் கடையில் வைத்த நகைகளை மீட்க வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட பணம், திருமணத்துக்கான நகைகள் வாங்க, ஆடு, மாடுகள் வாங்க, மருத்துவமனைக்குச் செல்ல எடுத்துச் சென்ற பணம் என அப்பாவி பொதுமக்களின் பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் பலரும் பாதிக்கப்பட்டனர். தேர்தல் ஆணையம் இதைத் கவனிக்க வேண்டும். கேரளத்தில் இப்போதும் தேர்தலுக்கு குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கம் இல்லை.
இப்போது அரசியல் கட்சிகள் விருப்ப மனு விண்ணப்பத்திலேயே தேர்தலுக்கு எத்தனை கோடி செலவு செய்ய முடியும் என்ற கேள்வியை அந்த மனுவில் சேர்த்திருக்கிறார்கள். தேர்தல் செலவு குறித்து சில வேட்பாளர்களிடம் நான் பேசிய போது இத்தனை கோடி செலவானது என்று சொல்லி, "என் சொத்தை விற்றேன், என் உறவினரிடம் இத்தனை கோடி கடன் வாங்கினேன்' என்கிறார்கள்.
ஆனால், எனக்கு அப்படி எந்த அனுபவமும் இல்லை. போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து மனு தரவேண்டும். அதன் பிறகு 3 பேர் கொண்ட குழு தொகுதிக்கு வந்து கட்சித் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்டு அறிக்கை தருவார்கள். அதன் அடிப்படையில், வேட்பாளர் தேர்வு இருக்கும். ஆனால், இப்போது அப்படி எதுவும் நடைபெறுவதில்லை.
முன்பு அரசியல் கட்சிகள் தேர்தல் நிதியாக மக்களிடம் வசூல் செய்வார்கள். வேட்பாளரின் தேர்தல் செலவை அரசியல் கட்சிகள்தான் ஏற்றுக் கொள்ளும்.
1967-இல் சட்டப்பேரவை, நாடாளுமன்றம் இரண்டுக்கும் தேர்தல் நடைபெற்றது. அப்போது, திமுக செலவு செய்தது ரூ. 11 லட்சம் மட்டுமே. நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது அறிஞர் அண்ணா எனக்கு தேர்தல் செலவுக்கு ரூ. 4 ஆயிரத்தை காசோலையாக தந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது எம்ஜிஆர்தான் தேர்தல் செலவைப் பார்த்துக் கொண்டார். இதற்குக் காரணம் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே வசதி இல்லாத பாமரர்களை, அதே சமயம் மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை வேட்பாளராக நிறுத்தின. தேர்தல் செலவுக்கு வேட்பாளருக்கு ரூ. 50 ஆயிரம் தந்தார் எம்ஜிஆர்.
பதற்றமான தொகுதிகள் என்று, அதாவது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படும் தொகுதிகளில் வாக்குச்சாவடிகளை அடையாளம் கண்டு அங்கு கூடுதல் கண்காணிப்பு, கூடுதல் பாதுகாப்புகளை தேர்தல் ஆணையம் கவனிக்கிறது. தேர்தல் என்பது, மக்களுக்கு நன்மை செய்வதற்காக என்ற எண்ணத்துடன் அரசியல் கட்சிகளின் செயல்பாடு இருந்தால் பதற்றமான தொகுதிகள் என்ற பேச்சே இருக்காது.
தேர்தல் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு நோர்டிக் நாடுகளிடம் நாம் பாடம் கற்க வேண்டும். (நோர்டிக் நாடுகள் என்பது நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து.) இவர்கள் மக்களாட்சிக்கு முன்மாதிரியான நாடுகள். அந்த நாடுகளில் தேர்தல் என்பது ஓர் ஆரோக்கியமான விளையாட்டுபோல நடைபெறும். வெற்றி பெற்றவர் வெற்றியை பெரிய அளவில் கொண்டாட மாட்டார். தோல்வி அடைந்தவர், அடுத்த முறை நாம் வெற்றி பெறுவோம் என்று பெருந்தன்மையாக அதை எடுத்துக்கொள்வார்.
வேட்பாளர்கள் செலவு செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும் அரசு பார்த்துக் கொள்ளும். அதே மாதிரியான தேர்தல் நம் நாட்டிலும் நடைபெற வேண்டும். நோர்டிக் நாடுகள் மக்களைக் காப்பதில் இன்றுவரை ஒரு முன்மாதிரியாக இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் மக்களாட்சிக்கு அவர்களைத்தான் எடுத்துக்காட்டாக எல்லோரும் சொல்வார்கள். அங்கு எல்லோருக்கும் ஓய்வூதியம் உண்டு; வரி அதிகம்; வரி செலுத்துபவர்களும் அதிகம்; வரி ஏய்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
வாக்களிக்கும் முன்பாக ஒரு கட்சியின் கொள்கைகள், அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் திறமை, நேர்மை, உழைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவரைவிட நமக்கும், நமது தொகுதிக்கும் எந்த அளவுக்கு வேட்பாளர் உதவிகரமாக இருப்பார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் சேவை செய்பவராகவும், அதற்கு மக்களிடம் எதையும் எதிர்பார்க்காதவராகவும் இருப்பவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்களிப்பது நமது பொறுப்பும், கடமையும் என்பதை உணர வேண்டும்.