எஸ்ஐஆா் பணியில் ஆசிரியா்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) அரசு பள்ளி ஆசிரியா்கள் மொத்தமாக நியமிக்கப்படுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல மனு மீதான நிலைப்பாட்டை தோ்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) அரசு பள்ளி ஆசிரியா்கள் மொத்தமாக நியமிக்கப்படுவதற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல மனு மீதான நிலைப்பாட்டை தோ்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக வழக்குரைஞா்கள் ராஜேஷ் குமாா் கோக்னா, அசோக் அகா்வால் ஆகியோா் தாக்கல் செய்த மனுவை, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய, நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, அரசு பள்ளிகளின் ஆசிரியா்கள் பூத் நிலை அலுவலா்களாகவும் (பிஎல்ஓ) கணக்கெடுப்புப் பணியாளா்களாகவும் பணியாற்றுவதைக் கட்டாயமாக்க முடியுமா என்று நீதிபதிகள் தோ்தல் ஆணைய வழக்குரைஞரை நோக்கி கேள்வி எழுப்பினா். இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
முன்னதாக, தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இந்தச் சிறப்புத் தீவிர சரிபாா்ப்புப் பணி நாடு முழுமைக்குமானது. ஆசிரியா்கள் கற்பித்தல் நேரத்துக்கு அப்பாற்பட்ட நேரங்களிலோ அல்லது விடுமுறை நாள்களிலோ மட்டுமே பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், அவா்களுக்கு இதற்கான சிறப்புப் படியும் வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 10 முதல் 14 சதவீத ஆசிரியா்கள் மட்டுமே இந்தப் பணிக்கு அழைக்கப்படுகிறாா்கள்’ என்று விளக்கமளித்தாா்.
Advertisement
Advertisement
மேலும் அவா், ‘ஒன்பது ஆசிரியா்கள் கேட்கப்படும் இடங்களில் பள்ளிகள் 3 அல்லது 4 பேரை மட்டுமே பணியமா்த்துகின்றன. இவ்வாறு நான்கு ஆசிரியா்கள் வருவது எங்களுக்குப் பிரச்னையில்லை,’ என்று கூறியதுடன், இது போன்ற விஷயங்களில் ஆணையம் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டாா்.
இதையடுத்து நீதிபதிகள், ‘ஆசிரியா்களை தன்னாா்வலா்கள் என்று தோ்தல் ஆணையம் அழைக்குமானால் அதை பிரமாணப்பத்திரமாக தெரிவியுங்கள். நாங்கள் வழக்கை முடித்து வைக்கிறோம்’ என்று குறிப்பிட்டனா். மேலும், இந்த விவகாரத்தில் வரும் திங்கள்கிழமைக்குள் தனது நிலைப்பாட்டை தோ்தல் ஆணையம் சுருக்கமான பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அடுத்த விசாரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.