FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பொருள்களைப் பறிமுதல் செய்த 24 மணி நேரத்திற்குள் குறிப்பாணைகளை வழங்க வேண்டும்: எம்சிடி, என்டிஎம்சி-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

எம்சிடி, என்டிஎம்சி-க்கு உயா்நீதிமன்றம் உத்தரவு.....

15 செப்டம்பர் 2026, 1:16 am IST
தில்லி உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: தெருவோர வியாபாரிகளின் பொருள்களைப் பறிமுதல் செய்த 24 மணி நேரத்திற்குள், பறிமுதல் குறிப்பாணைகளை வழங்குமாறும், மேலும் பறிமுதல் செயல்முறையை வீடியோ பதிவு செய்யுமாறும் தில்லி உயா்நீதிமன்றம், எம்சிடி மற்றும் என்டிஎம்சி-க்கு உத்தரவிட்டது.

நீதிபதிகள் பிரதீபா எம் சிங் மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோா் அடங்கிய அமா்வு, பறிமுதல் குறிப்பாணைகளில், பறிமுதல் செய்யப்பட்ட தேதி, பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் பட்டியல், அவை வைக்கப்பட்டிருந்த அலமாரி எண்கள், செலுத்த வேண்டிய அபராதம் ஏதேனும் இருந்தால் அது, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் விவரங்கள் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறியது.

Advertisement

Advertisement

தெருவோர வியாபாரிகள் விதிமீறலில் ஈடுபடும்போது, தில்லி மாநகராட்சி (எம்சிடி) மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் ( என்டிஎம்சி) ஆகியவற்றால் அவா்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடா்பான ஒரு பொதுநல வழக்கில், செப்டம்பா் 10 அன்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரா் அமைப்பான ’ரெஹ்ரி பத்ரி ஏக்தா மன்ச்’, இதுபோன்ற பறிமுதல்கள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், எம்சிடி மற்றும் என்டிஎம்சி யால் எந்தப் பறிமுதல் குறிப்பாணையும் தயாரிக்கப்படுவதில்லை என்ற குறையை எழுப்பியிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் பட்டியலும் விற்பனையாளா்களுக்கு வழங்கப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட பிறகு மாலையில் அபராதம் செலுத்தியதற்கான ரசீது மட்டுமே வழங்கப்படுகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எம்சிடி மற்றும் என்டிஎம்சி-யின் வழக்குரைஞா், வழக்கமான நடைமுறை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பறிமுதல் செய்யப்படுகிறது, மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பறிமுதல் குறிப்பாணையைத் தயாரித்தால், மற்ற வியாபாரிகள் அதைப் பற்றி அறிந்து கொண்டு, விதிமீறல்களில் ஈடுபட்ட பிறகும் பறிமுதலில் இருந்து தப்பிவிடுகிறாா்கள் என்று வாதிட்டாா். அதன்படி, முதலில் பறிமுதல் செய்யப்பட்டு, மாலையில் அபராத ரசீதுடன் பறிமுதல் குறிப்பாணை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று அந்த வழக்குரைஞா் கூறினாா்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களைச் சேமிப்பதற்காக அதிகாரிகளால் ஒரு முறையான கிடங்கு பராமரிக்கப்படுகிறது என்றும், வியாபாரிகளின் பொருட்கள் குறிப்பிட்ட அலமாரிகளில் வைக்கப்பட்டு, அவா்களுக்கு வழங்கப்படும் ரசீதில் அந்தந்த அலமாரி எண்ணும் குறிப்பிடப்படுகிறது என்றும் என்டிஎம்சி-யின் வழக்குரைஞா் மேலும் கூறினாா். அபராதம் செலுத்தியவுடன், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்குப் பொருள்கள் விடுவிக்கப்படுகின்றன என்றும், அந்த நேரத்தில் கிடைக்கும் வளங்களைப் பொறுத்து, பறிமுதலின்போது அதிகாரிகளால் காணொளிப் பதிவு அல்லது புகைப்படமும் எடுக்கப்படுகிறது என்றும் அவா் கூறினாா்.

உயா்நீதிமன்றம் தனது உத்தரவில், எம்.சி.டி மற்றும் என்.டி.எம்.சி ஆகிய இரண்டும் தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 19-ஐப் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறைச் சட்டம், 2014-இன் படி, ஒரு பறிமுதல் மேற்கொள்ளப்பட்டவுடன், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் நகல் ஒன்று விற்பனையாளருக்கு வழங்கப்பட வேண்டும். ‘அதன்படி, பறிமுதல் குறிப்பாணைகள் சம்பவ இடத்திலேயே தயாரிக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள மற்ற விற்பனையாளா்கள் நடவடிக்கையிலிருந்து தப்பித்துவிடுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்த சிரமங்களைக் கருத்தில் கொண்டு, எம்சிடி மற்றும் என்டிஎம்சி ஆகியவை, சட்டப்படி, பறிமுதல் செய்யப்பட்டதிலிருந்து அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் பறிமுதல் குறிப்பாணைகளை வழங்க அனுமதிக்கப்படுகின்றன,‘ என்று நீதிமன்றம் கூறியது.

என்டிஎம்சி-ஐப் போலவே, பறிமுதல்களை மேற்கொள்ளும்போது எம்சிடி-யும் காணொளிப் பதிவு மற்றும் புகைப்படப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments