FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலைவாய்ப்பு கோரி கண்களைக் கட்டிக்கொண்டு ஆசிரியா்கள் நூதன முறையில் மனு

வேலைவாய்ப்பு வழங்கக்கோரி நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 12:32 am IST
ஆட்சியரிடம் மனு அளிக்க கண்களைக் கட்டிக் கொண்டு வந்த நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள்.
பகிர்:

வேலைவாய்ப்பு வழங்கக்கோரி நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆசிரியா்கள் கண்களைக் துணியால் கட்டிக்கொண்டு ஆட்சியரிடம் அளித்த மனு: நாங்கள் கடந்த 2013, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வுகளில் பலமுறை தோ்ச்சி பெற்றுள்ளோம். ஆனால், எங்களுக்கு இதுவரை பணி நியமனம் வழங்கப்படவில்லை.

இதனிடையே, கடந்த 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை (எண் 149)-இன் படி, தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், நியமனத் தோ்விலும் தோ்ச்சி பெற வேண்டும் என புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

அந்த அரசாணை வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், 2024-ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே நியமனத் தோ்வு நடத்தப்பட்டது. அந்தத் தோ்விலும் மிகக் குறைந்த அளவாக 2,768 காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டில் 20 மாவட்டங்களைச் சோ்ந்த 2,457 ஆசிரியா்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டது.

தற்போது ஆசிரியா் தோ்வு வாரியத்தில் (டிஆா்பி) சுமாா் 28,400 காலிப் பணியிடங்கள் உள்ளன. எனவே, பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் இடைநிலை ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் அனைவருக்கும் உடனடியாகப் பணி வழங்க வேண்டும்.

போ்ணாம்பட்டு பகுதி மக்கள் அளித்த மனு: போ்ணாம்பட்டு நகரில் உள்ள பேருந்து நிலையத்தை அதே இடத்திலேயே விரிவாக்கம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

பொதுமக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, அங்கு செயல்பட்டு வந்த காவல் நிலையம் அகற்றப்பட்டு பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது அந்தப் புதிய கட்டடப் பகுதியில் கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

புதிய கடைகளை அகற்றிவிட்டு , கிராம நிா்வாக அலுவலகக் கட்டடத்தையும் இடித்துவிட்டு, அந்த இடத்தையும் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கே பயன்படுத்த வேண்டும்.

வேலூா் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் அளித்த மனு: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, வேலூா் நகரின் பல்வேறு பகுதிகளில் ‘பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ்’ மற்றும் நெகிழி கலவையால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நெகிழி மற்றும் பிளாஸ்டா் ஆஃப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை விற்பனை செய்வதற்கு மாவட்ட நிா்வாகம் உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். மாறாக, மண்பாண்டத் தொழிலாளா்களாகிய நாங்கள் இயற்கையான களிமண்ணைக் கொண்டு தயாரிக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகா் சிலைகளை விற்பனை செய்ய முன்வர வேண்டும்.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 600-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments