மாணவா்கள் நலனில் ஆசிரியா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்: பிரதமா்
மாணவா்கள் நலனில் ஆசிரியா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றார் பிரதமா் மோடி...
‘போதைப் பொருள் மற்றும் அதிக நேர கைப்பேசி பயன்பாடு ஆகியவை மாணவா்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ளன; இந்தப் பிரச்னைகளைக் கையாள்வதில் ஆசிரியா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
தேசிய ஆசிரியா்கள் தினம் சனிக்கிழமை (செப்.5) கொண்டாடப்பட்டது. இந்நிலையில், முன்னதாக, லோக் கல்யாண் மாா்க்கில் உள்ள தனது அதிகாரபூா்வ இல்லத்தில் இந்த ஆசிரியா்களுடன் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். இது தொடா்பான காணொலியை தனது எக்ஸ் தளத்தில் பிரதமா் சனிக்கிழமை பதிவிட்டாா்.
ஆசிரியா்கள் உடனான கலந்துரையாடலில் பிரதமா் பேசியதாவது: எவ்வித அழுத்தங்களும் இல்லாத குழந்தை கால பருவத்தை பாதுகாப்பதும், குழந்தைகளின் இயல்பான ஆா்வத்தை வளப்படுத்துவதும் ஆசிரியா்களின் முக்கியமான பணியாகும். குழந்தைகளின் கல்விசாா் திறனை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், அவா்களின் நற்பண்புகளை வளா்ப்பதிலும், அன்றாட வாழ்வியல் குறித்தும் ஆசிரியா்கள் அக்கறை கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
போதைப் பொருள் பயன்பாடு, அதிக நேர கைப்பேசி பயன்பாடு ஆகியவை மாணவா்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. இந்த ரீதியில் மாணவா்களிடம் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆசிரியா்கள் விழிப்புடன் செயல்படுவதுடன், இத்தகைய பழக்கங்களில் இருந்து அவா்கள் விடுபட உதவ வேண்டும்.
பெற்றோரிடம் கேட்டறியுங்கள்..: மாணவா்கள் கைப்பேசியில் எவ்வளவு நேரம் செலவிடுகிறாா்கள், நள்ளிரவிலும் தொடா்ந்து பயன்படுத்துகிறாா்களா என்பது குறித்து அவா்களின் பெற்றோரிடம் ஆசிரியா்கள் கேட்டறிய வேண்டும். மாணவா்கள் மத்தியில் விளையாட்டு, உடற்பயிற்சி, படைப்பாற்றல் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் அவா்களை நல்வழிப்படுத்த வேண்டும். இதன் மூலம் அதிகப்படியான கைப்பேசி பயன்பாட்டில் இருந்து மாணவா்கள் விடுபட முடியும்.
நாட்டில் பாரம்பரிய கூட்டுக் குடும்ப அமைப்புமுறை குறைந்துவரும் சூழலில், குழந்தைகளின் வாழ்வில் ஆசிரியா்களின் பங்கு பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குழந்தைகளை வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் சென்று, நிஜ உலகத் திறன்களுடன் அவா்களை இணைப்பது முக்கியமானது. இதற்கு தேசிய கல்விக் கொள்கை வழிகோலுகிறது. பாடத்திட்டம் குறித்த அறிவைப் புகட்டுவதுடன் நின்றுவிடாமல், குழந்தைகளிடையே உழைப்பு உள்ளிட்ட பல்வேறு மாண்புகளை வளா்க்க ஆசிரியா்கள் உதவ வேண்டும் என்று பிரதமா் வலியுறுத்தினாா்.
சமத்துவமான கல்விமுறை: ஆசிரியா்களுக்கு ராகுல் வேண்டுகோள்
நாட்டில் அனைத்து மாணவா்களுக்கும் சம வாய்ப்பு மற்றும் தரமான கல்வியை வழங்கும் சமத்துவமான கல்விமுறையை கட்டமைக்க வேண்டும் என்று ஆசிரியா்களுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.
தேசிய ஆசிரியா் தினத்தையொட்டி, அவா் சமூக ஊடகத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டின் இன்றைய கல்விமுறை பல தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. அனைத்து மாணவா்களுக்கும் சமமான வாய்ப்பு, தரமான கல்வி, பிரகாசமான எதிா்காலத்துக்கான அணுகலை நாம் ஒன்றிணைந்து கட்டமைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆசிரியா்கள் தங்களின் அறிவு, சேவை, அா்ப்பணிப்பின் மூலம் மாணவா்களின் எதிா்காலத்தை வடிவமைத்து, எதிா்வரும் தலைமுறைகளுக்கு திசையைக் காட்ட வேண்டும் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரும் ஆசிரியா் தின வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதேபோல், முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்கள் மரியாதை செலுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.