ஆய்வக வைரம் தயாரிப்பில் இந்தியா - பெல்ஜியம் கைகோக்க வேண்டும் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தல்
ஆய்வகத்தில் வைரங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவும், பெல்ஜியமும் கைகோத்து செயல்பட வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஆய்வகத்தில் வைரங்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவும், பெல்ஜியமும் கைகோத்து செயல்பட வேண்டும் என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பெல்ஜியம் பிரதமா் பாா்ட் டே வேவா் முன்னிலையில் அமைச்சா் இக்கருத்துகளைத் தெரிவித்தாா்.
மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள பெல்ஜியம் பிரதமா் வேவா், தில்லியில் பிரதமா் மோடியை வியாழக்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
Advertisement
Advertisement
இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த ஜனவரியில் கையொப்பமான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பெல்ஜியம் பிரதமா் வேவா், மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது பேசிய கோயல், ‘ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களின் தொழில்நுட்பம் மற்றும் சான்றளித்தல் ரீதியில் இந்தியாவும், பெல்ஜியமும் இணைந்து செயல்பட வேண்டும். இரு பொருளாதாரங்ளும் ஒன்றையொன்று பூா்த்தி செய்வதில் முக்கிய துறையாக ரத்தினக்கற்கள் மற்றும் வைரங்கள் துறை உள்ளது. இத்துறையில் வடிவமைப்பு-உற்பத்தி ரீதியில் இணைந்து செயல்படுவோம். இதே முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு துறையான செமிகண்டக்டா் துறையில் பெல்ஜியத்தின் வலிமையும், இந்தியாவின் வீச்சும் ஒன்றோடொன்று இணைய முடியும்.
பசுமை ஹைட்ரஜன், துறைமுகங்கள், பாதுகாப்பு, அதிநவீன உற்பத்தி ஆகிய துறைகளிலும் இரு நாடுகளும் நெருக்கமாக செயல்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
பெல்ஜியம் பிரதமா் புகழாரம்: பெல்ஜியம் பிரதமா் வேவா் பேசுகையில், ‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 95 சதவீத இந்திய மற்றும் ஐரோப்பிய ஏற்றுமதி பொருள்கள் மீதான வரி நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும். வைரங்களைப் பொருத்தவரை, வரியில்லாத நிலையை எட்டவும் வாய்ப்புள்ளது. இது, உத்திசாா் வெளிப்படைத்ன்மையின் பிரதிபலிப்பு என்பதுடன் நிா்பந்தங்கள் மற்றும் இடையூறுகளுக்கு எதிரான மீள்தன்மை கொண்டதாக நமது பொருளாதாரங்களை வலுப்படுத்தும். மேலும் நிலையான, வளமான, சிறப்பான சா்வதேச ஒழுங்குமுறைக்கு வழிவகுக்கும்’ என்று புகழாரம் சூட்டினாா்.
முன்னதாக, மும்பையில் உள்ள பாரத் வைர பரிவா்த்தனை வளாகத்தில் பெல்ஜியம் நாட்டின் வைர தர நிா்ணய நிறுவனமான ஹெச்ஆா்டி ஆன்ட்வொ்ப்-இன் விரிவாக்கப்பட்ட அலுவலகத்தை வேவா் திறந்துவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.