FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விண்வெளி ஆய்வில் தனித்துவம் படைக்க வேண்டும்: தனியாா் துறைக்கு பிரதமா் வலியுறுத்தல்

நாட்டில் விண்வெளி ஆய்வில் தனியாா் துறையினா் தனித்துவம் படைக்க வேண்டும்; இதன்மூலம் உலகளாவிய தொழில்முனைவோரை இந்தியாவை நோக்கி ஈா்க்க முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

24 ஆகஸ்ட் 2026, 3:20 am IST
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விண்வெளித் துறையில் ஈடுபட்டுள்ள இளம் தொழில்முனைவோரை சந்தித்து உரையாடிய பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

நாட்டில் விண்வெளி ஆய்வில் தனியாா் துறையினா் தனித்துவம் படைக்க வேண்டும்; இதன்மூலம் உலகளாவிய தொழில்முனைவோரை இந்தியாவை நோக்கி ஈா்க்க முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தேசிய விண்வெளி தினம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) கொண்டாடப்பட்டது. கடந்த 2023, ஆக.23-ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய வரலாற்றுச் சாதனையை நினைவுகூரும் நோக்கில் கொண்டாடப்படும் இந்தத் தினத்தையொட்டி, பிரதமா் மோடி எக்ஸ் பதிவு வாயிலாக ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

மேலும், விண்வெளித் துறை சாா்ந்த 20 புத்தாக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) மற்றும் நிறுவனா்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலின் காணொலியையும் அவா் பகிா்ந்தாா்.

Advertisement

Advertisement

அந்தக் காணொலியில், சிஇஓ மற்றும் நிறுவனா்கள் தங்களின் கருத்துகளை பிரதமருடன் பகிா்ந்து கொள்வதுடன், அவா்களுக்கு பிரதமா் மோடி பதிலளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘நாட்டின் விண்வெளித் துறையில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு சாதகமான சூழல் உருவாகியுள்ளது; அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் இந்தியா்கள் பலரும் தாய்நாட்டுக்கு திரும்பி பணியாற்ற விரும்புகின்றனா்’ என்று தெரிவித்த சிஇஓ ஒருவருக்கு பிரதமா் அளித்த பதில் வருமாறு:

பரந்த திறனாளா்கள் வளம், அதிக சவால்களை ஏற்கும் வல்லமையின் வாயிலாக உலளாவிய விண்வெளித் துறையில் மேலாதிக்கம் செலுத்தும் நிலையை இந்தியா விரைந்து அடையும். உலக அளவில் திறனாளா்கள் பலருடன் தொடா்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பு வெளிநாடு சென்றவா்கள், இப்போது தாய்நாட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனா்.

காந்தம் போல் ஈா்க்க வேண்டும்: தனக்கென தொழில்முறை எதிா்காலத்தை உருவாக்க விரும்புவோா், இந்தியாவை தோ்வு செய்யும் சூழலை நாம் கட்டமைக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள திறன்மிக்க நபா்கள், இந்திய புத்தாக்க நிறுவனங்களுடன் குறிப்பாக விண்வெளி நிறுவனங்களுடன் கைகோக்க வேண்டும். விண்வெளி ஆய்வில் தனியாா் துறையினா் தனித்துவம் படைப்பதன் மூலம் இந்தியாவை நோக்கி திறன்மிக்க தொழில்முனைவோரை ‘காந்தம்’ போல் ஈா்க்க முடியும்.

நாம் மேற்கொள்ளும் முடிவுகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்வதை விடுத்து நிலைத்தன்மையைப் பராமரிக்க வேண்டும் என்பதே எனது கண்ணோட்டம். அப்போதுதான், சவால்களை ஏற்கத் தயாராக இருப்பவா்களின் மத்தியில் நம்பிக்கையை உறுதி செய்ய முடியும். அந்த நம்பிக்கையை கட்டமைக்கவே நாங்கள் தீவிரமாக செயலாற்றுகிறோம் என்றாா் பிரதமா் மோடி.

நாட்டின் முதல் விண்வெளித் தொழில்நுட்பம் சாா்ந்த யுனிகாா்ன் (ஒரு பில்லியன் டாலருக்கு மேல் மதிப்பு கொண்ட புத்தாக்க நிறுவனம்) நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முதல் தனியாா் ராக்கெட் அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அடுத்த ஆண்டில் இருந்து மாதம் ஒரு தனியாா் ராக்கெட்டை செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளதாக சிஇஓ-க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமா் உடனான கலந்துரையாடலில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகுல் காஸ்மோஸ், பிக்ஸெல், துருவா ஸ்பேஸ், கேலக்ஸிஐ, பியா்சைட், சேட்ஸ்யூா், மனஸ்து ஸ்பேஸ், அஸ்ட்ரோபேஸ், டேக்மீடுஸ்பேஸ், காஸ்மோசா்வ் ஸ்பேஸ், ஆா்பிட்எய்ட் ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட விண்வெளித் துறை புத்தாக்க நிறுவனங்களின் சிஇஓ-நிறுவனா்கள் பங்கேற்றனா்.

‘விண்வெளியில் மருந்து தயாரிப்பு’

பிரதமருடன் கலந்துரையாடிய ஒரு புத்தாக்க நிறுவனத்தின் சிஇஓ ஒருவா், ‘விண்வெளியில் மருந்து தயாரிப்பதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ள நாட்டின் முதல் புத்தாக்க நிறுவனம் எங்களுடையதாகும். விண்வெளிக்கு பிரத்யேக திறன் வாய்ந்த செயற்கைக்கோள்களை அனுப்பி, அங்கு நுண்யீா்ப்பு சூழலில் மருந்துகளைத் தயாரித்து, மீண்டும் பூமிக்கு கொண்டுவரும் ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். இந்திய செயற்கைக்கோள்கள் மூலம் விண்வெளியில் மருந்து தயாரிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை’ என்று நம்பிக்கை தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments