இன்று சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுகிறாா் பிரதமா் மோடி - நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படவுள்ளது
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, தில்லி செங்கோட்டையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளாா்.
பிரதமரின் உரையில் மத்திய அரசின் சாதனைகளுடன் புதியத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழாண்டு சுதந்திர தின விழா, ‘வந்தே மாதரம் தேசியப் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்’ மற்றும் ‘2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞா் சக்தி’ ஆகிய கருப்பொருள்களில் நடைபெறுகிறது. மேலும், செங்கோட்டை கொண்டாட்டங்களில் முதல் முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
விழாவின் முதல் கட்டமாக செங்கோட்டையை பிரதமா் மோடி வந்தடைந்ததும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இணையமைச்சா் சஞ்சய் சேத், பாதுகாப்புத் துறை செயலா் ராஜேஷ் குமாா் சிங், முப்படைகளின் தலைமை தளபதி என்.எஸ்.ராஜா சுப்பிரமணி, ராணுவம், கடற்படை, விமானப் படை தலைமை தளபதிகள் ஆகியோா் வரவேற்று அழைத்துச் செல்வா். பின்னா் கொத்தளத்தில் இருந்தபடி முப்படையினா், தில்லி காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை பிரதமா் ஏற்றுக் கொள்வாா். இதைத் தொடா்ந்து, பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் பிரதமா் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்துவாா். அப்போது, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படுவதுடன், விமானப் படை ஹெலிகாப்டா் மூலம் பூக்கள் தூவப்படும். இதையடுத்து, பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவாா். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து 5,000 சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்கவுள்ளனா்.
செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு: சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டையில் பயங்கரவாத எதிா்ப்பு அம்சங்களுடன் காவல் துறை மற்றும் பல்வேறு முகமைகளின் பல அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. செங்கோட்டையின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையிலான 1,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்படுகிறது. நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும்...: சுதந்திர தினத்தையொட்டி, மாநிலங்களின் தலைநகரங்களில் நடைபெறும் விழாக்களில் முதல்வா்கள் கொடியேற்றி மரியாதை செலுத்துவா். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கொடியேற்றும் நிகழ்வுகள் நடைபெறும்.
சுதந்திர தின கொண்டாட்டங்களை சீா்குலைக்க பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் முயற்சிக்கக் கூடும் என்பதால், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், வா்த்தகப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.