எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும். மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப் பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்பு கொண்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும்.
எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. செல்பேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருந்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது. உள்ளுணர்வுடன் பேசுகிறார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். இயக்குநர் கே.ராஜேஷ்வரின் மகன். இப்போது 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் இயக்குநர்.
திரைத்துறைக்குள் வருவதற்கு அப்பாவின் துணை எந்தளவுக்கு இருந்தது...
அப்பா திரைத்துறையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் நான் சிறுவன். அதனால் அவர் பட உருவாக்கத்தின் போது நான் போனது இல்லை. கோவில்பட்டி வீரலெட்சுமி படப்பிடிப்புக்கு மட்டும் போய் வந்திருக்கிறேன். தொடக்க காலம் முதலே அப்பாவின் வழிகாட்டுதல்கள் நிறைய இருந்தன.
அவர்தான் எல்லோரும் செய்வதை செய்யாதே... தனித்து இயங்கு என்றார். விஷூவல் கம்யூனிகேஷனை எல்லோரும் நாடிச் சென்ற காலத்தில், என்னை ஆங்கில இலக்கியம் படிக்க வைத்தார். அது கொடுத்த வெளிச்சம் பெரியது. அது சார்ந்து இயங்க ஆரம்பித்தேன். விளம்பர படவுலகில் இயங்கும் வாய்ப்பு கிடைத்தது. 80 முதல் 100 விளம்பர படங்களை இதுவரை எடுத்து இருக்கிறேன். அந்த ஆர்வம், அனுபவம் இப்போது திரைத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறது. அப்பாவுக்கு நன்றி.
முதல் படம் என்ன விசேஷம்...
சாமானியர்களின் அன்புதான் எப்போதுமே பிரதானம். நமக்கு எல்லாமே சென்னைதான். இந்த மண்ணோடும், மக்களோடும் சேர்ந்து வளர்ந்த பிள்ளை நான். வளர்ச்சியும், வீழ்ச்சியும் கண் கூடாக பார்த்து வந்திருக்கிறேன். ஆயிரமாயிரம் வாய்ப்புகளையும், வசதிகளையும் அள்ளி இறைத்தப்படி மின்னிக் கொண்டு இருக்கும் இந்த சென்னையில், அதன் பூர்வகுடிகளின் கொண்டாட்டங்கள் எங்கே இருக்கின்றன. எங்கெங்கு இருந்தோ வந்தவர்கள், பக்கிங்காமைக் கூவமாக்கி விட்டார்கள். அந்தக் கூவத்தில் கரையில், நெருக்கியடிக்கும் குடிசைகள் போட்டு கொசுக்களோடு வாழ்கிறார்கள் இந்த நகரத்துப் பிள்ளைகள்.
இப்படி ஏக வருத்தங்கள் இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை எப்போதுமே அழகு. அந்த அழகின் உற்சாக தருணங்கள்தான் கதை. இங்கே வளருகிற சில இளைஞர்கள், ஒரு வங்கியை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். பணத் தேவைக்காக ஓடும் ரேஸில் பல சம்பவங்கள், துயரங்கள் என ஒளிந்திருக்கும். அப்படியான ஆள்கள்தான் நம்ம சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ். காதல், பாட்டு, டான்ஸ், ரொமான்ஸ் என ஒரு வாழ்க்கை இதிலும் உண்டு. அந்த கலகலப்பும், உற்சாகமும்தான் படம்.
வைபவ்தான் இந்தப் படத்துக்கான சாய்ஸில் இருந்தாரா....
ஒரு திரைக்கதையின் விரிவாக்கம் ஆகும் போது, வேறு மாதிரியாக யோசிக்க வேண்டிய சூழல் இருந்தது. அதுதான் அந்த இடத்துக்கு வைபவை கொண்டு வந்தோம். கதையின் கதாபாத்திரம் போலவே, கலகலப்பான ஆள். அதோடு அவருக்கென ஒரு அடையாளம் இருந்ததில்லை. அவரை கொண்டு எது சொன்னாலும் அது எடுப்பட்டு நிற்கும். அதற்காகவே எல்லோருக்கும் பரிச்சயமான வைபவை கொண்டு வந்தேன்.
வசதி, வாயப்புகளோடு வளர்ந்து வந்த பிள்ளை. ஆனால், எந்த பந்தாவும் இல்லாத மனிதர். கதைக்கான சூழல்களை புரிந்துக் கொண்டு வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தது எங்களுக்கு வசதி. அழகான கதையை, அதன் நோக்கிலே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார். சினிமாவில் சில வருடங்கள் அனுபவமுள்ள நடிகர், இருந்தாலும் இதற்காக ஒரு புதுமுகம் மாதிரி ஒத்துழைப்பு கொடுத்தார். படத்துக்கு உரிய வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், அதன் ஒரு பகுதி வைபவ்க்கும் போய் சேரும். வைபவை எல்லோரும் அறிந்துணரும் இடம் இந்த படத்தில் அழகாக கை சேர்ந்திருக்கிறது.
அதுல்யா ரவி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், சாம்ஸ், சுனில்... இப்படி ஏக நடிகர்கள்...
நான் கதைச் சொல்லி நடிக்க கேட்டதும், அதுல்யாவுக்கு ஒரு தெளிவு இருந்தது. ஆனால் நடிக்க தயக்கம் காட்டினார். உங்களைத்தான் நிறையப் பேர் சிபாரிசு செய்தார்கள் என்றதும், அந்த நம்பிக்கைக்காக நடிக்க தயாராகி வந்தார். நல்லதொரு இடம் அதுல்யாவுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டு.
இதே அர்பணிப்பும், ஆர்வமும் இருந்தால், அந்த பொண்ணுக்கு ஒரு நிலையான இடம் இருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒத்திகை பார்த்து நடித்தார். அந்த அருமையான ஒத்துழைப்பும் இந்த படம் நினைத்த மாதிரி வளர்ந்து வர, முக்கிய காரணம். வைபவ்வுடன் அவர் அண்ணன் சுனில் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது. அதனால் இந்தப் படம் இருவருக்குமே ஸ்பெஷல். ஆனந்த்ராஜ் சார் நான் பயந்து பார்த்த வில்லன். ஆனால், இப்படி எப்படி அவருக்குள் காமெடி இருக்கிறது என்பது ஆச்சரியம். எல்லோரும் படத்தை தன் தோள்களில் சுமந்திருக்கிறார்கள்.
இமான் இசை தனித்துவமாக இருக்கும்....
ஆமாம், அதற்கு நிறைய படங்கள் உதாரணமாக நிற்கிறது. அப்படி ஒரு பின்னணிதான் இது. அதுவும் பாடல், பின்னணி இசை என முக்கியத்துவம் இருக்கிற கதை. அதனால் அது பற்றி சொல்லவே வேண்டாம். நான்கு பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். குதூகலமும் சந்தோஷமும், கொண்டாட்டமுமாக இருக்கும். அதே மாதிரி பாடல் வரிகளும் கவனித்தக்க இடத்தில் இருக்கும். இன்னொரு விஷயம். நானும் இமான் சாரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். நான் 7-ஆம் வகுப்பு படித்தபோது, அவர் ப்ளஸ் டூ படித்தார். அப்போதிலிருந்தே எங்களுக்கு பழக்கம். அந்த பிணைப்பு இதில் கண்டிப்பாக தெரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.