தென்னக ரயில்வேயில் முப்பத்து ஏழு ஆண்டுகள் பணியாற்றி 2001-இல் உயர்நிலைக் கண்காணிப்பாளராக விருப்ப ஓய்வு பெற்று, சென்னை விருகம்பாக்கம் குமரன் நகரில் வசித்து வருபவர் நா.சுப்ரமண்யன். எண்பத்தொரு வயதான இவர் தற்போதும் எழுத்துப் பணியில் தீவிர ஆர்வம் கொண்டு இயங்கிவருபவர்.
பணி ஓய்வு பெற்றதும், இருபத்து நான்கு ஆண்டுகளாகப் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான கல்வி உதவிகளை வழங்கி வரும் அவர் கூறியது:
'எனக்கு வரும் ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கிடு செய்து, ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகச் செலவிடுகிறேன். இதன்படி, சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பல்வேறு அரசு தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 'திருக்குறள்' , 'அகராதி', 'அட்லாஸ்', 'நீதிநெறி நூல்' உள்ளிட்ட நூல்களை வழங்கிவருகிறேன்.
2019- ஆம் ஆண்டில், குருவிமலை, வணக்கம்பாடி, இராமாபாளையம், பெலாசூர் ஆகிய நான்கு கிராமப் பள்ளிகளிலும், கீழ்பெண்ணாத்தூர், போளூர், விருகம்பாக்கம் சின்மயா வித்யாலயா ஆகிய மூன்று பள்ளிகளிலும் புரவலராக இணைந்துள்ளேன்.
'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட வணக்கம்பாடி, இராமாபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெலாசூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, குருவிமலை ஊராட்சி நடுநிலைப் பள்ளி, போளூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் ஆதிதிராவிடர் நலப் பள்ளியிலும், கோயம்பேடு, நெசப்பாக்கம், வில்லிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், கல்வி விளக்கப் படங்கள், முதன்மை வகுப்பு புத்தகங்களை வழங்கியுள்ளேன்.
'நாள்தோறும் படியுங்கள். வீட்டில் பெற்றோருக்கும், பள்ளியில் ஆசிரியர்களுக்கும் கீழ்படியுங்கள்' என்பதே மாணவர்களுக்கு நான் கூறும் அறிவுரையாகும்.
நாட்டின் எதிர்காலம் கல்வி மேம்பாட்டைச் சார்ந்தது. எனவே, அனைத்துத் தரப்பு மக்களும் தங்களால் இயன்றவரையில் கல்விக்காக உதவ வேண்டும்.
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டையும் தனியாக அச்சடித்து, அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிட அரசு முன்வர வேண்டும்.
சக ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியப் பிரச்னைகளைத் தீர்க்க உதவி செய்யும் வகையில் நான் செயல்பட்டதற்காக 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா' வங்கியால் கெளரவிக்கப்பட்டேன்'' என்கிறார் நா.சுப்ரமண்யன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.