ஞாயிறு கொண்டாட்டம்

தாய்ப்பால் தானம் அவசியம்...

பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது மகப்பேறு. அதைக் காட்டிலும் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால் மாண்புமிக்கது.

தினமணி செய்திச் சேவை

தமிழானவன்

பெண்மைக்குப் பெருமை சேர்ப்பது மகப்பேறு. அதைக் காட்டிலும் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால் மாண்புமிக்கது. எத்தனையோ வங்கிகள் இருந்தாலும், மனித உணர்வைக் காக்கும் வங்கியாகத் தாய்ப்பால் வங்கி திகழ்கிறது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவிக்கும் குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்துவிட்டால், பச்சிளங்குழந்தை நலத் துறையானது சேயைப் பாதுகாத்து வங்கியில் இருக்கும் சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பாலைக் கொடுத்து ஆரோக்கியமிக்கக் குழந்தையாக மாற்றி அனுப்பி வைக்கிறது.

பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்தத் தாய்ப்பால் வங்கி குறித்து பச்சிளங்குழந்தை நலத்துறை பேராசிரியர் மருத்துவர் பி. ஆதிசிவத்துடன் ஒரு சந்திப்பு:

தாய்ப்பால் வங்கி அவசியமா ?

தாய்ப்பால் வங்கி அவசியம்தான். தாய்ப்பாலுக்கு மாற்றாக மாட்டுப் பால், புட்டிப் பால், பௌடர் பால் என்று குழந்தைகளுக்குக் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளுக்குக் காதில் சீழ், நெஞ்சில் நிமோனியா பாதிப்பு, வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. தாய்ப்பால் வங்கி குழந்தைகளுக்குத் தற்காலிக நிவாரணமாக இருக்கிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைவதில்லை. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்குத் தேவையற்ற கொழுப்புகள் குறையும். அழகு கூடும். மார்ப்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்மணிகளுக்கு 'ஆக்சிடாசின்' என்ற ஹார்மேன் சுரக்கிறது. இது மனநலம், உடல் ஆரோக்கியத்தைச் சிறப்பாக வைத்து, பெண்மையை உயர்த்துகிறது.

சிசுக்களுக்கு எந்த வகையில் தாய்ப்பால் உதவுகிறது ?

புரதம், கொழுப்பு, கார்ப்போஹைட்ரேட், உயிர்ச்சத்து உள்ளிட்ட நோய் எதிர்ப்புக் காரணிகள் சரியான விகிதத்தில் உள்ள தாய்ப்பால் பரிபூரண உணவு. உலகத்தில் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒரு குழந்தைப் பிறந்த ஆறு மாதங்கள் வரை கிடைத்தால் உயிர் தப்பி பிழைக்க முக்கியமான அமுதமாகத் தாய்ப்பால் இருக்கிறது.

உலகில் எந்த பாலூட்டி இனமும் தாய்ப்பால் கொடுக்காமல் இருக்காது. இயற்கையாகவே பாலூட்டிகள் தாய்ப்பால் கொடுத்தே குட்டியை வளர்க்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும்தான் தாய்ப்பால் விழிப்புணர்வு போன்றவற்றை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்.

தாய்ப்பாலுக்கும் அறிவுக்கும் தொடர்பு இருக்கிறதா ?

இயற்கையாகத் தாய்ப்பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைதான் அறிவு வளர்ச்சியில் சிறப்பாக இருக்கும். அந்தப் பெற்றோரை அந்தக் குழந்தை எதிர்காலத்தில் அன்போடு பார்த்துகொள்ளும். அதனால் தாய்ப்பால் என்பது வருங்காலத்துக்கான மூளை வளர்ச்சிக்கான மூலதனம். நிச்சயமாக இருக்கிறது. அறிவியல்பூர்வமாகவும் ஆய்வு அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எத்தனை தாய்ப்பால் வங்கிகள் இருக்கின்றன ?

விரிவான தாய்ப்பால் மேலாண்மை மையத் திட்டத்தின்படி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் இருக்க வேண்டும். நாட்டில் சுமார் 100 தாய்ப்பால் வங்கிகள் இருக்கின்றன. ஹைதராபாத், ஜெய்ப்பூரில் உள்ள தாய்ப்பால் வங்கியில் மட்டும் வெளியில் சென்று முகாம் நடத்தி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது. தேவைப்படுவோருக்கு வெளியிலும் கொடுக்கின்றனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் சேரும் சில குழந்தைகளுக்கு மட்டும்தான் தேவையைக் கருத்தில் கொண்டு தாய்ப்பால் வங்கியிலிருந்து தாய்ப்பாலைப் பயன்படுத்துகிறோம். தாய்ப்பால் கொடுப்பதற்கும் பெறுவதற்கும் ஜிப்மரில் பணப் பரிவர்த்தனை கிடையாது.

பிரேசில் நாட்டில்தான் பால் பௌடருக்கு வேலையில்லை. அங்குள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைக்குப் பாலூட்டியவுடன் மீதமுள்ள தாய்ப்பாலைப் பீய்ச்சி பாட்டிலில் அடைத்து, அந்தப் பக்கம் வரும் அஞ்சல் ஊழியர் உள்ளிட்டவர்களிடம் கொடுத்து தாய்ப்பால் வங்கியில் சேர்க்குமாறு கூறிவிடுகிறார்கள்.

அப்படியான ஒரு சமுதாய இணைப்பு அங்கு நிலவுகிறது. தாய்ப்பால் தானம் கொடுப்பதால் தங்கள் குழந்தைக்குக் குறையாது. கொடுக்கக் கொடுக்கச் சுரக்கும். குழந்தைக்கும் போதுமான தாய்ப்பால் கிடைக்கும்.

ஜிப்மரில் உள்ள 'கங்காரு முறை குழந்தை பராமரிப்பு மையம்' என்றால் என்ன ?

பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோவுக்குக் குறைவாக இருந்தாலோ அல்லது குறைமாத குழந்தையாக இருந்தாலோ அந்தக் குழந்தைக்குக் கங்காரு முறையில் பராமரிப்பு செய்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதாவது, கங்காரு முறையில் தாயும் சேயும் தோளோடு தோள் ஒட்டி இருக்க வேண்டும்.

கங்காரு தன் குட்டியை அப்படிதான் பராமரிக்கும். இந்த முறையில் குழந்தையின் தட்ப வெப்பம் சீராக இருக்கும். குழந்தையின் சுவாசமும், இதயத் துடிப்பும் மிகவும் சீராக இருக்கும். குழந்தைக்குப் போதிய அளவு தாய்ப்பால் கிடைப்பதால் குழந்தைக்குச் சீக்கிரம் எடை கூடும். இதனால் தாய்க்கும் சேய்க்கும் இடையே பந்தம் அதிகரிக்கும்.

இளம்பெண்கள் திருமணத்துக்குப் பிறகு, குழந்தைகள் பிறந்தால் என்ன செய்ய வேண்டும் ?

வளர் இளம்பருவப் பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும். இதற்காக கல்லூரி அளவில் விழிப்புணர்வு அளித்து வருகிறோம். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. நல்ல விஷயத்தைதான் செய்கிறோம் என்ற மனநிலைக்கு மாற வேண்டும்.

படங்கள்: கி. ரமேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT