கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட போளுவாம்பட்டி அருகேயுள்ள தாணிக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் சுய உதவிக் குழுவைத் தொடங்கி, கடைகளைத் தொடங்கி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக உயர்த்தியுள்ளனர்.
கோவை ஈஷா யோகா மையத்துக்கு அண்மையில் வருகை தந்த மத்திய பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ஜுவல் ஓரம் இவர்களை அழைத்துப் பாராட்டி, 'நாட்டுக்கு வரி செலுத்தும் அளவுக்கு உயர்ந்துள்ளது பெருமைப்படக் கூடியது. இதுபோன்ற முன்னெடுப்புகள் 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடைய வழிவகுக்கும்' என்றார்.
இதுகுறித்து ஈஷா பழங்குடியின நலக் குழு ஒருங்கிணைப்பாளர் சுவாமி சித்தாகாஷாவிடம் பேசியபோது:
'பழங்குடியின மக்கள் ஈஷா மையத்தில் தினக் கூலி அடிப்படையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு நல்வழிகாட்டும் வகையில் சுயமாகத் தொழில் தொடங்க உதவ வேண்டும் என சத்குரு தெரிவித்தார். இதற்காக தனி அமைப்பை உருவாக்கி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தாணிக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த 11 பெண்கள் சுய உதவிக் குழுவைத் தொடங்கினர். இவர்களுக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் வணிக ஆலோசனை வழங்கப்பட்டது.
2017-18-ஆம் ஆண்டில் இவர்கள் தலா ரூ. 200 என ரூ. 2,200 கூட்டு முதலீட்டில் தேநீர்க் கடை வைத்தனர். இதற்கான பொருள்களை முதலீட்டில் வாங்கி, மண்ணெண்ணெய், அடுப்பு உள்பட வீட்டில் இருந்த பொருள்களைக் கொண்டு மீதமுள்ளவற்றை நிர்வகித்தனர். பின்னர், வங்கிக் கடனுதவி பெற்று ஈஷா மையத்துக்கு வரும் பக்தர்களை ஏற்றி இறக்கும் வகையில் மின்கல (பேட்டரி) வாகனம் வாங்கியதோடு, பேக்கரியும் (அடுமனை) ஆரம்பித்தனர்.
ஈஷா மையம் முன் பக்தர்களை மின்கல வாகனங்களில் ஏற்றி சொர்க்கவாசலில் இறக்க பயணிக்கு ரூ. 10 வீதம் வசூலித்தனர். ஈஷாவின் முயற்சியால் பெண்கள் பேக்கரியில் விற்பனை செய்யப்படும் பொருள்களை தாங்களாகவே தயாரிக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. பேக்கரியிலும் பெண்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வங்கிக் கடன்களை முழுமையாகச் செலுத்தி, இவர்கள் மின்கல வாகனத்துக்கு உரிமையாளரானார்கள். தற்போது இவை வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
பழங்குடியின பெண்கள் ஒருங்கிணைந்து தாணிக்கண்டியின் அருகேயுள்ள கிராமங்களிலும் கிட்டத்தட்ட 8 சுய உதவிக் குழுக்களை உருவாக்கியுள்ளனர். 2018-இல் ரூ. 25 லட்சமாக இருந்த இவர்களின் ஆண்டு வருமானம் 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.49 லட்சமாக
அதிகரித்தது. இதனால், இவர்கள் வரி செலுத்த தகுதியானவர்களாக உயர்ந்தார்கள். நிகழ் நிதியாண்டில் இவர்களது வருவாய் மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரிக்கு விண்ணப்பிப்பார்கள்' என்கிறார் சுவாமி சித்தாகாஷா.
இதுகுறித்து அடுமனை (பேக்கரி) நடத்தும் சுய உதவிக் குழு உறுப்பினர் பி.காயத்ரி கூறியது:
'கடை நடத்தி வருவாய் ஈட்டுவது எங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்களது கிராமத்தைச் சேர்ந்தவர்களில் சென்னைக்கு விமானத்தில் சென்ற முதல் நபர்கள் நாங்கள்தான்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சில கிராமவாசிகளையும் நாங்கள் பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றோம். நாங்கள் வரி செலுத்தும் அளவுக்கு உயர்ந்ததை அறிந்த மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் எங்களை அழைத்துப் பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது' என்கிறார் காயத்ரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.