திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற பட்டம் வெள்ளித்திரையில் தோன்றும்போது திரை அரங்கமே அதிரும் என்பதை சென்னையில் பலமுறை பார்த்திருக்கிறேன்.
தலைமுறைகள் மாறினாலும், இந்த மகிழ்ச்சி குறையவில்லை. இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள உச்ச நாயகன் ரஜினிகாந்த், ஒரு நடிகராக ஐந்து தசாப்தங்களை நிறைவு செய்துள்ளார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. தனது திரைப்பட வாழ்க்கையில் பொன்விழாவைக் கொண்டாடும் ரஜினிகாந்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.
"மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் மூலம் மலையாள திரையுலகை திரும்பப் பார்க்க வைத்தவர் இயக்குநர் சிதம்பரம். இவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு "பாலன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில் படத்தில் நடிப்பவர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் கதையை மலையாள சினிமாவில் பிரபல எழுத்தாளராக விளங்கும் ஜித்து மாதவன் எழுதியுள்ளார். சிதம்பரம் - ஜித்து மாதவன் இணைந்துள்ளதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேர்காணல் ஒன்றில் மனநல ஆரோக்கியம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கும் அனன்யா பாண்டே, 'மனநலம் நன்றாக இருந்தால்தான் நம் தோற்றமும், முகமும் அழகாக, நன்றாக இருக்கும். அதனால், மனநலனை மிக அக்கறையுடன் பார்த்துக் கொள்வதில்தான் என் கவனம் இருக்கும்.
இதற்காக முதலில் நான் செய்வது சோஷியல் மீடியாவிலிருந்து விலகியிருப்பது. அதுவே பாதி மனநலனைக் கொடுக்கும். தினமும் வாக்கிங், எழுதுவது, புதுப்புது ஆடைகள் அணிவது, பேஷனில் கவனம் செலுத்தி என்னை அழகாக வைத்துக் கொள்வது என எனக்குப் பிடித்த வேலைகளைச் செய்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். மனநலம் நன்றாக இருந்தால்தான் என் வேலையை ஒழுங்காகச் செய்யமுடியும்' என்று பேசியிருக்கிறார்.
நிவின் பாலி, நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. "டியர் ஸ்டூடண்ட்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.
மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நிவின் பாலி, நயன்தாரா ஜோடி இப்படத்துக்காக இணைகின்றனர்.
அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், "நித்தம் ஒரு வானம்'. கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை ரா.கார்த்திக் இயக்கி இருந்தார். இந்த நிலையில், நாகார்ஜுனாவின் 100-ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பு ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது.
இதனை நாகார்ஜுனா பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார். "இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் என்னுடைய 100-ஆவது படம் உருவாகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். 'கூலி' தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது.' என்று தெரிவித்துள்ளார் நாகார்ஜுனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.