'எல்லா விநாடிகளையும் மலர்த்தும், மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப்பக்குவம் கொண்டவர்கள் எத்தனை மகத்தானவர்கள்.
எளிமையாக இருப்பவர்கள் வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்புக் கொண்டவர்களைப் பார்க்கும்போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா? என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்றுவிடும். எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன.
செல்பேசிகள், இணையம் என வந்து விட்டபோதிலும், சொல்லப்படாத சொற்களும், பகிரப்படாத தனிமையும் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. ஆனால், அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே? அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது' என்று கூறி தனது பேச்சில் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சுரேந்தர்.
பல ஆண்டுகள் திரைப்பயணத்தில் இருந்த அவர், இப்போது 'மாய பிம்பம்' படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு வருகிறார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
'மாய பிம்பம்' சொல்ல வரும் செய்தி என்ன?
யாரைப் பார்த்தாலும் இவர் நல்லவர், இவர் கெட்டவர் என்ற பிம்பத்தை நமக்குள்ளே உருவாக்கிக் கொள்வோம். நெருங்கிப் பழகினால் மட்டுமே உண்மையான பிம்பம் என்ன என்பது தெரியவரும். அப்போதுதான் நாம நினைத்தது தப்புடா என்று புரியும். நமது அன்றாட வாழ்க்கையில் அனைவருக்குமே இந்த அனுபவம் இருக்கும். கதையும் அதைச் சார்ந்திருப்பதால் 'மாய பிம்பம்' என்ற தலைப்பு வைத்தேன்.
சென்னைக்கு வெளியே கிராமத்து வாழ்க்கையில் இருக்கும்போது, நாம் ஆதர்சனமாக சிலரை உள்ளுக்குள் வைத்திருப்போம். சென்னைக்கு வந்து அந்த ஆளுமைகளுடன் பழகும்போது, வேறு மாதிரி தோன்றும். அப்படி நிறைய ஆளுமைகளை அடித்து நொறுக்கிய இடம் இந்த சென்னை. அதுபோல் இந்தக் கதையின் வடிவமைப்பும்.
அதே நேரத்தில் உள்ளுக்குள் ஒரு அழுத்தமான காதல். அது உங்களுக்கு வலி கொடுக்கும். சிலருக்கு உயிரைப் பிய்த்து நொறுங்கிப் போக வைக்கும். பிரபலமான இயக்குநர்களிடமோ, படங்களிலோ நான் உதவி இயக்குநராகப் பணிபுரியவில்லை. ஆகையால், பெரிய நடிகர்களிடம் சென்றால், நமக்கான அடையாளம் என்ன என்னும் கேள்வி முன்னால் வந்து நின்றது.
பெரிய இயக்குநர்கள், தெரிந்த படங்களில் இருந்திருந்தால் மட்டுமே பெரிய நடிகர்களிடம் கதை சொல்ல கதவே திறக்கும். அதனாலேயே, புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கி, நமக்கும் இயக்கம் தெரியும் என்று காட்ட விரும்பியே இந்தப் படத்தை எடுத்தேன். புதுமுகங்களை வைத்துப் படம் எடுத்தால் நம் மக்கள் கதையோடு ஒன்றிப் படம் பார்ப்பார்கள் என்பதும் ஒரு காரணம்.
கதையின் உள்ளடக்கம் எப்படி இருக்கும்?
வசதி வாய்ப்பு, பெரும் தேடல்கள் என எதுவும் இல்லாத மனசுக்கார்கள்தான் இங்கே பிரதானம். எந்தப் பிரமிப்பும் ஏக்கமும் அவர்களுக்கு இல்லை. யார் குறித்த அச்சமும் இல்லை. வாழ்க்கைப் பற்றிய குழப்பமோ, சிக்கலோ இல்லை. மிக எளிமையாக இந்த வாழ்க்கையை அணுகுகிற ஓர் இளைஞன்.
அவன் மீது கொண்ட அன்பு மட்டுமே இந்த வாழ்வின் நிரந்தரம் என்ற மனப்பக்குவம் கொண்ட மனுஷி ஒருத்தி. இந்த இரண்டு பேருக்கும் அவர்களின் காதல்தான் உலகம்.
வாழ்க்கையை அதன் உண்மையோடும் அன்போடும் கொண்டாடுபவர்களுக்கு ஒரு பிரச்னை. அதன் தீர்வும், அதற்கான நிகழ்வுகளும்தான் கதை. இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல், பண வேட்கை எதுவும் இல்லாத ஓர் எளிய வாழ்க்கைதான் படம்.
அழகு, நிறம், பணம் என தினம் தினம் எழுந்து வருகிற அத்தனை அபத்தங்களையும் அடிச்சு நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன் வைக்கிற காதல். எதையும் அடைந்து விடவேண்டும் என்கிற வெறி இல்லை. யாரையும் புறந்தள்ளி விடுகிற, கவிழ்த்து விடுகிற எத்தனிப்பு இல்லை. இப்படி ஒரு மனம் வாய்த்து விட்டால் அதைவிடக் கொடுப்பினை ஏது?
இந்த அளவுக்கு மென்மையான ட்ரீட்மென்ட் தியேட்டருக்கு ரசிகர்களை ஈர்க்குமா?
நிச்சயமாக... இந்தக் கதையில் புதுமையும், ரசனையும் கண்டிப்பாக உண்டு. பெண்தான் ஆணுக்கு பெருங்கொடை. அவர்களின் ஒரு ஸ்பரிஸம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒரு வார்த்தை, உரையாடல் எவ்வளவு நம்பிக்கைகளை அளித்து விடுகின்றன. நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்
படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் ஒருவனின் வாழ்க்கைதான் இந்தப் படம். இந்த வரியை இப்போ வாசிக்கிற உங்களைவிட, என்னைவிட, நம் எல்லோருக்கும் இப்படி ஒரு தருணம் உண்டு.
அப்படி முழுக்க முழுக்க அன்பு, நேசம், பாசம் கொண்டு கட்டப்பட்ட வாழ்க்கையை அவ்வளவு அழகா, அற்புதமாக வாழ முடியாத நிலை வருகிறபோது, சாமானியனாக ஒருவன் எடுக்கும் முடிவுதான் கதை. உறவையும், பிரிவையும் காலம்தான் தீர்மானிக்கிறது.
அது செய்யும் மாயங்கள் எதையும் கலைத்துப் போட்டு விடும். ஆனால், இந்த வாழ்க்கைக்கு நடுவே எப்போது அன்பும், பரிவும் நிரந்தரம். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், படம் பார்க்கிற ஒவ்வொருத்தரும் தன் மனசுக்கு நெருக்கமான பெண்களை நினைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும் போய் முடிகிற இடம் அருமையாக கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
முழுக்க முழுக்க புதுமுகங்கள்.... படப்பிடிப்பு சவால்கள் ஏராளம் இருந்திருக்குமே?
பிரபலமான இயக்குநர்களிடமோ, படங்களிலோ நான் உதவி இயக்குநராகப் பணிபுரியவில்லை. ஆகையால், பெரிய நடிகர்களிடம் சென்றால் நமக்கான அடையாளம் என்ன என்னும் கேள்வி முன்னால் வந்து நின்றது. பெரிய இயக்குநர்கள், தெரிந்த படங்களில் இருந்திருந்தால் மட்டுமே பெரிய நடிகர்களிடம் கதை சொல்ல கதவே திறக்கும்.
அதனாலேயே, புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கி, நமக்கும் இயக்கம் தெரியும் என்று காட்ட விரும்பியே இந்தப் படத்தை எடுத்தேன். புதுமுகங்களை வைத்துப் படம் எடுத்தால், நம் மக்கள் கதையோடு ஒன்றிப் படம் பார்ப்பார்கள் என்பதும் ஒரு காரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.