வல்லம்: குடைவரைக் கோயில்கள் 
ஞாயிறு கொண்டாட்டம்

வல்லம்: குடைவரைக் கோயில்கள்...

செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, வல்லம் என்ற ஊரில், சிறிய குன்றில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூன்று குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன.

கி.ஸ்ரீதரன்

செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, வல்லம் என்ற ஊரில், சிறிய குன்றில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூன்று குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவை பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தவை.

வசந்தீசுவரம்

இங்கு அளவில் சற்று பெரியதாக உள்ள குடைவரைக் கோயில் "வசந்தீசுவரம்' என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் தூண்கள் மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயர்களான "பகாப்பிடுகு', "லளிதாங்குரன்', "சத்ருமல்லன்', "குணபரன்' போன்ற பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

பல்லவர் காலத்தில் சிற்றரசனாக விளங்கிய வயந்தப்பிரியன் மகன் கந்தசேனனால் கோயில் குடைந்து வடிவமைக்கப்பட்டது.

பல்லவ மன்னர்களின் முதல் தமிழ்க் கல்வெட்டு என்ற பெருமையை உடையது இந்தக் குடைவரையாகும்.

பகாப்பிடுகு லளிதாங்குரான்

சத்துரு மல்லன் குணபரன்

மயேந்திரப் போத்தரெசரு அடியான்

வயந்தப் பிரிஅரசர் மகன் கந்தசேனன்

செய்வித்த தேவகுலம்

இங்குள்ள கோயில்கள் "தேவகுலம்' என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. மற்ற இரு குடைவரைக் கோயில்களில் காணும் கல்வெட்டுகளால் அக்கோயில்கள் "லக்கசோமாசியார் மகள் தேவகுலம்' என்றும் "பல்லவ பேரரசர் மகள் கொம்மை தேவகுலம்' என்று குறிப்பிட்டுள்ளதை கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

பல்லவர் காலத்தில் இரண்டு பெண்களால் இந்தக் கோயில்கள் அழகிய சிற்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன.

கோப்பெருஞ்சிங்கன்

வசந்தீசுவரம் குடைவரைக் கோயில் தூணில் காணப்படும் சகலபுவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கனின் 14-ஆம் ஆட்சி கல்வெட்டில் இந்தக் கோயிலில் விளக்கு எரிப்பதற்காகத் தானம் அளித்து கோயிலைப் போற்றிய செய்தி காணப்படுகிறது. திருவயிந்தீசுரமுடைய நாயனார் என இறைவன் அழைக்கப்படுகிறார்.

பாறை முகப்பில் காணப்படும் விநாயகர் பெருமானின் அழகிய வடிவத்தைக் கண்டு ஆனந்தம் அடையலாம். அவரது வடிவமே அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. விநாயகர் இடக்காலை மடக்கி, வலக்காலை குத்திட்டு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

நான்கு கரங்கள், விரிந்த அழகான காதுகள், திண்டு போன்ற அமைப்பின் மீது வைத்து, சாய்ந்த நிலையில் அழகிய வடிவுடன் ஓய்யாரமாக அமர்ந்து பக்தர்களின் குறைகளைப் போக்குகிறார்.

இந்தக் குடைவரையின் வடக்குப் பக்கத்தில் ஜேஷ்டாதேவியின் சிற்பமும் காணப்படுகிறது. இந்தக் குடைவரைக் கோயிலில் காணப்படும் அனைத்து துவாரபாலகர் சிற்பங்களும் கலையழகுடன் காட்சி அளிக்கின்றன.

வல்லம் குடைவரைக் கோயில்கள் பல்லவர் காலப் படைப்புக்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குகிறது. மேலும், இங்குள்ள இரு குடைவரைக் கோயில்களும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இரு பெண்களால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

கி.ஸ்ரீதரன், தொல்லியல் துறை (ஓய்வு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 3-இல் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க பயிலரங்கம்

ஆதிதிராவிட குடும்பங்களுக்கு 3.6 ஏக்கா் நிலம் தானம்: உரிமையாளா் வாரிசுகளுக்கு ஆட்சியா் பாராட்டு

மேல்விஷாரம் நகா்மன்றக் கூட்டம்

ஓணம் பண்டிகை: மங்களூருக்கு சிறப்பு ரயில்

தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

SCROLL FOR NEXT