'பூமியின் மிக அழகான கிராமங்களைப் பட்டியலிட்டால், கொச்சிக்கு அருகே இருக்கும் கடமக்குடி கட்டாயம் இடம் பிடிக்கும்' என்கிறார் மஹிந்திரா மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. 'வரும் டிசம்பர் மாதம் கொச்சி செல்ல இருக்கிறேன். அப்போது கண்டிப்பாக கடமக்குடிக்குச் சென்று வருவேன். எனது விருப்பப் பட்டியலில் கடமக்குடி இடம்பெற்றுவிட்டது'' என்று முன்கூட்டியே சொல்லியும் விட்டார்.
கடமக்குடி, பரபரப்பான கொச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள 14 தீவுகளின் தொகுப்பாகும். எந்தத் திசை நோக்கினாலும் தண்ணீர். நடுநடுவே வரப்பு மாதிரியான ஒற்றையடிப் பாதைகள் உண்டு. பஸ்கள், டாக்சிகள், ஆட்டோ வசதிகள் உண்டு.
ஆனால், தரமான உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் கடமக்குடியில் இல்லை. கொச்சியில் தங்கினால் கடமக்குடிக்கு வந்து போவது மிக எளிது. கடமக்குடி நீர்நிலையில் படகு சவாரி, நெல் வயல்கள், இறால் வளர்ப்பு பண்ணைகள், தென்னை நார் தயாரித்தல், மீன் பிடித்தல், சூரிய அஸ்தமனம் உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை. 'கயாக்கிங்' எனப்படும் புது ரக படகு சவாரி வசதியும் உண்டு.
'காயல்' எனப்படும் உப்பங்கழிகளின் ஓரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்கள், மாங்குரோவ் மரங்கள், சீன வலைகள், மலைக்கவைக்கும் அற்புதமான காட்சியை சிருஷ்டிக்கின்றன. அமைதியான சூழ்நிலை, சிலு சிலு காற்றுக்கும் மனதை மயக்க வைக்கும். இங்குள்ள வயல்களில் ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்து, புரதம் நிறைந்த தனித்துவமான கடல் நீர் கலந்த வயலில் பயிராகும் உப்பு, கேரள அரிசி வகையான 'பொக்காளி' விவசாயம் இங்கே நடக்கிறது.
நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், பறவைக் கண்காணிப்பு, புகைப்படம் எடுத்தல் போன்ற பொழுதுபோக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கேரள பருவமழை மாதங்களான ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கடமக்குடிக்குச் சென்றால் மழையில் நனையும் கடமக்குடியின் இன்னொரு தோற்றத்தை ரசிக்கலாம்.
சூரியச் சக்தியில் இயங்கும் சுற்றுலா கப்பலான 'சூரியவம்ஷி' மூலம் கடமக்குடி கொச்சியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் கூட்டம் நடத்தும் அரங்கு, கலைநிகழ்ச்சிகள் நடத்தவும், சிற்றுண்டி மதிய உணவு வசதிகள் உண்டு.
கடமக்குடி கிராம மக்களும் சூரியச் சக்தியில் இயங்கும் இன்னொரு படகு மூலம் கேரள அரசின் மருத்துவச் சேவையை இலவசமாகப் பெறுகிறார்கள். மிதக்கும் மருத்துவமனை, பொது மக்கள் வாழும் தீவுகளைத் தொட்டுச் செல்கிறது. கொச்சி நீர் மெட்ரோவின் படகு விரைவில் கடமக்குடியில் முனையத்தை அமைக்க உள்ளது.
'கடவுளின் சொந்த நாடான' கேரளத்தில் பரபரப்பு, அவசரம் இல்லாத அமைதியான கிராமிய வாழ்க்கைக்கு ஓர் அடையாளம்தான் கடமக்குடி. கடமக்குடியை ஹெலிகாப்டரில் அல்லது பாராசூட்டில் பறந்து மேலேயிருந்து கீழே பார்த்தால், உண்மையான இயற்கை அழகை ரசிக்க முடியும். ஆனால் அந்த வசதி இப்போதைக்கு கடமக்குடியில் கிடையாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.