ஒரேயொரு மாபெரும் மாமரத்தில், 350 வெவ்வேறு மாங்காய் வகைகள் ஒவ்வொரு மாம்பழ சீசனிலும் காய்த்து குலுங்குகின்றன. ஒவ்வொரு "மா' வும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு வடிவம், ஒவ்வொரு நிறம், ஒவ்வொரு மணம்! இந்தத் தாவரவியல் புரட்சியை ஏழாம் வகுப்பு மட்டுமே படித்த கலிமுல்லா என்பவர்தான் பல ஆண்டுகளுக்கு முன்பே சாதித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் மாலிஹாபாத்தில் மாம்பழத் தோட்டத்தில் இந்தச் சாதனையை நிகழ்த்திய எண்பத்து ஐந்து வயதான கலிமுல்லா கூறியது:
'நான் ஏழாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாததே எனது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம். படிப்பை நிறுத்திவிட்டு, வேலை செய்ய ஆரம்பித்தேன். பள்ளிக்கே செல்லாத எனது தாத்தாவே எனக்கு மாம்பழ விளைச்சலில் வழிகாட்டினார். முழு கவனத்தையும் செலுத்தினேன்.
வேறு யாரும் கற்பனை செய்யத் துணியாத ஒரு யோசனை என் மனதில் தோன்றியது. ஒரேயொரு மாமரத்தில் நூற்றுக்
கணக்கான வெவ்வேறு "மா' காய்க்கும்படி செய்தால் என்பதுதான். ஒட்டுமுறையில் இரண்டு வெவ்வேறு மாமரக் கிளைகளை ஒட்டச் செய்து புதிய ரக வீரிய மாம்பழம் உருவாக்கலாம். நான் அந்த ஓட்டும் வித்தையை வெவ்வேறு கிளைகளில் செய்ய எங்கள் 22 ஏக்கர் பண்ணையில் வளர்ந்து நிற்கும் பெரிய ராட்சஷ மரத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு கிளையிலும் ஒட்டு வேலை செய்து படிப்படியாக 350 வெவ்வேறு இன மாங்காய்கள் காய்க்கும்படி பல ஆண்டுகளில் செய்து முடித்தேன்.
ஒவ்வொரு ஒட்டு முயற்சியிலும் உடனே வெற்றி கிடைக்கவில்லை. தோல்விகளும், பின்னடைவுகளும் தொடர்ந்தன . பொறுமையாக முயன்றுதான் எனது முயற்சியில் வெற்றி பெற்றேன். அந்த ராட்சத மாமரம் இன்னும் மிகப் பெரிய தாய் மரமாக வளர்ந்து பரவியுள்ளது. அந்த மரத்துக்கு உண்மையான வயது 125. அதில் ஒட்டுமுறை செய்யத் தொடங்கி 65 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது மாம்பழ சீசனிலும் 350 வகையான மாங்காய்கள் காய்க்கின்றன.
ஒட்டு இன மாமரங்களை உருவாக்குவது ஒரே இரவில் நடக்கும் செயல் அல்ல. அபூர்வக் கலப்பின வகையை உருவாக்க, 10 ஆண்டுகள் வரை ஆகலாம். இன்னொரு வகை சிறப்பு மாமரத்தை வளர்த்தெடுக்க 12 ஆண்டுகள் தேவைப்பட்டது.
மாம்பழங்களைச் சுற்றி எனது வாழ்க்கையை , குடும்பத்துக்கான பொருளாதாரத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளேன். மாம்பழங்களின் இனிமை எனது வாழ்க்கையிலும் கலந்துள்ளது. எனது புதுமையான அணுகுமுறை எனக்கு தேசிய, சர்வதேச அங்கீகாரத்தை அளித்ததோடு, பத்மஸ்ரீ விருதும் எனக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் தோட்டக்கலை நிபுணர்களில் ஒருவராக, படிக்காத என்னை உயர்த்தியுள்ளது. வாழ்நாளில் நான் எத்தனை மரங்களை வளர்த்திருக்கிறேன் என்று கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. தாவர ஆர்வலர்கள் என்னை "சுயம்பு'வாகப் பார்க்கிறார்கள். "மாமர விஞ்ஞானி' என்று அழைக்கிறார்கள்,
மாமரங்கள்தான் எனக்கு போதி மரங்கள். என் ஆசிரியர்கள். நான் இன்னும் மாணவனாகத்தான் இருக்கிறேன். மாமரங்களைப் பராமரிப்பதில், பிளஸ் 2 வரை படித்த என் மகன் உதவிக்கு இருக்கிறார்.
புது ரக மாம்பழம் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும், இன்னொரு மாம்பழத்துக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரையும் வைத்துள்ளேன்.
எனது மாமரப்பண்ணை வாழும் பசுமை ஆய்வகமாக மாறியுள்ளது. பார்வையாளர்கள் தினமும் பண்ணையை பார்வையிட வந்து செல்கின்றனர்'' என்கிறார் கலிமுல்லா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.