'ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற மலையாளப் படம் அண்மையில் வெளியானது. இதில் இடம்பெற்றிருப்பதைப் போல், கல்வி நிலையங்களின் வகுப்பறைகளில் 'கடைசி பெஞ்ச்' என்பது இல்லாமல் 'ப' வடிவில் இருக்கைகளைப் போட்டு, கல்வி கற்பிக்கும் முறை கேரளம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு கல்வி நிலையங்களும் செயல்படுத்தத் தொடங்கி உள்ளன. தமிழ்நாட்டிலும் பின்பற்றப்பட உள்ளது.
திருவனந்தபுரத்தில் வசிக்கும் முப்பத்து ஒரு வயதான இயக்குநருமான வினேஷ் விஸ்வநாத், தனது முதல் படத்திலேயே கல்வித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அவருடன் ஒர் சந்திப்பு:
நீங்கள் திரைத்துறை சார்ந்த குடும்பப் பின்னணி கொண்டவரா?
என் அப்பாவுக்கு அந்தமானில் வேலை. அம்மா குடும்பத் தலைவி. தம்பி பள்ளி ஆசிரியர். மனைவி செயற்கை ஆபரண நகை வியாபாரம் செய்துவருகிறார். எங்கள் குடும்பத்தில் நான்தான் திரையுலகில் அடியெடுத்து வைத்த முதல் நபர். கல்லூரிப் படிக்கும்போதே நான் எடுத்த நான்கு குறும்படங்களும் பாராட்டுகள் பெற்றன.
திரைப்பிரவேசம் எப்படி?
ஒரு குறும்படத்தின் லிங்க்கை என் முகநூல் நண்பரான இயக்குநர் பிரசோப் விஜயனுக்கு அனுப்பி வைத்தேன். அவர் அதைப் பார்த்துவிட்டு, என்னை தனது உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொண்டார். 'அன்வேஷனம்' என்ற படத்தில் பணியாற்றிய அனுபவத்தில் எனக்கு படம் இயக்கும் ஆர்வம் வந்தது.
'ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்' படத்தின் துவக்கப் புள்ளி எது?
இயக்குநர் மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' படத்தால் மிகவும் கவரப்பட்டேன். சிறுவர்களைப் பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த அந்தக் கதையைப் போல நானும் ஒரு திரைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன்.
மூன்றாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் பள்ளி வகுப்பறையில் ஒன்றன்பின் ஒன்றாக இல்லாமல் அரை வட்ட வடிவில் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் பள்ளி நாள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது பிறந்ததுதான் 'ஸ்தனார்த்தி ஸ்ரீகுட்டன்' கதை. எனது நண்பர்களோடு சேர்ந்து அந்தக் கதையை மெருகூட்டினேன்.
படத்தில் நடிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுத்தது எப்படி?
'படத்தில் மாணவர்கள் தேவை' என விளம்பரம் கொடுத்தேன். சுமார் ஆயிரம் பேர் மின்னஞ்சல் மூலமாக புகைப்படங்களோடு விண்ணப்பித்திருந்தனர். அவர்களிலிருந்து சுமார் 100 பேரைத் நேரில் வரவழைத்து நடிப்புத் தேர்வு நடத்தி, தேர்வு செய்தோம்.
படத்துக்கு வரவேற்பு எப்படி?
படத்தில் சற்றே கூச்ச சுபாவம் கொண்ட ஸ்ரீகுட்டன், பின்னர் மாணவர் தேர்தலில் களமிறங்குகிறான். படத்தில் கலகலப்பான பிரிதிவிராஜ் என்ற கேரக்டரும் உண்டு. ஸ்ரீரங்க் ஷைன் என்ற மாணவனை ஸ்ரீகுட்டனாகவும், கார்த்திக் என்ற மாணவனை பிரிதிவிராஜாகவும் நடிக்க வைத்தோம். திரையரங்குகளில் வெளியானபோது எனக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. அடுத்து ஓ.டி.டி.தளத்தில் வெளியானபோது அமோக வரவேற்பு கிடைத்து.
மறக்க முடியாத பாராட்டு?
இந்தத் திரைப்படத்தைப் பார்த்த தனி ஒருத்தியாக தன் மகனை வளர்க்கும் ஒரு தாய் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவர், 'என் மகனை வகுப்பில் இன்னொரு மாணவன் கேலி செய்து துன்புறுத்திவந்தான். என் மகன் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தான். உங்கள் படத்தைப் பார்த்துவிட்டு, மனம் விட்டு சிரித்து, மகிழ்ந்தான். அவனிடம் இப்போது நல்ல மாற்றம் தெரிகிறது. தன்னை துன்புறுத்திய மாணவனை மன்னிக்கவும் தயாராகிவிட்டான்' என்று கூறினார்.
படத்தில் வரும் 'ப' வடிவ இருக்கைகள் கொண்ட வகுப்பறையை பல பள்ளிகளில் கடைபிடிப்பதாக வரும் செய்திகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் அதற்காக பெருமைப்படுகிறேன். இதற்கும் மேலாக இந்தப் படத்தில் சக்ரவர்த்தி என்ற ஆசிரியர் கதாபாத்திரத்தின் மூலமாக இன்னொரு முக்கியமான செய்தியை சொல்லி இருக்கிறேன்.
சாதி, மதம் தொடங்கி கற்றல்திறன் வரை எந்த ஒன்றையும் வைத்து மாணவர்களிடம் வேறுபாடு காணாதீர்கள். ஒரு மாணவன் புத்திசாலி இல்லை என்றால், அவனுக்கு முத்திரை குத்தி , அவன் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் ஒரு ஆசிரியர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அந்த சக்ரபாணி என்ற ஆசிரியர்.
அன்றே 'ப' வடிவ முறை...
'ப' வடிவ முறையில் மாணவர்கள் அமர வைக்கப்படுவது, 2021-22 கல்வியாண்டிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு ஆசிரியர் அல்லாபக்ஷ் ரஷித் அறிமுகம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் பேசியபோது:
'திருவண்ணாமலை எனது சொந்த ஊர். அங்கே பள்ளிப் படிப்பையும், இளங்கலை வரலாறை திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியிலும், வேலூர் ஊரிசு கல்லூரியில் எம்.ஏ. வரலாறும் படித்தேன். பின்னர், 2004 முதல் இக்னோ பல்கலைக்கழகத்தில் பி.எட். படித்தேன். பின்னர், திருவலம் பூர்ண வித்யாலயா, மேல் விஷாரம் கே.ஹெச். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினேன்.
2014-இல் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட வன்னிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி கிடைத்தது. தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணி கிடைக்க, அங்கு 7 ஆண்டுகள் பணியில் இருந்தேன். இடையில் தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓரிரு ஆண்டுகள் பணி செய்து, மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தேன்.
2021-22-ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூர் அரசுப் பள்ளியில் எனது வகுப்பறையில், பிளஸ் 1, 2 வரலாற்று பிரிவில் 'ப' வடிவ முறையில்தான் மாணவர்களை அமர வைத்தேன். இதன்வாயிலாக, அனைத்து மாணவர்களும் ஒரு சேர பாடங்களை சரியான முறையில் கற்க முடிந்தது. இதற்கு அப்போதைய தலைமை ஆசிரியர் லிங்கேஸ்வரனும், சக ஆசிரியர்களும் ஆதரவு அளித்தனர். கேரள அரசும், தற்போது தமிழ்நாடு அரசும் இந்த முறையைப் பின்பற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது' என்கிறார் அல்லாபக்ஷ் ரஷித்.
-தி.நந்தகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.